சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தது. அந்த விமானத்தில் பெரும் அளவு போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர் சுற்றுலாப் பயணி விசாவில் தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வரும்போது அவர் வட மாநிலத்திற்கு செல்லாமல் சென்னைக்கு வந்திருந்துள்ளாா். இதை அடுத்து அந்தப் பயணி மீது சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ட் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பயணியை நிறுத்தி விசாரித்தில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளாா்.
இதையடுத்து அந்தப் பயணியையும் அந்தப் பயணியின் உடைமைகளையும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தியதோடு, அந்த பயணியின் உடைமைகளை சோதித்தனர்.
அந்தப் பயணியின் உடைமைகளுக்குள் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் பாக்கெட்கள் அதிக அளவில் இருந்தன. அதிகாரிகள் அந்த பாக்கெட்டுகளை எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, அந்தப் பாக்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா, மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப் பயணியிடம் இருந்து, சுமார் 10 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த ஹைட்ரோபோனிக் கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.10 கோடி. இதை அடுத்து, அந்த வட மாநில பயணியை சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ஒரு போதை பொருள் கடத்தும் கும்பல் இந்த வட மாநில பயணியை பணம் கொடுத்து தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பி, அவரது மூலம் கஞ்சாவை கடத்த ஏற்பாடு செய்தது தெரியவந்தது. மேலும், சென்னை விமான நிலையத்தில் அந்த கஞ்சாவை வாங்கிக் கொள்ள வந்திருந்த மற்றொரு கடத்தல் ஆசாமியைப் பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதை அடுத்து இந்த வட மாநில பயணியிடம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவை வாங்கிச் செல்ல வந்திருந்த கடத்தல் ஆசாமி யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றவியல் நீதிமன்றங்களாக மாற்றப்படும் ஐகோர்ட்டின் பழைய கட்டிடங்கள்.. வழக்கறிஞர்கள் எதிர்ப்பு..!!


