சென்னை மற்றும் தென் மாவட்டப் பயணிகளின் மிக முக்கிய நுழைவாயிலாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலையத்தின் உள்கட்டமைப்பை நவீனப்படுத்தவும், பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தெற்கு ரயில்வே புதிய திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தக் கோரி மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் அவர்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவான பணிகள் குறித்த விபரங்களைக் கடிதம் மூலம் பகிர்ந்துள்ளார்.


கூடுதல் லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள் (நகரும் படிக்கட்டுகள்)
தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது 6 நகரும் படிக்கட்டுகளும் (Escalators), ஒரு மின்தூக்கியும் (Lift) பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக இந்த வசதிகள் கணிசமாக அதிகரிக்கப்படவுள்ளன. இதனுடன் இணைக்கும் வகையில் கூடுதலாக 4 புதிய மின்தூக்கிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் 2027-க்குள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும். அதேபோன்று நிலையத்தின் அனைத்து நடைமேடைகளையும் (Platforms) இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன நடைமேம்பாலத்தில், கூடுதலாக 9 மின்தூக்கிகள் மற்றும் 10 நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி மிக அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

கிழக்கு மற்றும் மேற்கு நுழைவு வாயில்கள் மேம்பாடு
கிழக்கு நுழைவு வாயில்: புதிய நடைமேம்பாலத்தை இணைக்கும் வகையில் புதிய நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பாதையில் போதுமான மின்விளக்கு வசதிகளும், பேருந்து நிலையம் வரை பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில் பிரத்யேக நடைபாதைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவடையும். ஜி.எஸ்.டி சாலை வழியாக வரும் பயணிகளின் வசதிக்காக, தடையற்ற போக்குவரத்து மற்றும் சொகுசான வாகன இறக்கப் பகுதி (Drop-off Zone) கொண்ட புதிய நுழைவாயில் மற்றும் வாகன நிறுத்துமிடம் (Parking) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பழைய நிலையக் கட்டிடத்தையும் புதிய நடைமேம்பாலத்தையும் இணைக்கும் வகையில் புதிய நடைபாதையும் இதில் அமைக்கப்படவுள்ளது. தற்போது நடைமேடை 5 முதல் 10 வரை உள்ள பகுதிகளில், முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் அவசரப் பயன்பாட்டிற்காக 3 மின்சார வாகனங்கள் (Battery Operated Cars) இயக்கப்பட்டு வருகின்றன.

சு. வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்
தெற்கு ரயில்வேயின் இந்த உள்கட்டமைப்பு நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள மதுரை எம்பி சு. வெங்கடேசன், “தாம்பரம் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய பணிகள் அனைத்தும் திட்டமிட்ட காலத்திற்குள் முடிவடைய வேண்டும். பணிகளில் காலதாமதம் ஏற்பட்டால் அது தினசரி பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், ரயில்வே நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
