பழனி கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த தாலி! அதன்பின் நடந்த சம்பவம்
பழனி முருகன் கோவில் உண்டியலில் தவறுதலாக தாலி சங்கிலியை செலுத்திய கேரளா பெண் பக்தருக்கு அறங்காவலர்குழு தலைவர் தனது சொந்த நிதியில் தங்கச் சங்கிலி வழங்கினார்.
பழனி முருகன் கோவிலுக்கு கடந்த 19-ம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கார்த்திகா பள்ளிவீட்டை சேர்ந்த சங்கீதா என்ற பெண் சாமி தரிசனம் செய்ய வருகைதந்தார். சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த துளசி மணி மாலையை கழற்றி காணிக்கை செலுத்த வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினார். அப்போது சங்கிதா கழுத்தில் அணிந்திருந்த ஒன்றேமுக்கால் சவரன் தாலிச் சங்கிலியையும் தவறுதலாக உண்டியலில் செலுத்தினார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சங்கீதா மலைக்கோவில் அலுவலகத்தில் இதுகுறித்து தெரிவித்துள்ளார். மேலும் தனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது என்றும், எனவே தவறுதலாக உண்டியலில் விழுந்த தாலிச்சங்கிலியை எடுத்து தருமாறு கடிதமாக எழுதி கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து சங்கீதாவின் புகாரை பெற்றுக்கொண்ட கோவில் அதிகாரிகள், சங்கீதா தெரிவிப்பது உண்மையா என சோதனை நடத்தினர். இதன்படி திருக்கோவில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் சங்கீதா தெரிவித்தது உண்மை என தெரியவந்தது.
இருப்பினும் இந்து சமய அறநிலையத்துறையின் நிறுவல் பாதுகாப்பு மற்றும் உண்டியல் கணக்கியல் சட்டம் 1975-ன் படி உண்டியலில் விழுந்த எந்த பொருளும் மீண்டும் திரும்பி வழங்கமுடியாது என்பதால் சங்கீதாவின் தாலிச்சங்கிலியை திருப்பி வழங்குவதில் திருக்கோவில் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி கோவில் அறங்காவலர்குழு தலைவர் சந்திரமோகன் சங்கீதாவின் குடும்ப சூழலை மனதில் கொண்டு, தனது சொந்த நிதியில் இருந்து தாலிச்சங்கிலியை வழங்கினார். இதன்படி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான 17.460 கிராம் எடை அளவுடைய தங்கச்சங்கிலியை சங்கிதாவிடம் வழங்கினார். நகையை தவறுதலாக உண்டியலில் செலுத்திய சங்கீதா தனது குடும்பத்தினருடன் திருக்கோவில் தலைமை அலுவலகத்திற்கு வந்து திருக்கோவில் அதிகாரிகள் முன்னிலையில் நகையை பெற்றுக்கொண்டார்.