ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம் தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ZPE ATM என்ற தனியார் நிறுவனம், ஏ.டி.எம் மையம் உரிமம் பெற முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில் இருந்து விளம்பரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்தால் ஏ.டி.எம் இயந்திரம் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். ஏ.டி.எம் பயன்பாட்டிற்கு ஏற்ப கமிசன் வழங்கப்படும் என விளம்பரம் செய்துள்ளனர்.
மேலும் பண பரிவர்த்தனைகள் செய்யும் லாபத்தில் 60 சதவீதம் நிறுவனத்திற்கும், 40 சதவீதம் பயனாளிக்கும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதை நம்பி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் லட்சக்கணத்தில் பணத்தை கட்டி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். வைப்பு தொகையாக ரூ.2 லட்சம் பெற்று கொண்டு பத்திரத்தில் பதிவு செய்து கொடுத்துள்ளனர். இதில் பணம் கட்டிய சிலருக்கு ஏ.டி.எம் இயந்திரத்தை கொடுத்துள்ளனர். அவ்வாறு கொடுத்த ஏ.டி.எம் இயந்திரங்களும் ஒரு வாரம் மட்டுமே வேலை செய்துள்ளது. அதன் பின் பணம் நிரப்பவும் ஆட்கள் வரவில்லை. இதில் சிலர் பணத்தை முதலீடு செய்து பல மாதங்களாக காத்திருந்தும் இயந்திரமும் கொடுக்காமல், பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சுமார் 76 பேர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும், உரிமையாளர் துரைசாமி, ரம்யா துரைசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய தனியார் நிறுவன உரிமையாளரான ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி, மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பூட்டிய வீட்டின் கிரில் கேட்டை உடைத்து திருடிய நபர்கள் கைது…


