Homeசெய்திகள்தமிழ்நாடு50 முதல் 60 தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர் – குதிரை பேரத்தில் திமுக ஈடுபட...

50 முதல் 60 தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர் – குதிரை பேரத்தில் திமுக ஈடுபட வேண்டிய அவசியமில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 50 முதல் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருவதாகவும், அவர்கள் தனியாகச் செயல்பட முடிவெடுத்தால் ஆட்சி மாற்றத்திற்கான சூழல் உருவாகலாம் என்றும் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.50 முதல் 60 தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர் – குதிரை பேரத்தில் திமுக ஈடுபட வேண்டிய அவசியமில்லை: முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி!

புதுக்கோட்டை மாலையீடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடுவது தொடர்பாக திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மெய்யநாதன், வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது:

தவெகவைச் சேர்ந்த 50 முதல் 60 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. குதிரை பேரத்தில் திமுக ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. யாரையும் விலைக்கு வாங்கும் அளவுக்குத் திமுகவிடம் பணம் இல்லை. அதேநேரத்தில், மனமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி திமுகவுக்கு உண்டு.

தவெகவைச் சேர்ந்த 60 முதல் 70 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து தனியாக ஆட்சி நடத்தினால் நல்ல ஆட்சியை வழங்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இதுபோன்ற தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை. அதிமுகவினரும் தங்கள் கட்சியில் 30 பேர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறி வருகின்றனர்.

தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருந்து வெளியேறி தனியாக ஒரு அமைப்பை உருவாக்கினால் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பு ஏற்படலாம். தவெகவின் தற்போதைய எண்ணிக்கையில் இருந்து 60 பேர் வெளியேறினால், சட்டமன்றத்தில் புதிய அரசியல் சூழல் உருவாகும்.

அப்போது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். இல்லையெனில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சூழல் உருவாகும். அது சாத்தியமாகாவிட்டால் மீண்டும் தேர்தல் நடைபெறலாம். அத்தகைய தேர்தலில் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

தற்போதைய ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். திமுக ஆட்சியில் 1 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கினோம்.

தற்போது பல லட்சம் பேருக்கு அந்தத் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தகுதி விதிகள் மாற்றப்படுவதன் மூலம் மேலும் பலருக்கு உரிமைத்தொகை கிடைக்காத நிலை ஏற்படலாம். இதனால் மக்களிடையே அதிருப்தி அதிகரிக்கும்.

தவெக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு புகார்கள் வருகின்றன. அதிகாரிகளை மிரட்டுவது, அரசு அலுவலகங்களுக்குச் சென்று குறிப்பிட்ட நபர்களுக்குப் பணிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

நற்பணி மன்றம், ரசிகர் மன்றம், கட்சி எனப் பல்வேறு தரப்பினரும் அதிகாரிகளிடம் சென்று தலையிடுவதால், யாருடைய உத்தரவைப் பின்பற்றுவது என்ற குழப்பம் அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது. இதனால் அதிகாரிகள் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் விமர்சித்தார்.

திமுக மீது தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சிறுமிகள் காணாமல் போகும் சம்பவங்களில் காவல்துறை தடுமாறுவதாகவும் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. தொடர்பான விவகாரத்தில் பெண்கள் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த விசாரணையில் உண்மைகள் வெளிவரும் என நம்புவதாகவும் கூறினார்.

மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் மற்றும் டெல்லியில் உள்ள பணியாளர் நலத்துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திமுக காங்கிரஸ் கட்சியுடன் இனி தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்தக் கட்சியை விட்டு விலகி வந்துவிட்டோம். தமிழ்நாட்டு மக்கள் திமுகவைத் தாங்கிப் பிடிக்கத் தயாராக உள்ளனர். காங்கிரஸ் இல்லாமலேயே எங்களால் பணியாற்ற முடியும்.

எங்களுடைய சுமையை இறக்கி வைத்துவிட்டதால் இனி நிம்மதியாகப் பணியாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது, அவரைப் பற்றிப் பேச வேண்டாம் என்றும், அவரைக் கடுமையாக விமர்சித்தும் கருத்து தெரிவித்தார்.

மேலும், டெல்லிக்குச் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர், மாநிலத்தின் நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்த்ததாகக் கூறிய எஸ்.ரகுபதி, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அருகில் இருந்தபோதும், மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் சார்பில் வலியுறுத்தியிருக்கலாம் என்றார். ஆனால், அது தொடர்பாக எதுவும் பேசாமல் முதலமைச்சர் மௌனமாகத் திரும்பிவிட்டதாக விமர்சித்தார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் பொய்ப் பிரசாரம் செய்கிறார் – துரை வைகோ குற்றச்சாட்டு; ரூ.40 கோடி பேரம், நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்தும் விமர்சனம்!

MUST READ