“பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அது எங்களின் வாழ்வாதாரத்தை அழித்து, மீன்பிடி தொழிலையே சமாதி ஆக்குவதற்குச் சமம். கடலோரத்தை நம்பி வாழும் எங்களை இங்கிருந்து துரத்தினால், நாங்கள் அண்ணா நகருக்கா சென்று மீன் பிடிக்க முடியும்?” என்று பட்டினப்பாக்கம் பகுதி மீனவ கிராம மக்கள் தங்கள் கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த பட்டினப்பாக்கம் கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பு, அப்பகுதியில் வாழும் பாரம்பரிய மீனவ மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வாதாரம் பறிபோகும் அபாயம்
இந்த அறிவிப்பு குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவ கிராமப் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலைமுறைகளாக இந்த மண்ணையும் கடலையும் மட்டுமே நம்பி நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். கடலோரப் பகுதியில் பிரம்மாண்டமான அரசு அலுவலகங்களையோ அல்லது தலைமைச் செயலகத்தையோ கட்டினால், எங்களின் படகுகளை நிறுத்துவதற்கும், வலைகளைப் பராமரிப்பதற்கும், மீன்களைக் கரைசேர்ப்பதற்கும் இடமில்லாமல் போய்விடும்.
மாணிக்கம், வைரம் போல நாங்கள் பார்க்கும் மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு எங்களால் வேறு எங்கும் செல்ல முடியாது. மீன் பிடித்து வாழ்க்கை நடத்துற எங்களை இந்த கடலோரத்துல இருந்து துரத்துனா, நாங்க என்ன அண்ணா நகர்லயோ அல்லது நகரின் மையப் பகுதியிலயோ போய் குடியிருக்க முடியுமா? கடலையும் கடற்கரையையும் பிரித்து எங்களால் வாழவே முடியாது,” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
போராட்டம் தீவிரமடையும் என எச்சரிக்கை
மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை சுட்டிக்காட்டிய பொதுமக்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தினர். அரசு உடனடியாக இந்த முடிவைக் கைவிடாவிட்டால், அனைத்து கடலோர மீனவக் கிராம மக்களையும் ஒன்றிணைத்துத் தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகப் பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எச்சரித்துள்ளனர். மீனவ மக்களின் இந்தத் திடீர் எதிர்ப்பால், பட்டினப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
