சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகளை முடித்தும், அதற்கான ரூ.25 கோடி ஒப்பந்தத் தொகை ஓராண்டாக வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்ததாரர் ராமராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மனுவில், கடந்த 2025-ம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்று, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், பணிகளை முடித்து ஓராண்டு ஆகியும், தனக்கு வழங்க வேண்டிய ரூ.25 கோடிக்கான பில்கள் தொடர்பான தொகையை மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை வழங்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சியின் தலைமைச் சட்ட அதிகாரி ஜேக்கப் ஆஜரானார்.
விசாரணையின்போது, ஒப்பந்ததாரருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையைப் படிப்படியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, நிலுவைத் தொகையை எத்தனை நாள்களுக்குள் வழங்க முடியும் என்பது குறித்து மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
