
திமுகவை அசைத்துப் பார்க்க நினைக்கும் பாஜகவுக்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒரு துருப்புச்சீட்டு. எங்களுக்கு எதிராக இருக்காதே, இல்லை என்றால் எங்களோடு சேர்ந்து விடு என்பதுதான் அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைதுக்கான ஒற்றை காரணம் என்கிறது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் தலையங்கம்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை குறி வைத்து அவரின் ஆதரவாளர்கள் 40க்கும் மேற்பட்டோரின் வீடுகளில் வருமானவரித்துறை ரெய்டுகள் நடத்தி, பின்னர் அமலாக்கத் துறையினர் 18 மணி நேரம் விசாரணை நடத்தி செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். நீண்ட நேர விசாரணையில் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் செந்தில் பாலாஜி . உடல் நலம் குணமடைந்த உடன் அவரை சிறையில் அடைக்க துடிக்கிறது அமலாக்கத்துறை. இது குறித்தான ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறது, முரசொலியின் அந்தத் தலையங்கம்.


அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று அமலாக்க துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனால் அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்குவதற்கு என்றே அமலாக்க துறையை பயன்படுத்தி வருகிறது பாஜக என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறது முரசொலி .
10 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு புகாரை வைத்துக்கொண்டு இப்போது விசாரணைக்கு வந்து , ஒரே நாளில் 18 மணி நேரம் விசாரணை என்கிற பெயரில் சித்திரவதை செய்து, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையை எதற்காக உருவாக்க வேண்டும்? அதற்கான அவசியம் தான் என்ன வந்தது? அமைச்சராக இருக்கின்றவர் ஓடிப் போகப் போகிறாரா? லலித் மோடி , நீரவ் மோடிகளைப் போல ஓடிப் போக போகிறாரா என்ன ? வருமான வரி துறையை வைத்துக்கொண்டு பத்து நாட்களாக கரூரில் சோதனை நடத்துவதும் , அடுத்து அமலாக்கத்துறை வருவதும், 18 மணி நேரம் சித்திரவதை செய்வதும் , மத்திய பாதுகாப்பு படை போலீசாரை தலைமைச் செயலகத்திற்குள் அனுப்பி வைப்பதும், இதய நோயால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக சிறைக்கு கொண்டு போக துடிப்பதும், வழக்கு விசாரணைகள் போல தெரியவில்லை. அச்சம் ஏற்படுத்த நினைக்கும் வழிமுறைகளாகவே இருக்கின்றன. இதைத்தான் அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது .

ஆனால் இந்த அமலாக்கத்துறை அதைத்தான் செய்கிறது. 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 112 ரெய்டுகள் நடந்திருக்கின்றன என்றால் 9 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் 3010 ரெய்டுகள் நடந்திருக்கின்றன. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்துவதை போலவே ரெய்டுகளை நடத்தி இருக்கிறார்கள் பாஜகவினர். இதற்குத்தான் பாஜக அமலாக்க துறையைப் பயன்படுத்துகிறது . பட்டவர்த்தனமாக ஒளிவு மறைவு இல்லாமல் அமலாக்க துறையை பயன்படுத்தி இருக்கிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், கர்நாடக காங்கிரஸ் தலைவரும் தற்போதைய கர்நாடக துணை முதல்வருமான டி. கே. சிவக்குமார், மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் ஆம் ஆத்மியை சேர்ந்த சத்தியந்தர் ஜெயின், மகாராஷ்டிரா சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக் போன்றோரை திட்டமிட்டு கைது செய்து அடைத்தார்கள். எங்களுக்கு எதிராக இருக்காதே இல்லை என்றால் எங்களோடு சேர்ந்து விடு என்பதுதான் இந்த கைதுக்கான ஒற்றை காரணம் என்று தற்போதைய சூழலை விளக்குகிறது முரசொலி.

நேர்மையற்ற வழியில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகின்ற பாஜக, சிபிஐ என்பதை தேர்தல் ஏஜெண்டாக பயன்படுத்துகிறது. இது ஜனநாயக விரோதமானது . அரசியல் அமைப்பின் மாண்புக்கு எதிரானது என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அப்போது சொன்னார் . இதுதான் இந்தியா முழுமைக்கும் நாம் பார்க்கும் காட்சிகளாக இருக்கின்றன என்ற அவல நிலையை எடுத்துச்சொல்லும் முரசொலி,
திமுகவை அசைத்துப் பார்க்க நினைக்கிறது பாஜக . இதற்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒரு திருப்புச்சீட்டு . ஆனால் அச்சம் நிறைந்த சூழ்நிலையில் பாஜக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது என்று விளாசி இருக்கிறது.