Homeசெய்திகள்சென்னை​சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!

​சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: 2026 சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த இலங்கைத் தம்பதி கைது!

-

- Advertisement -

கடந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போலி ஆவணங்கள் மூலம் வாக்களித்த இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை

we-r-hiring

​ஆவண சோதனையில் சிக்கிய வாக்காளர் அட்டை
​இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேரம்பலம் குணேஸ்வரன் (69) மற்றும் அவரது மனைவி நகுலாம்பிகை (60) ஆகிய இருவரும் நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து இலங்கை செல்வதற்காக விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது அவர்களது பயண ஆவணங்களை விமான நிலைய குடியேற்றத்துறை (Immigration) அதிகாரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். அந்த சோதனையின் போது, அவர்களிடம் இந்திய வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) இருப்பது கண்டறியப்பட்டது.

வாக்குமூலத்தால் வெளிவந்த உண்மை
​இதனையடுத்து குடியேற்றத்துறை அதிகாரிகள், “நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் வாக்களித்தீர்களா?” என தம்பதியிடம் விசாரணை நடத்தினர். அதற்கு அவர்கள், சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள சாரதா வித்யாலயா மகளிர் பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ததாக ஒப்புக்கொண்டனர்.
​வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் சட்டவிரோதமாக இந்திய வாக்காளர் அட்டை பெற்று வாக்களித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இருவரையும் உடனடியாகப் பிடித்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
​மாம்பலம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பேரம்பலம் குணேஸ்வரன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தியாகராய நகர் பகுதியில் தங்கி நகை வியாபாரம், நகை அடகு கடை வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ​இதையடுத்து, போலி ஆவணங்கள் தயாரித்து தேர்தலில் முறைகேடு செய்ததாக இருவர் மீதும் தனித்தனியாக 4 கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்:

பாரதிய நியாய சன்ஹிதா (BNS 172): தேர்தல் மோசடி குற்றம், BNS 318(2): ஏமாற்றுதல், BNS 337: வாக்காளர் அட்டை போன்ற அரசு ஆவணங்களை போலியாக உருவாக்குதல், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (பிரிவு 31): போலி பிரகடனம் செய்தல் ​வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இலங்கை தம்பதியினர் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

MUST READ