தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்களில் சுமார் 70 சதவீதம் பேர் இதுவரை பணிக்குத் திரும்பாததால், கோவையில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களில் கடும் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களைக் குறித்த காலத்திற்குள் முடித்து வழங்க முடியாத நிலையும் உருவாகியுள்ளது. இதன் காரணமாகப் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தொழில் அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வடமாநிலத் தொழிலாளர்களையே பெருமளவில் நம்பியுள்ளன.
குறிப்பாக, ரயில்வே உள்ளிட்ட அரசுத் துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பொருட்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், கம்ப்ரசர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவை தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ரயில்வே பொருட்கள் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர் சுருளிவேல் கூறுகையில், தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊர்களுக்குச் சென்ற வடமாநிலத் தொழிலாளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் மட்டுமே இதுவரை பணிக்குத் திரும்பியுள்ளதாகவும், 70 சதவீதம் பேர் 10 நாட்களைக் கடந்தும் திரும்பாததால் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்பெல்லாம் தொழிலாளர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே சொந்த ஊர்களுக்குச் சென்று வந்த நிலையில், தற்போது அடிக்கடி சொந்த ஊர்களுக்குச் செல்வதால் தொழிற்சாலைகளில் பணிகள் தொய்வடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களில் அதிக ஊதியத்துடன் வேலைவாய்ப்புகள் கிடைப்பதால் தொழிலாளர்கள் அங்கு செல்வதாகவும், உள்ளூர் இளைஞர்கள் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையைத் தேர்வு செய்வதால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்குத் திறமையான பணியாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ரயில்வே உள்ளிட்ட அரசுத் துறைகளுக்கு ஒப்பந்தப்படி பொருட்களை உரிய காலத்தில் தயாரித்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காலதாமதத்திற்காக அபராதம் பிடித்தம் செய்யப்படும் அபாயம் உள்ளதாகவும் சுருளிவேல் தெரிவித்தார்.
மேலும், போதிய தொழிலாளர்கள் இல்லாததால் இயந்திரங்களை முழுமையாக இயக்க முடியவில்லை என்றும், அதே நேரத்தில் மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறினார். இதனால் தொழில் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
இதேபோல், கோவை கம்ப்ரசர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் தலைவர் ரவீந்திரன் கூறுகையில், தங்களது சங்கத்தில் கம்ப்ரசர் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் சுமார் 300 நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், இந்நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
தனது நிறுவனத்தில் தீபாவளி விடுமுறைக்காகச் சொந்த ஊருக்குச் சென்ற நான்கு தொழிலாளர்கள் இன்னும் பணிக்குத் திரும்பவில்லை என்றும், அவர்களில் முக்கியமான வெல்டிங் பணியாளரும் ஒருவர் என்பதால் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேபோல், சங்க உறுப்பினர் ஒருவரின் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனத்தில் விடுமுறைக்குச் சென்ற 22 தொழிலாளர்கள் இதுவரை திரும்பாததால், சி.என்.சி. இயந்திரங்களை இயக்க முடியாமல் உற்பத்திப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஏற்கெனவே பெற்ற ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வடமாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருப்பதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொழிற்சாலைப் பணிகளில் ஆர்வம் காட்டுவதில்லை என்றும் ரவீந்திரன் தெரிவித்தார்.
கட்டுமானம் உள்ளிட்ட பிற துறைகளில் வழங்கப்படும் ஊதியத்தைப் பொறியியல் தொழில் நிறுவனங்களால் வழங்க முடியாத நிலையும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகக் கூறினார்.
சிறு, குறு தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டாலும், முதலில் தொழிலாளர்கள் பற்றாக்குறையே பெரும் தடையாக இருப்பதாகவும், இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
இதற்குத் தீர்வாக, பொறியியல் படிப்பை முடிக்கும் மாணவர்கள் ஓராண்டு சிறு, குறு தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற பின்னரே சான்றிதழ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும், முன்பு வழங்கப்பட்டு நிறுத்தப்பட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் தொழில் அமைப்பினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாநிலத் தொழிலாளர்களை மட்டுமே நம்பியிருக்கும் சூழலை மாற்றி, உள்ளூர் இளைஞர்களையும் சிறு, குறு தொழில்துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோவை தொழில் அமைப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
