Homeசெய்திகள்தமிழ்நாடுஜெம் வீரமணி போக்சோ வழக்கு: திமுகவுக்கு எதிரான அவதூறு கருத்துக்கள்; அவதூறு வழக்கு தொடர சென்னை...

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: திமுகவுக்கு எதிரான அவதூறு கருத்துக்கள்; அவதூறு வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!

-

- Advertisement -

ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், திமுக அரசு மீது அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்ய திமுகவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

we-r-hiring

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்காமல் முந்தைய திமுக அரசு தப்பிக்க விட்டுவிட்டதாக தமிழக அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் பேட்டி அளித்திருந்தனர். மேலும், தவெக ஐ.டி. விங்கும் இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் திமுக அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டிருந்தது.

இந்தக் கருத்துக்கள் திமுகவுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, திமுக பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா மற்றும் தவெக தொழில்நுட்பப் பிரிவு ஆகியோருக்கு அவதூறு கருத்துக்களைத் தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

மேலும், ஜெம் வீரமணிக்கு எதிராக கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி புகார் பெறப்பட்ட நிலையில், மறுநாளே எவ்விதத் தாமதமும் இன்றி உடனடி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், உண்மை நிலைக்கு மாறாகத் தகவல்கள் பரப்பப்படுவதாகவும் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக வெளியிடப்பட்ட பதிவுகள் மற்றும் வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர்கள் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டுமெனில் முன் கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், நோட்டீஸ் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்த திமுக தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “அமைச்சர்கள் என்ற முறையில் அல்லாமல், தனி நபர்கள் என்ற முறையிலேயே இவ்வழக்கில் இருவரும் இணைக்கப்பட்டுள்ளனர்” என வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த விவகாரத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்ய இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தாராபுரத்தில் விஜயுடன் மாட்டு வண்டியில் இருந்தவர் யார்? காவல்துறைக்கு ஆர்.எஸ். பாரதி அடுக்கடுக்கான கேள்வி

MUST READ