தமிழகத்திற்குச் சேர வேண்டிய காவிரி நீரை உரிய காலத்தில் முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி நீரை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தின்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோரிக்கை மனுக்களைத் தபால் மூலம் அனுப்பினர்.
கர்நாடக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
தண்ணீர் பற்றாக்குறை காலங்களிலும் நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு முறையாகத் திறந்துவிடுவதில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
காவிரி நீரை வழங்காததால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், விவசாயப் பாசனம் மற்றும் பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்குத் தேவையான நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
சுதந்திரமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரிக்கை
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் தற்போதைய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் போதிய அளவில் செயல்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். எனவே, தன்னாட்சி அதிகாரங்களுடன் செயல்படக்கூடிய சுதந்திரமான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதிக்கும் வகையில் கர்நாடகத்தில் முன்மொழியப்பட்டுள்ள மேகதாது அணைத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றம் தலையிட விவசாயிகள் வலியுறுத்தல்
காவிரி நீர் விவகாரத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்புகளை முழுமையாகச் செயல்படுத்தி, தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத் தர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மனுக்களைத் தபால் மூலம் அனுப்பினர்.
