தியாக வரலாற்றைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்கிறார் விஜய்– வரலாற்று ஆவணங்களுடன் திமுக விளக்கம்.
நெருக்கடி நிலை (எமர்ஜென்சி) காலத்தில் ‘மிசா’ (MISA) சட்டத்தின் கீழ் திமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில், தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) பரப்பி வரும் குற்றச்சாட்டுகளுக்குத் திமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.

அத்துடன் மிசா சிறைவாசம் தொடர்பான வரலாற்றுப் பூர்வ ஆவணங்களையும் ஆதாரமாக வெளியிட்டுள்ளது.
பொய்யை நம்பி மக்கள் ஏமாறக்கூடாது:
இது தொடர்பாகத் திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தியாகத்தைப் பற்றியும், போராட்ட வரலாற்றைப் பற்றியும் அடிப்படை அறிவே இல்லாத த.வெ.க-வினருக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விளக்க வீடியோவை வெளியிடவில்லை.
மாறாக, அரசியல் ஆதாயத்திற்காகத் த.வெ.க-வினர் திட்டமிட்டுப் பரப்பும் பொய்களை நம்பி பொதுமக்கள் மீண்டும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த விளக்கத்தை அளித்துள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய்க்கு கடும் விமர்சனம்:
த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான விஜயை நேரடியாக விமர்சித்துள்ள திமுக ஐடி விங்:
தந்தையின் தயவாலும் செல்வாக்கினாலும் சினிமாவில் வளர்ந்து வந்த விஜய்க்கு, மிசா கைதிகள் தங்கள் உயிரையும் ரத்தத்தையும் சிந்தி செய்த தியாகத்தின் மதிப்பு எப்படித் தெரியும்? கேமரா முன்னால் கத்தியும், கதறியும் நடித்துப் பழகிய ஒரு நடிகருக்கு, சிறைக்கொடூரங்களின் நிஜமான வலியும் உணர்வும் ஒருபோதும் புரியாது.
கொள்கையற்ற அரசியல்:
உழைப்பாலும், ஈடு இணையற்ற தியாகங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட திமுகவின் போராட்ட வரலாற்றை இருட்டடிப்பு செய்யப் பார்ப்பதாகச் சாடியுள்ள திமுக, எந்தவிதக் கொள்கையோ அல்லது சித்தாந்தமோ இல்லாமல், தியாகிகளை இழிவுபடுத்தித் த.வெ.க மலிவான அரசியல் செய்து வருவதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
சமீபத்தில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய், மிசா கைது குறித்து ஆற்றிய உரை மற்றும் அதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் திமுக வெளியிட்டுள்ள இந்த வரலாற்று ஆவணங்கள் மற்றும் அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
