வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை – குற்றவாளி கைது
ஆவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடித்த பலே கொள்ளையனை கரூரில் கைது. அவனிடம் 57 சவரன் நகை பறிமுதல்.


ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சோழம்பேடு கண்ணன் தியேட்டர் அருகே 8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் முதல் தளத்தில் ஈ.எஸ். ஐ., மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் முருகத்தாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10ம் தேதி சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று இருந்தார்.
அவர் வீட்டிற்கு வந்து பார்த்தப்பொழுது வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை கொள்ளை போயிருந்தது. உடனடியாக செவிலியர் முருகத்தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல்துறையினர் நான்கு தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் புதிதாக வந்து சென்ற செல்போன் சிக்னலை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் கருவூர் பகுதியில் செல்போன் சிக்னல் காட்டியதை அறிந்த தனிப்படையினர் விரைந்து சென்று கரூரில் பதுங்கி இருந்த பழைய குற்றவாளி ஓட்டை பாலுவை கைது செய்தனர்.

அவன் பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் தெரியவந்தது. அவனை காவல்துறையினர் சென்னை அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் பல நாட்கள் சிறையில் இருந்து வெளியே வந்து திருமுல்லைவாயில் பகுதியில் செவிலியர் முருகத்தாய் அவர்களின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததை ஒப்புக்கொண்டான்.
பின்பு அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் பத்தாம் தேதி கொள்ளையடித்த 70 சவரன் நகையில் 57 சவரன் நகைகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவனுக்கு உடந்தையாக இருந்த மற்ற குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.