Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் போர்க்களம்.. நாடாளுமன்றம் நோக்கிப் பாய்ந்த இளைஞர் பேரணி.. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு.. பரபரப்பு...

டெல்லியில் போர்க்களம்.. நாடாளுமன்றம் நோக்கிப் பாய்ந்த இளைஞர் பேரணி.. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு.. பரபரப்பு பின்னணி!

-

- Advertisement -

குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற நுழைவுவாயில்கள் அதிரடியாக மூடல். ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுத் துணை ராணுவப் படை குவிப்பு.டெல்லியில் போர்க்களம்.. நாடாளுமன்றம் நோக்கிப் பாய்ந்த இளைஞர் பேரணி.. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு.. பரபரப்பு பின்னணி!

நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்று நடத்திய நாடாளுமன்ற முற்றுகைப் பேரணி புதுடெல்லியில் பெரும் பதற்றத்தையும் போர்க்களச் சூழலையும் உருவாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற இந்தப் பேரணியைக் கலைக்கப் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

we-r-hiring

அனுமதியின்றித் திரண்ட கூட்டம் – தடியடி
நீட் முறைகேடுகளுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்தப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னதாகவே அறிவித்திருந்தது. ஆனால், இந்தப் பேரணிக்குக் காவல்துறையினரிடம் முறையான அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டுப் பாதுகாப்புப் படையினர் சன்சத் மார்க் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறையின் அரணை மீறி முன்னேற முயன்ற கூட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தினர். இதில் காயமடைந்த சில போராட்டக்காரர்களுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டது.

நுழைவுவாயில்கள் மூடல்; இணைய சேவை முடக்கம்
இதனையும் தாண்டிப் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறிய போது, ‘பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா’ மற்றும் நாடாளுமன்றச் சாலை அருகே அவர்கள் மீது அடுத்தடுத்துக் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. போராட்டம் விபரீதமாகத் தீவிரமடைந்ததை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவுவாயில்கள் அதிரடியாக மூடப்பட்டன. மேலும், ஜந்தர் மந்தர் மற்றும் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இணையச் சேவைகளும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டன. மத்திய டெல்லியின் சில பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டு, விகாஸ் மார்க் மற்றும் ஐடிஓ பகுதிகளை டெல்லி காவல் துறை மூடியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரத் துணை ராணுவப் படையினரும் நாடாளுமன்ற வளாகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.டெல்லியில் போர்க்களம்.. நாடாளுமன்றம் நோக்கிப் பாய்ந்த இளைஞர் பேரணி.. கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீச்சு.. பரபரப்பு பின்னணி!

மருத்துவமனையில் இருந்தபடியே சோனம் வாங்சுக் விடுத்த அழைப்பு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் டெல்லி போலீசாரால் அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கிருந்தபடியே தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகிறார். மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “என்னை வலுக்கட்டாயமாகச் சிறை வைத்துள்ளனர்; இது இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். வினாத்தாள் கசிவு உள்ளிட்ட அநீதிகளுக்கு எதிராக இன்று நடைபெறும் நாடாளுமன்றப் பேரணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதன் பின்னணியிலேயே இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லியில் திரண்டதாகத் தெரிகிறது.

அரசுடன் பேச்சுவார்த்தை – உண்ணாவிரதம் வாபஸ்
டெல்லியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர்களான சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அதிகாலையிலேயே தொடர்புகொண்டது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவைச் சந்திக்கச் சென்றுள்ளனர். தங்களது கோரிக்கைகள் மிகவும் தெளிவாக உள்ளதாகச் சவுரவ் தாஸ் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் டிப்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முறைப்படி முடித்துக்கொண்டார். மத்திய அமைச்சருடன் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்பதால், டெல்லியில் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் தள்ளுமுள்ளு: தடையை மீறி திரண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தொண்டர்கள்…

MUST READ