இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தவெக ஆட்சியின் செயல்பாடுகள் மற்றும் பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக திட்டம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மருத்துவமனையில் டி.ராஜா அனுமதி – கனிமொழி நலம் விசாரிப்பு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா உடல் பரிசோதனைக்காகச் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வரும் நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று (10-09-2026) மருத்துவமனைக்குச் சென்று டி.ராஜாவின் ஆரோக்கியம் குறித்துக் கேட்டறிந்தார்.

“குதிரை பேரம் மூலம் தேவையற்ற இடைத்தேர்தல்” – தவெக அரசு மீது சாடல்
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., “ஜனநாயக முறையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து, குதிரை பேரம் நடத்தி மறுதேர்தல் வரக்கூடிய நிலையைத் தவெக ஆட்சி உருவாக்கியிருக்கிறது. நேர்மையான அரசியலைத் தரப்போவதாக மக்களிடம் கூறியவர்கள் தான் இதைச் செய்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தை விரயமாக்கும் வகையில் இந்த அவசியமற்ற இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலை இவர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே ஒரு கட்சியின் சார்பில் நின்று வெற்றி பெற்றவர்களை வைத்து மீண்டும் ஒரு தேர்தலை உருவாக்கும் போக்கு இங்கு நிலவுகிறது,” என்று குற்றம்சாட்டினார்.
“சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசும் முதல்வர்”
தொடர்ந்து மாநிலத்தின் சட்டஒழுங்கு குறித்துப் பேசிய அவர், “தமிழ்நாடு முழுவதும் கொலைக் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதைப் பற்றி முதல்வர் சட்டமன்றத்தில் பொறுப்பான பதில் சொல்வார் என்று பார்த்தால், அவர் பஞ்ச் டயலாக்குகளைப் பேசி, பழைய கதைகளைக் கூறி இல்லாத பொய்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். மக்களின் பாதுகாப்பைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இந்த அரசு இயங்கி வருகிறது,” என்றார்.
பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டம் – காட்டமான பதில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு அப்பகுதி மீனவர்கள் தெரிவித்து வரும் எதிர்ப்பு குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஆவேசமாகப் பதிலளித்த கனிமொழி, “முதலில் அவர்கள் ஆட்சியை ஒழுங்காக நடத்தட்டும், அதற்குப் பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றிச் சிந்திக்கலாம். அப்படியே இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் கலைஞர் கட்டிய சட்டமன்றக் கட்டடம் (ஓமந்தூரார் வளாகம்) தயார் நிலையில் உள்ளது. தற்போது இயங்கும் மருத்துவமனைக்கு வேறு கட்டடம் கட்டிவிட்டு, ஓமந்தூரார் வளாகத்தையே மீண்டும் சட்டமன்றமாகப் பயன்படுத்தலாம். ஏனெனில் அது சட்டமன்றத்திற்காகவே பிரத்யேகமாகக் கட்டப்பட்ட இடம். மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி இல்லை எனக் கூறும் இந்த அரசு, பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கு அனைத்து வழிகளையும் செய்கிறது,” என்று சாடினார்.
கூடுதல் கொள்ளை தான் மாற்றமா? – ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
