ஈரோட்டில், மனைவி பிரிந்து சென்றதால், மது போதையில் எஸ்.பி அலுவலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த கார் ஓட்டுநரை போலீசாரால் கைது செய்தனர்.ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் தொடர்பு கொண்ட நபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அது வெடிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பாகினர். ஏற்கெனவே ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்க சதி செயல் நடப்பதாக தென்காசியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் பெயரில் மிரட்டல் கடிதம் சில தினங்களுக்கு முன் வந்திருந்தது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி ஆட்சியர் அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பும் சோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.பி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மேலும் பரபரப்பை அதிகரித்தது. மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், ஆப்பக்கூடல் பகுதியைச் சேர்ந்த 42 வயதான அய்யாசாமி என்ற ஓட்டுநர் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அய்யாசாமி உறவினர் பெண் ஒருவரை திருமணம் செய்ததும் ஆனால் இவருடன் சேர்ந்து வாழாமல் மனைவி பிரிந்து சென்றதும் தெரிய வந்தது. இதன் காரணமாக அவ்வப்போது மது போதையில் யாருக்கேனும் செல்போனில் அழைத்து மிரட்டல் விடுவதும், தகாத வார்த்தையில் பேசிவதுமாக வந்திருக்கிறார். அதைப்போலவே இன்றும் தலைக்கேறிய மது போதையில் உறவினர் ஒருவருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசிய அவர் தனது மனைவியை சேர்த்து வைக்க பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கு மிரட்டல் விடுக்க எண்ணி உள்ளார்.
இதற்காக கட்டுப்பாட்டு அறை 100க்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த ஈரோடு நகர காவல் துறையினர் அவரின் சொந்த ஜாமீனில் எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். எஸ் பி அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியின் செயலால் பரபரப்பு நிலவியது.
ஜவுளிக்கடையில் பயோமெட்ரிக் பதிவுகளை அழித்துவிட்டு நூதன மோசடி!