ரயில்வே துறையில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் பெற்றதாக, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கப் பொதுச் செயலாளர் கண்ணையா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கூடைப்பந்து வீரர் யுவராஜ முத்து (50) அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
ரயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை பெறுவதற்காக, அப்போதைய தெற்கு ரயில்வே விளையாட்டு அலுவலர் பிரசன்னா மூலமாக கண்ணையாவை அணுகினேன்.
அவர் மூலம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரூ.3 லட்சம் கொடுத்தேன். என்னைப் போலவே நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலைக்காகப் பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால், ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல், ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் கிளார்க் பணியில் சேர்த்துவிட்டனர். ரயில்வே துறையில் வேலை வாங்கித் தர வேண்டும் அல்லது கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என கடந்த 23 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன்.
இதுதொடர்பாக ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கண்ணையா அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கருதுகிறேன்’’என்று புகாரின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நான் கூடைப்பந்து வீரர். ரயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அப்போதைய தெற்கு ரயில்வே விளையாட்டு அலுவலர் பிரசன்னா மூலமாக எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளர் கண்ணையாவிடம் ரூ.3 லட்சம் கொடுத்தேன்.
ஆனால், ரயில்வே துறையில் வேலை வாங்கித் தராமல், ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சொசைட்டியில் கிளார்க் பணியில் சேர்த்துவிட்டனர். நான் ரயில்வேயில் வேலை பெறுவதற்காகத்தான் பணம் கொடுத்தேன்.
எனவே, வேலை வாங்கித் தர வேண்டும் அல்லது எனது பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என கடந்த 23 ஆண்டுகளாகப் போராடி வருகிறேன்.
ஏற்கெனவே காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தற்போது மீண்டும் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். தவெக அரசின் காவல்துறை எனது புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.
