தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நடப்பு சம்பா பருவ நெற்பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு டிசம்பர் 1-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கவிதா அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சராசரியாக 744 மி.மீ. மழை கிடைப்பது இயல்பாகும். ஆனால், நடப்பு ஆண்டில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் வரை 494 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக மழைப்பொழிவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களாலும் நெற்பயிர்கள் பாதிக்கப்படக்கூடும்.
இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் பயிர் காப்பீடு உதவும் என்பதால், விவசாயிகள் அனைவரும் உரிய காலத்திற்குள் காப்பீடு செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏக்கருக்கு ரூ.573 காப்பீட்டுக் கட்டணம்!
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 1436 பசலி ஆண்டின் கீழ் நெல் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள், ஏக்கருக்கு ரூ.573 காப்பீட்டுக் கட்டணமாகச் செலுத்தி பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.
இதற்காக விவசாயிகள் தங்களது பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் இ-சேவை மையங்களை அணுகி நேரடியாகப் பதிவு செய்துகொள்ளலாம்.
658 கிராமங்களில் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு வாய்ப்பு!
திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டின் சிறப்புப் பருவத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 658 கிராமப் பகுதிகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இந்தக் கிராமங்களில் சம்பா நெல் II பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி வரை தங்களது நெற்பயிருக்கு காப்பீடு செய்துகொள்ளலாம்.
பதிவு விவரங்களைச் சரிபார்க்க அறிவுறுத்தல்!
பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகள், பதிவு செய்யும்போது வழங்கப்படும் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக, சாகுபடி செய்யப்பட்ட பயிர், நிலத்தின் விவரங்கள் உள்ளிட்ட பதிவுகளில் தவறுகள் இல்லாதவாறு கவனமாகச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பயிர் காப்பீடு தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு தங்களது பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.
எனவே, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படக்கூடிய பயிர் இழப்புகளிலிருந்து விவசாயிகள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில், டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்துகொள்ளுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா தெரிவித்துள்ளார்.
