தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, ஏராளமான ரசிகர்களைத் தனது இசையின் மூலம் கவர்ந்திழுத்தார்.
அதற்குப் பிறகு நடிகராக அவதாரம் எடுத்த அவருக்கு ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பின் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தைத் தானே இயக்கி நடித்திருந்தார். அதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாகக் களமிறங்கிய இவர் தற்போது ‘அப்பா குட்டி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்பா – மகள் பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், கடந்த நவம்பர் 20-ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. நாளுக்கு நாள் இந்தப் படத்திற்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், விஜய் ஆண்டனி ‘அப்பா குட்டி’ படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தன்னால் முடிந்த அனைத்து வித்தியாசமான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் அன்ரிசர்வ் ரயில் பயணம் செய்தது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தின் தெலுங்குப் பதிப்பு வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா ரசிகர்களிடையே படத்தைக் கொண்டு சேர்க்கப் படக்குழு களமிறங்கியுள்ளது.
#VijayAntony is doing everything he can to reach #Appakutty to the audiences..👌 Kudos to his efforts..🤝 https://t.co/rEEyg38voB
— Laxmi Kanth (@iammoviebuff007) November 24, 2026
அதன்படி ஹைதராபாத் வீதிகளில் விஜய் ஆண்டனி மற்றும் ‘அப்பா குட்டி’ படத்தின் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி ஆகியோர், அங்கிருந்த ரோட்டுக் கடையில் சுடச்சுட மிளகாய் பஜ்ஜி போட்டு அசத்தியுள்ளனர். இவர்களைக் கண்டதும் அங்கிருந்த ரசிகர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுப்பதும், வீடியோ எடுப்பதுமாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க விஜய் ஆண்டனி எடுக்கும் இந்த அயராத முயற்சிகளுக்குப் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
