“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து சென்ற ஒருவரை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவர் ஒருவரைத் தவிர வேறு யாரும் விசிகவிலிருந்து செல்லவில்லை” எனத் தருமபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பகிரங்கமாகப் பேசியுள்ளார்.

தருமபுரியில் நடைபெற்ற விசிக மாநில அமைப்புச் செயலாளர் கோவிந்தசாமி இல்லத் திருமண விழாவிற்குத் தலைமை தாங்கி, மணமக்களை வாழ்த்திப் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பல்வேறு அதிரடி உண்மைகளை மேடையில் வெளிப்படுத்தினார்.

அரூர் தொகுதியைத் தராத திமுக – கூட்டணியின் விரிசலைத் தவிர்க்கவே உடன்பாடு
மேடையில் திருமாவளவன் பேசியதாவது:
”கடந்த 2021 மற்றும் அண்மையில் முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல்களில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் (தனி) தொகுதியை விசிகவிற்கு ஒதுக்குமாறு நாங்கள் மிகவும் வலியுறுத்திக் கேட்டோம். கடலூர் மாவட்டத்தைப் போலவே தருமபுரியும் விசிகவின் கோட்டை என்பதைச் சுட்டிக்காட்டி, அரூர் தொகுதியை விடாமல் கேட்டோம். ஆனால், திமுக அதனை விட்டுத்தர முன்வரவில்லை. இதனால் மனம் கசந்தாலும், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அப்போது ஒப்புக்கொண்டோம்.
இந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் போது கூட, முன்னனித் தோழர்களுடன் சென்று திமுக குழுவிடம் அரூர் தொகுதியின் வாக்கு விழுக்காட்டைக் குறிப்பிட்டுப் பேசினோம். ஆனால், திமுகவோ விசிகவின் பேராதரவோடு தங்களது வேட்பாளரே அங்கு நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால், வேறு வழியின்றி அரூர் தொகுதியை விடுத்து அரக்கோணத்தைப் பெற்றுக் கொண்டோம்.”
பனையூர் பாபு திமுகவில் இணைந்தது ஏன்? – பின்னணியை விளக்கிய திருமாவளவன்
கூட்டணியில் குறைந்த தொகுதிகள் கிடைத்ததால், ஏற்கனவே இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியவில்லை என்று குறிப்பிட்ட திருமாவளவன், முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்தது குறித்து விளக்கமளித்தார்.
”வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் ஒருவர் ஏமாற்றத்தில் இருப்பார் என்பதும், நாம் தொலைபேசியில் அழைத்தாலும் பேச மாட்டார் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் நான் அவரை அழைக்கவில்லை.
ஆனால், நான் ஆளூர் ஷாநவாஸை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றேன். தன்னிடம் பேசாமல், ஆளூர் ஷாநவாஸிடம் பேச முயற்சிக்கிறார் என்ற வருத்தம் கூட அவருக்கு இருந்திருக்கலாம். நான் ஒருபோதும் கட்சியிலிருந்து யாரையும் வெளியேற்ற நினைத்ததில்லை. விசிகவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்றும், அவர் செல்கிறார், இவர் செல்கிறார் என்றும் சிலர் பகல் கனவு கண்டார்கள். என்னுடன் கால் நூற்றாண்டுகளாகக் களப்பணியாற்றிய என் தம்பிகள் யாரும் வெளியே செல்லவில்லை. பனையூர் பாபு என்ற ஒரு தம்பி மட்டும்தான் தற்போது வெளியே சென்றுள்ளார்” என்றார்.
விசிகவை பலவீனப்படுத்த நினைக்கும் திமுக
பனையூர் பாபுவை திமுகவில் இணைத்துக் கொண்டது குறித்து திமுகவின் அணுகுமுறையைக் கடுமையாகச் சாடிப் பேசிய திருமாவளவன்:
”ஒருவர் மாற்றுக்கட்சியிலிருந்து நம்மிடம் வருகிறார் என்றால், அவரிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ‘திருமாவளவன் எங்களுடன் நீண்ட காலமாகப் பயணிப்பவர், நம்பகத்தன்மை கொண்டவர். அந்த இயக்கத்தை நாங்கள் பலவீனப்படுத்த மாட்டோம். மேலும் விசிக, தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே நீங்கள் எங்கள் கட்சிக்கு வர வேண்டாம், வேறு எங்கும் செல்லுங்கள்’ என்று திமுக சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால், இனி விசிகவோடு உறவு வேண்டாம் என்ற நோக்கிலும், விசிகவை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற எண்ணத்திலும்தான் அவரைத் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர். ஆனால், அவர் ஒருவர் மட்டும்தான் சென்றுள்ளார்; அவரோடு விசிகவிலிருந்து வேறு யாரும் செல்லவில்லை” என்று திருமாவளவன் மிகவும் ஆவேசமாகப் பேசினார்.
திமுக கூட்டணியில் விசிக நீடித்து வரும் சூழலில், விசிக முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபுவை திமுகவில் இணைத்துக் கொண்டது குறித்துத் திருமாவளவன் தருமபுரியில் இவ்வாறு வெளிப்படையாகக் குற்றம் சாட்டிப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
