தேர்தல் முடிவிற்கு பின்னர் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம் – அண்ணாமலை
சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.


அப்பொழுது அண்ணாமலை பேசும்போது, தேர்தல் முடிவுக்கு பிறகு மேலே இருப்பவர்கள் கீழே வரலாம் கீழே இருப்பவர்கள் மேலே போகலாம் அதைப் பற்றி எல்லாம் நாம் கவலை கொள்ளக்கூடாது.
நமக்கு கொடுத்த வேலையை நாம் செய்து முடித்து விட்டோம். இனி அடுத்து கொடுக்கும் வேலையையும் செய்து முடிப்போம்.
எத்தனை இடங்களில் வெற்றி பெறப் போகிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு வாக்குகளை பெறப் போகிறோம் என்பதுதான் முக்கியம். நாம் எந்த அளவுக்கு மைக்ரோ அளவில் பணியாற்றி இருக்கிறோம் என்று ஊடகங்களுக்கு தெரியவில்லை. எனவே நாம் எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை.

பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும், நட்டாவும் எப்படி பணியாற்றினார்கள் என்று நீங்கள் பார்த்து உள்ளீர்கள். அதேபோல் நாம் தொடர்ந்து உழைத்தால், நம் இலக்கை அடைய முடியும்.
நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றாதவர்கள் பற்றி எனக்கு தெரியும். தேர்தல் முடிவுக்கு பிறகு அவர்கள் மீது நடவடிக்கை கண்டிப்பாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றவர்கள் அனைவரும் கட்சிக்காக உழைத்தவர்கள். அதனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து என்றார்.


