மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
வழக்கமாக ரூ.200 முதல் ரூ.500 வரை மின்கட்டணம் செலுத்தி வந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு தற்போது ரூ.14 ஆயிரத்திற்கும் மேல் மின்கட்டணம் வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவதாக அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாகப் பல வீடுகளுக்கு வழக்கத்தைவிட மூன்று முதல் நான்கு மடங்கு வரை மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், உயர்த்தப்பட்ட கட்டணத்தைச் செலுத்துமாறு மின்வாரிய அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சோழவந்தான் 14-வது வார்டு பகுதியைச் சேர்ந்த செந்தில் ராம் என்பவரது வீட்டில் ஏற்பட்டுள்ள மின்கட்டண உயர்வு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. செந்தில் ராம் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.
அவரது வீட்டில் இரண்டு மின் இணைப்புகள் உள்ளன. இந்த இரண்டு இணைப்புகளுக்கும் கடந்த காலங்களில் சுமார் ரூ.200 முதல் ரூ.500 வரை மட்டுமே மின்கட்டணம் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த சில நாட்களாக 15 நாட்களுக்கும் மேலாக குடும்பத்தினர் வீட்டில் இல்லாமல் வெளியூருக்குச் சென்றிருந்துள்ளனர். இதனால் இந்த முறை மின்கட்டணம் குறைவாகவே வரும் என எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக இரண்டு மின் இணைப்புகளுக்கும் சேர்த்து ரூ.14 ஆயிரத்திற்கும் மேல் கட்டணம் வந்துள்ளது.
அதன்படி, ஒரு மின் இணைப்புக்கு ரூ.5,862-ம், மற்றொரு மின் இணைப்புக்கு ரூ.8,114-ம் என மொத்தம் ரூ.13,976 மின்கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. மாதம் சுமார் ரூ.20 ஆயிரம் மட்டுமே வருமானம் ஈட்டும் சாதாரண கூலித் தொழிலாளியான செந்தில் ராமுக்கு இந்தத் தொகையைச் செலுத்துவது பெரும் சுமையாக மாறியுள்ளது.
மேலும், அவரது இரண்டு மகன்களும் முறையே 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படித்து வருகின்றனர்.
மின்கட்டணத்தை உடனடியாகச் செலுத்தாவிட்டால் மின் இணைப்பைத் துண்டித்து விடுவோம் என மின்வாரிய அதிகாரிகள் கூறுவதாகச் செந்தில் ராம் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டால் தனது மகன்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், இவ்வளவு பெரிய தொகையைக் கட்டினால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இதுபோன்ற நெருக்கடி ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவேன் என்றும் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
செந்தில் ராம் குடும்பம் மட்டுமின்றி, சோழவந்தான் பகுதியில் உள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பலருக்கும் மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மின்கட்டண உயர்வு தொடர்பான புகார்களை மின்வாரியம் உரிய முறையில் விசாரித்து, கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
