Homeசெய்திகள்மாவட்டம்பட்டுக்கோட்டை அருகே சுடுகாடு சர்ச்சை: மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல போலீசார் தடை – முள்வேலியை...

பட்டுக்கோட்டை அருகே சுடுகாடு சர்ச்சை: மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல போலீசார் தடை – முள்வேலியை அகற்றி அதே இடத்தில் தகனம் செய்த உறவினர்கள்!

-

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, காலங்காலமாகப் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் சுடுகாட்டில் மூதாட்டியின் உடலைத் தகனம் செய்ய போலீசார் தடை விதித்ததால், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.பட்டுக்கோட்டை அருகே சுடுகாடு சர்ச்சை: மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல போலீசார் தடை – முள்வேலியை அகற்றி அதே இடத்தில் தகனம் செய்த உறவினர்கள்!

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், போலீசாரின் தடையை மீறி மூதாட்டியின் உடலை எடுத்துச் சென்று, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை அகற்றி அதே இடத்தில் தகனம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை தெற்குத் தெருவைச் சேர்ந்த சின்னக்கண்ணு என்ற வைரக்கண்ணு (85), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் எல்லையில் குறிப்பிட்ட சமூகத்தினருக்குச் சொந்தமானதாகவும், காலங்காலமாக அந்தச் சமூகத்தினர் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படும் சுடுகாடு ஒன்று உள்ளது.

தற்போது அந்த இடம் தனிநபரின் ஆக்கிரமிப்பில் தென்னந்தோப்பாக மாற்றப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அந்த இடம் தனக்குச் சொந்தமானது எனக் கூறி சம்பந்தப்பட்ட நபர் அங்கு முள்வேலி அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த மூதாட்டி வைரக்கண்ணுவின் உடலை, தாங்கள் காலங்காலமாகப் பயன்படுத்தி வந்த சுடுகாட்டிலேயே இறுதிச் சடங்குகள் செய்து தகனம் செய்ய வேண்டும் என உறவினர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக மூதாட்டியின் உடலை எடுத்துச் சென்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மாற்று சுடுகாட்டில் உடலைத் தகனம் செய்யுமாறு அறிவுறுத்தினர்.

ஆனால், தங்களது சமூகத்தினர் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த அதே சுடுகாட்டில்தான் இறுதிச் சடங்குகளை நடத்துவோம் என உறவினர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் சாலையில் ஆலடிக்குமுளை பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அகத்தியன், காவல் உதவி கண்காணிப்பாளர் அங்கிதா மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து, போலீசாரின் தடையை மீறி பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்ட உறவினர்கள் மூதாட்டியின் உடலைத் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று உடலைத் தடுத்து நிறுத்த முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து, சர்ச்சைக்குரிய இடத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை உறவினர்கள் அகற்றிவிட்டு, மூதாட்டியின் உடலை அங்கு வைத்து இறுதிச் சடங்குகளை நடத்தினர். பின்னர் அதே இடத்தில் உடலைத் தகனம் செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “நீதி வென்றது” என முழக்கமிட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆற்காடு அருகே 108 ஆம்புலன்சிலேயே அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த கர்ப்பிணி! துரிதமாகச் செயல்பட்ட மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டுகள் குவிவு!

MUST READ