திரு.வி.க நகர் பகுதியில் வெளிநாடு சென்றவரின் வீட்டில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பட்டு புடவைகள் மற்றும் வெள்ளி பூஜைப்பொருட்கள் போன்றவைகளை திருடிய 2 நபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.
சென்னை, பெரம்பூர், சாந்தி நகர் பகுதியில் பிரதீப்குமார்(66), த/பெ.சீதாரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஜுலை மாதம் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 16.10.2025 அன்று பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் மேற்படி பிரதீப்குமாரை தொடர்பு கொண்டு வீட்டின் மாடியில் இரும்பு கேட்டு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். உடனே பிரதீப்குமார், குரோம்பேட்டை பகுதியில் வசித்து வரும் அவரது சகோதரர் அசோக் தாமஸிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடனே அசோக்தாமஸ், தம்பியின் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் மாடி கதவும், கிரில் கேட்டும் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்து டிவி, லேப்டாப், கேமரா, ஸ்பீக்கர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வெள்ளியிலான பூஜைபொருட்கள் மற்றும் பட்டு புடவைகள் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து அசோக் தாமஸ்(68), த/பெ.சீதாரமணன் என்பவர் K-9 திரு.வி.க நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். K-9 திரு.வி.க நகர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய 1.சிவா (எ) சைனா(26), அம்பேத்கர் நகர், சென்னை, 2. சாய்லு உசேன் (26), (ஆட்டோ ஓட்டுநர்) ஆண்டாள்குப்பம், அய்யா கோயில், சென்னை ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து டிவி, ஸ்பீக்கர், பட்டுப் புடவைகள் மீட்கப்பட்டது.

மேலும் வெள்ளிப்பொருட்களை அடகு வைத்து, கேமரா, லேப்டாப்பை விற்பனை செய்து பணம் பெற்றுள்ளது தெரியவந்ததின் பேரில் அடகு கடையிலிருந்து 200 கிராம் வெள்ளியிலான பூஜை பொருட்கள் மீட்கப்பட்டது. விசாரணையில் எதிரிகள் இருவரும் சேர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மேற்படி பிரதீப்குமார் வீட்டின் மாடி கிரில் கேட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்து திருடியுள்ளதும், சிவா (எ) சைனா மீது ஏற்கெனவே 5 குற்ற வழக்குகளும், சாய்லு உசேன் மீது 1 குற்ற வழக்கு உள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நேற்று (24.10.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.


