Homeசெய்திகள்மாவட்டம்செஞ்சி சிறுமி கடத்தல் முயற்சி வழக்கில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது – தீபாவளிக்கு சொந்த...

செஞ்சி சிறுமி கடத்தல் முயற்சி வழக்கில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது – தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தபோது குடிபோதையில் அத்துமீறல்!

-

- Advertisement -

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 7 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்திச் செல்ல முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணியாற்றி வரும் இருவரைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.செஞ்சி சிறுமி கடத்தல் முயற்சி வழக்கில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது – தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தபோது குடிபோதையில் அத்துமீறல்!

சிறுமியை அழைத்துச் செல்ல முயற்சி

we-r-hiring

செஞ்சியை அடுத்த ஜெயங்கொண்டான் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி இரவு, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இருவர், அங்கிருந்த 7 வயது சிறுமியை அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை அசோக்குமார், அன்றைய இரவே செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

நான்கு தனிப்படைகள் அமைத்து விசாரணை

சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களாகத் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடைபெற்றது. அதன் அடிப்படையில், செஞ்சியை அடுத்த வடதாரப் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினரான சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்களாகப் பணிபுரிபவர்கள்

கைது செய்யப்பட்ட இருவரும் சென்னையில் தங்கியிருந்து ஆட்டோ ஓட்டி வந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, குடிபோதையில் சிறுமியிடம் அத்துமீறி அவரை அழைத்துச் செல்ல முயன்றதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏமலதா வழக்கிலும் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

இதற்கிடையே, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி செஞ்சி பகுதியில் ஏமலதா என்ற சிறுமி மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஏற்கெனவே அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி நீங்குவதற்குள், தற்போது மற்றொரு சிறுமியைக் கடத்த முயன்றதாகப் புகார் எழுந்திருப்பது பெற்றோர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.

தற்போதைய வழக்கில் சந்தேக நபர்கள் விரைவாகக் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர். அதேவேளையில், காணாமல் போன சிறுமி ஏமலதா தொடர்பான வழக்கிலும் சிபிசிஐடி போலீசார் விரைந்து விசாரணை நடத்தி, சிறுமியை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மஞ்சள் சந்தையில் புதிய உச்சம் – குவிண்டால் ரூ.24,482-க்கு விற்பனை; மேலும் விலை உயர வாய்ப்பு!

MUST READ