“தமிழகத்தில் தற்போதைய ஆட்சி இன்னும் 6 மாத காலத்திற்கு மேல் நீடிக்காது; அதன் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்” என்று முன்னாள் அமைச்சரும், திமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா சிறப்புரையாற்றினார்.

விஜய்யும் எம்.ஜி.ஆரும் ஒன்றா? அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி!
கூட்டத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) அரசை கடுமையாக விமர்சித்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது, “திராவிட முன்னேற்றக் கழகத்தை யாராலும் தொட்டுப் பார்க்க முடியாது. நம்மோடு சேர்ந்தவர்கள் விட்டுக் கொடுத்ததால்தான் தவெகவினர் ஆட்சியைத் தக்க வைத்துள்ளனர். ஆனால், ஏதோ தாங்கள்தான் எல்லாவற்றையும் சாதித்தது போல கொக்கரிக்கிறார்கள். கழக நிர்வாகிகளைக் கைது செய்து மிரட்டிப் பார்க்கிறார்கள். இவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்திருக்கிறார்களா?
எம்.ஜி.ஆரைத் தங்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எம்.ஜி.ஆரும் விஜய்யும் ஒன்றா? எம்.ஜி.ஆர் திமுகவில் கடுமையாக உழைத்து, எம்.ஜி.ஆர் மன்றத்தை உருவாக்கியவர். சினிமாவில் நடிக்கும்போது விஜய், அரசியலுக்கு வந்ததும் ஜோசப் விஜய். திருச்சியில் தேவாலயத்தில் முட்டிப் போட்டு நடப்பது, எம்.ஜி.ஆர் போலச் செய்வதால் மட்டுமே எவரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. தற்போது விஜய் ஆட்சி நடத்தவில்லை, லாட்டரி வியாபாரி ஆதவ் அர்ஜுனாதான் ஆட்சியை நடத்துகிறார். நான் சவால் விட்டுச் சொல்கிறேன், இன்னும் 6 மாத காலத்திற்குள் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருவார். திருச்சி சிவா போன்றவர்கள் மத்தியில் அமைச்சர்களாக அமர்வார்கள். அந்த காலம் வரும்போது, சினிமாவில் நடிக்கும்போது முதல்வர் செய்த தவறுகள் அனைத்தும் வெளியே வரும்.
’மந்திரியாவது கிந்திரியாவது…’ – அனிதா ராதாகிருஷ்ணன் ஓப்பன் டாக்!
என்னைச் சிறையில் அடைத்தால் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஜெயலலிதாவே என்னை 37 நாட்கள் திருச்சி சிறையில் அடைத்தார், எதற்கும் அஞ்சாதவர்கள் நாங்கள். செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டு இடைத்தேர்தலில் குழப்பம் விளைவிக்கப் பார்த்தார்கள், அது நடந்ததா? இடைக்காலத்தில் தவெகவினர் என்னிடம் வந்து, ‘நீங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள், உங்களை மந்திரி ஆக்குகிறோம்’ என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதற்கு நான் ‘மந்திரியாவது, கிந்திரியாவது’ என்று கூறி அவர்களின் சலுகைகளை அடியோடு மறுத்துவிட்டேன். ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ லாட்டரி சீட்டு வியாபாரம், கஞ்சா வியாபாரம் செய்வதாகச் சொல்கிறார்கள். அவர் இப்போது எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். தற்போதைய மந்திரி ஒருவர் அரசுப் பள்ளிக்குச் சென்று, பள்ளிச் சிறுவர்களைப் பார்த்து ‘உனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியாதா?’ என்று கேட்கிறார். ஏதோ வானத்தில் இருந்து குதித்தது போல் துள்ளி விளையாடுகிறார்கள். யார் என்ன செய்தாலும் எங்கள் கழகத்தை அசைக்க முடியாது.” இவ்வாறு அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.
பொறுமையாகக் காத்திருக்கிறோம்: எம்பி திருச்சி சிவா பேச்சு!
அவரைத் தொடர்ந்து பேசிய நாள்களுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா விடுத்த எச்சரிக்கை பின்வருமாறு, “வெற்றி, தோல்வி என்பது அரசியலில் இயல்பானது. தற்போதைய புதிய முதலமைச்சரின் செயல்பாடுகளும், கருத்துகளும் முதிர்ச்சியாக இல்லை என்பது வேதனை அளிக்கிறது. நமது தலைவர் ஸ்டாலினின் கவலை, நாம் ஆட்சியில் இல்லை என்பது அல்ல; தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் சரியானவர்களாக இல்லை என்பதுதான். தலைவர் ஸ்டாலினின் அரசியல் வயதே 50 ஆண்டுகள் ஆகும். ஆனால், இன்றைய முதலமைச்சருக்கு அரசியல் அனுபவமும் இல்லை, முதிர்ச்சியும் இல்லை. ’ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு’ என்ற பழமொழிக்கு ஏற்ப, திமுக தற்போது பக்குவப்பட்டு, பொறுமையாகக் காத்திருக்கிறது. குடிசையில் இருந்தவர்களைக் கோபுரத்திற்கு உயர்த்தியதே திமுகதான். கோபுரத்தில் இருப்பவனுக்குக் கோபம் வந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. விடியல் பயணம் திட்டத்தின் பெயரை மாற்றியிருக்கிறார்கள். எந்தப் பெயரை மாற்றினாலும் மக்கள் இதயத்தில் இருக்கும் கலைஞர், ஸ்டாலின் பெயர்களை மாற்ற முடியாது. மாலையில் சூரியன் மறையும்போது இனி சூரியனே இல்லை என்று சிலர் நினைப்பார்கள். ஆனால், காலையில் உதயசூரியன் மீண்டும் உதித்து வரும்போது அவர்களுக்கு உண்மை புரியும். தொலைத்த தாயை மகன் தேடி வருவது போல, தளபதி ஸ்டாலினின் தலைமையில் மீண்டும் திமுக ஆட்சி அமைய மக்கள் காத்திருக்கிறார்கள்.” என்று திருச்சி சிவா பேசினார். இப்பொதுக்கூட்டத்தில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தமிழக அரசியலின் ‘மாஸ்டர் பிளான்’: திராவிடக் கோட்டையைத் தகர்க்கும் பாஜகவின் நிழல் யுத்தம்!
