நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தை இயக்குநர் அட்லி வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தப் படம் வெறும் திரைப்படம் மட்டுமல்ல; ஒரு அசாதாரணமான சினிமா அனுபவம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் நவம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த இயக்குநர் அட்லி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவினரைப் பாராட்டி நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என்ன ஒரு தொலைநோக்குப் பார்வை! என்ன ஒரு உருவாக்கம்! அசாதாரணமான சினிமா அனுபவம்! ‘ராமாயணம்’ உலக அரங்கில் இந்திய சினிமாவை பெருமையுடன் உயர்த்தி நிறுத்துகிறது. பிரம்மாண்டமான காட்சிகளைக் கொண்டிருந்தாலும், நமது கலாசாரம் மற்றும் உணர்வுகளின் வேர்களை அழகாகப் பற்றிக்கொண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தப் படம் பல தலைமுறைகளாலும் கொண்டாடப்படும் காலத்தால் அழியாத படைப்பாக இருக்கும் என்றும், தனது மகன் மற்றும் மகளுடன் குடும்பமாக மீண்டும் பார்த்து மகிழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
படத்தில் நடித்துள்ள ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், ஷோபனா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பையும் அட்லி பாராட்டியுள்ளார். குறிப்பாக, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோரின் இசை மாயாஜாலத்தையும், பிரம்மாண்டமான காட்சிகளை உருவாக்கிய DNEG நிறுவனத்தின் தொழில்நுட்பப் பணிகளையும் வெகுவாகப் புகழ்ந்துள்ளார்.
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரியின் உழைப்பு, பணிவு, படைப்பாற்றல் ஆகியவை இந்திய சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும் அட்லி தெரிவித்துள்ளார். திரைக்கதை எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவனுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, இந்தியாவின் கதைகள், கலாசாரம் மற்றும் உணர்வுகளை உலகமே வியந்து கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமாகப் படைக்க முடியும் என்பதை ‘ராமாயணம்’ நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்ட அட்லி, இப்படத்தின் இரண்டாம் பாகத்தைக் காண ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்துல எனக்கு இன்னும் திருப்தி இல்ல….. இயக்குனர் சுந்தர். சி!
