தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு துறைகள் சார்பில் முடிக்கப்பட்ட திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்ததுடன், புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.97 கோடியே 33 லட்சம் செலவிலும், நகராட்சி நிர்வாக இயக்குநரகம் சார்பில் ரூ.73 கோடியே 64 லட்சம் செலவிலும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் அமேசான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ.4 கோடி செலவிலும் என மொத்தம் ரூ.174 கோடியே 97 லட்சம் செலவில் முடிக்கப்பட்ட 12 திட்டப் பணிகளை முதலமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.11 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன்படி, சென்னையின் நுழைவுவாயிலான சென்னை விமான நிலையப் பகுதியில் வி.ஐ.பி. பூங்கா அமைக்கவும், கிண்டி கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதி வரை 5.30 கிலோமீட்டர் நீளத்திற்குப் பசுமை வழித்தடம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையை அரசு தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி, ரூ.59 கோடியே 4 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியே 37 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவக் கட்டடம், சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடியே 18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சீமாங்க் பிரிவுக்கான புதிய கட்டடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
இதுதவிர, ஈரோடு மற்றும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பரமத்திவேலூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனைகளில் ரூ.135 கோடியே 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுக் கட்டடங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
உயர்கல்வித் துறை
உயர்கல்வித் துறை சார்பில், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அரசு கலைக் கல்லூரிகளில் ரூ.52 கோடியே 1 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பல்நோக்கு திறந்தவெளி அரங்கம், உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூரில் ரூ.22 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
