திருவாரூர் தேரை முதன்முதலில் ஓடவிட்ட கலைஞர் ஆட்சியிலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் ஆயிரக்கணக்கான கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டதே தவிர, ஆட்சியாளர்களைப் பாராட்டும் நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதாவைத் தாக்கல் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் குறித்துப் பேசினார்.
இதுதொடர்பாக திமுகவுடன் மத்திய அரசு இதுவரை ஆலோசனை நடத்தவில்லை என்றும், கடந்த கூட்டத்தொடரிலேயே நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்பதைத் தெளிவாகத் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
புதிய மசோதாவில் என்ன அம்சங்கள் இடம்பெறவுள்ளன என்பது தெரியாமல், திமுகவின் நிலைப்பாட்டை இப்போதே தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசுக்கு கேள்வி
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும், பீப்பிள்ஸ் வாட்ச் அமைப்பும் தலையிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய கனிமொழி, பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரை அழைத்து நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்ட அமைச்சர்களே, தற்போது தங்களைப் பார்த்துக் கேள்வி எழுப்புவதாகக் குற்றம்சாட்டினார்.
சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை மட்டும் வைத்து எப்படிக் கேள்வி கேட்க முடியும் என்று கேட்பவர்கள், நடந்த சம்பவங்கள் குறித்து வெளியில் பேச வேண்டாம் என அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தார். பெண்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை ஏற்பட்டால், இதற்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
காவல் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு நடத்தியது சட்ட மீறல் – கனிமொழி
அமைச்சர் காந்திராஜ் நள்ளிரவில் காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியது மற்றும் பெண் காவலர்களின் செல்போன்களை வாங்கிப் பார்த்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சரைத் தவிர மற்றவர்களுக்கு காவல் நிலையத்திற்குள் சென்று ஆய்வு நடத்த உரிமை இல்லை என்று தெரிவித்தார்.
நீதிபதிகள் அல்லது காவல்துறை அதிகாரிகள் மட்டுமே காவல் நிலையங்களில் ஆய்வு நடத்த முடியும் என்றும், அமைச்சர்களோ சட்டமன்ற உறுப்பினர்களோ உள்ளே சென்று வழக்குப் பதிவேடு அல்லது முதல் தகவல் அறிக்கை நகல்களைப் பார்ப்பதற்குச் சட்டத்தில் உரிமை இல்லை என்றும் கூறினார். இது மிகப்பெரிய சட்ட மீறல் எனக் குற்றம்சாட்டிய அவர், பெண் காவலர்களின் தனிப்பட்ட செல்போன்களை வாங்கிப் பார்ப்பது அத்துமீறல் என்றும் கண்டனம் தெரிவித்தார்.
கோயில்களில் ஆட்சியாளர்களைப் போற்றுவது தவறு
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருக்கு ஆதரவாக அரோகரா கோஷம் எழுப்பப்பட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, பல கோயில்களைக் கட்டிய சோழ மன்னர்கள்கூட தங்களைக் கடவுளாக நினைத்துக்கொண்டு மற்றவர்கள் தங்களைப் போற்றிப் பாட வேண்டும் என்று நினைத்ததில்லை என விமர்சித்தார்.
திருவாரூர் தேரை முதன்முதலில் ஓடவிட்ட கலைஞர் ஆட்சியிலும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் ஆயிரக்கணக்கான கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டதாகவும், மக்களுக்கான வசதிகள் மட்டுமே செய்து கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆட்சியாளர்களைப் பாராட்டும் நடவடிக்கைகள் அப்போது நடைபெறவில்லை என்றும் கூறினார்.
கடவுளுக்கு நிகராக ஒருவரைக் காட்டுவது எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மனதைப் புண்படுத்தக்கூடிய தவறான செயல் என்று குறிப்பிட்ட அவர், எல்லாவற்றுக்கும் வழக்குத் தொடரும் ஆட்சியாளர்கள், இத்தனை பேரின் மனதைப் புண்படுத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.
துரைமுருகன் மீதான வழக்கு – மத்திய அரசுக்கு கண்டனம்
துரைமுருகன் மீது வழக்குத் தொடரப்பட்டிருப்பது குறித்துப் பேசிய கனிமொழி, தங்களை எதிர்த்துப் பணியாற்றும் மற்றும் கேள்வி கேட்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களை மத்திய அரசு தொடர்ந்து சிபிஐ விசாரணை, சோதனைகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்துவதாகக் குற்றம்சாட்டினார். இதுபோன்ற நடவடிக்கைகளால் திமுக எந்த நிலையிலும் பின்வாங்காது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் எதற்குக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்?
தமிழக முதலமைச்சர் எதற்குமே கருத்துத் தெரிவிப்பதில்லை என்று கூறிய கனிமொழி, அவர் எதற்குக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் என்பதைத் தன்னிடம் தெரிவித்தால் தெரிந்துகொள்வதாகக் குறிப்பிட்டார்.
தவெக அமைச்சர்கள் திமுகவினர் ஏன் சில விவகாரங்களில் கருத்துத் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்புவதாகவும், ஆனால் எந்த விவகாரத்திலும் கருத்துத் தெரிவிக்காத முதலமைச்சர் எப்படி இருக்க முடியும் என்றும் அவர் விமர்சித்தார்.
