வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று
அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை துரிதப்படுத்த தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குதல், மரக்கிளைகள் விழுந்து சாலைகள் அடைப்பு, போக்குவரத்து தடை, ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்களில் அதிகரிப்பு, மண் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தலைமைச் செயலாளர் எழுதிய கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.