Homeசெய்திகள்சென்னைபழவேற்காட்டில் 7வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் – கரையோரத்தில் 1,000-க்கும் அதிகமான...

பழவேற்காட்டில் 7வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் – கரையோரத்தில் 1,000-க்கும் அதிகமான படகுகள் நிறுத்தம்; புயல் நிவாரணம் வழங்கக் கோரிக்கை!

-

- Advertisement -

வங்கக்கடலில் நிலவும் புயல் மற்றும் கடல் சீற்றம் காரணமாக, பழவேற்காட்டில் 7வது நாளாக 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் உள்ளனர். இதனால் 1,000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.பழவேற்காட்டில் 7வது நாளாக மீன்பிடிக்கச் செல்லாத 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் – கரையோரத்தில் 1,000-க்கும் அதிகமான படகுகள் நிறுத்தம்; புயல் நிவாரணம் வழங்கக் கோரிக்கை!

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உருவான மூன்று புயல்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள அக்வான் தீவிர புயல், நாளை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் கோபால்பூருக்கு அருகே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக எண்ணூர் துறைமுகத்திலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பழவேற்காட்டில் 7வது நாளாக 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 1,000-க்கும் மேற்பட்ட படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் தங்களது படகுகளையும் மீன்பிடி வலைகளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலில் சுமார் 5 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி ஆர்ப்பரிப்பதால், மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் அடுத்தடுத்து உருவான மூன்று புயல்களால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவப்படும் காலங்களிலும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்துவதாகவும், இதனால் புயல் காலங்கள் மட்டுமின்றி ராக்கெட் ஏவப்படும் காலங்களிலும் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அரிசி, பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், 20 நாட்களுக்கும் மேலாக மீன்பிடித் தொழிலுக்குச் செல்ல முடியாததால் மீனவ கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழவேற்காடு பகுதி மீனவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு உரிய புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்கக் கோரி காசிமேட்டில் கருப்புக்கொடி போராட்டம் – முரசு புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி வேலைநிறுத்தம் அறிவிப்பு!

MUST READ