தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை ரொக்க விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள்

பயிர் சாகுபடிக்குத் தேவையான நிதி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு குறுகிய காலப் பயிர்க்கடனாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடனின் ஒரு பகுதியாக விதைகள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
சங்க உறுப்பினர்களாக இல்லாத விவசாயிகளுக்கும் வாய்ப்பு
கூட்டுறவுச் சங்கங்களில் தற்போது உறுப்பினர்களாக இல்லாத விவசாயிகளும், உடனடியாக உறுப்பினராக இணைந்து குறைந்த வட்டியில் வழங்கப்படும் பயிர்க்கடனைப் பெற்றுப் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விதைகள் மற்றும் இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ரொக்கமாக நேரடியாக வாங்கலாம்
விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில், விதைகள், இரசாயன உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்களை நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையான MRP-க்கு மிகாமல் ரொக்கமாக வாங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி பரப்பு மற்றும் நில ஆவணங்களின் அடிப்படையில் தேவையான விதைகள் மற்றும் உரங்களை ரொக்கமாகச் செலுத்தி நேரடியாக வாங்கிப் பயன்பெறலாம்.
தரமான விதைகள், உரங்களைப் பெறலாம்
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தரமான விதைகள் மற்றும் உரங்களைப் பெற்றுக்கொள்ளும் இந்த வாய்ப்பை தமிழக விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூட்டுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதன் மூலம் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் மட்டுமின்றி, உறுப்பினர்களாக இல்லாத விவசாயிகளும் தங்களது சாகுபடித் தேவைகளுக்கு ஏற்ப விதைகள் மற்றும் உரங்களைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்வர் ஜோசப் விஜய் சாமி தரிசனம்
