கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்ததாகவும், வாட்ஸ்அப் மூலம் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த அவரிடம், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை அளித்ததாகவும், வாட்ஸ்அப்பில் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறைத் தலைவர் ஐ.ஜி. காமினி விசாரணையைக் கண்காணிப்பார் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், பதவியில் இருப்பவர்கள் என்பதற்காக யாரையும் பாதுகாக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. மேலும், பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்கும் POSH சட்டத்தின்படி உள்ளகப் புகார் குழுவை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
புகார் அளித்த அதிகாரியின் அடையாளம் மற்றும் விசாரணை தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையே, தம்மீதான குற்றச்சாட்டுகளை தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். இந்தப் புகார் அரசியல் உள்நோக்கம் கொண்ட அவதூறு என அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிருஷ்டி சிங் கள்ளக்குறிச்சிக்கு நேரில் வந்து விசாரணையைத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ வழக்கு: இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள் நியமனம்!
