BLM நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் நிறுவனம் ரூ.5,000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என BLM நிறுவனத்தின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், BLM நிறுவனத்தில் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்தார்.
மேலும், தங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட நவீன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே தற்போது இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.
கோழிக்கோடு குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அலுவலக நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே நவீன் புகார் அளித்ததாகவும், பின்னர் அந்தப் புகாரைத் திரும்பப் பெறுவதாக நவீன் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாமல் கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து கடந்த வாரம் கைது நடவடிக்கை மேற்கொண்டதாகவும், பின்னர் பிரேம்குமார் ஜாமினில் வெளியே வந்துள்ளதாகவும் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், BLM நிறுவனம் ரூ.5,000 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்றும், நிறுவனத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, BLM நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்டமாக வெளியாகும் தகவல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
