சென்னை-மங்களூர் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் பயணம் செய்ய முயன்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனப் பொறியாளரின் விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது.
அவரிடமிருந்து ஜிபிஎஸ் கருவியைப் பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், பயணியையும் மேலதிக விசாரணைக்காக சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆகாஷ் (33) என்ற பொறியாளர், இன்று காலை சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை உள்நாட்டு விமான முனையத்திற்கு வந்திருந்தார்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பாகப் பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேனர் மூலம் சோதனை செய்தனர். அப்போது ஆகாஷின் உடைமைகளில் விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத பொருள் இருப்பது ஸ்கேனில் தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடைமைகளைத் தனியாக எடுத்துச் சோதனை செய்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது தனது உடைமைகளில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் இல்லை என்றும், தான் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருவதாகவும் ஆகாஷ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவரது உடைமைகளில் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தக் கருவியைப் பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், ஆகாஷின் மங்களூர் விமானப் பயணத்தையும் ரத்து செய்தனர்.
தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவி மற்றும் பயணி ஆகாஷ் ஆகிய இருவரையும் மேலதிக விசாரணைக்காக சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவியுடன் விமானத்தில் பயணிக்க முயன்ற பொறியாளரின் பயணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
