சென்னை சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே மெஹந்தி கலைஞரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞரை, 7 நாட்களாக 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அம்பத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மெஹந்தி கலைஞராகப் பணியாற்றி வருகிறார். இவர் தாம்பரத்தில் மெஹந்தி போடுவதற்காக புழல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் சென்றுள்ளார். அப்போது சூரப்பட்டு சுங்கச்சாவடி அருகே அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதுடன், அந்த இளைஞரை தனது செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டே துரத்திச் சென்றுள்ளார். இருப்பினும், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வானகரம் போலீசார் ஜீரோ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். சம்பவம் நடைபெற்ற இடம் அம்பத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், பின்னர் வழக்கு அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, அம்பத்தூர் போலீசார் 7 நாட்களாக 1,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில், புதூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்ற இளைஞரைக் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பேட்டியும் வெளியாகியுள்ளது.
