நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள 103 தமிழர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீட்டு தமிழகம் கொண்டு வர, முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வெளியுறவுத் துறை அதிகாரிகள், மறுவாழ்வுத் துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நேபாளத்தில் தற்போதைய கள நிலவரம் மற்றும் மீட்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார்.

ஆன்மீகப் பயணம் சென்ற பக்தர்கள்
சென்னை மற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த முன்னணி டிராவல் ஏஜென்சிகள் மூலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 103 பேர் நேபாளத்திற்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் சென்றுள்ள பகுதிகளில் தொலைத்தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களைத் தொடர்புகொண்டு மீட்கும் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
முதலமைச்சரின் முக்கிய உத்தரவுகள்:
மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பு: நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, மீட்புப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
சிறப்புக் குழு அமைப்பு: நேபாளத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்புக் குழுக்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள தமிழக அரசு சார்பில் தனிச் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
அவசரகால உதவி: பாதிக்கப்பட்ட பயணிகளின் குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்கிடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திடவும் கட்டுப்பாட்டு அறை முழுவீச்சில் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சிக்கியுள்ள 103 தமிழர்களும் எந்தவித பாதிப்பும் இன்றி தாயகம் திரும்பத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்றும், மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.
