பராசக்தி படத்தில் இருந்து முதல் பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் கடைசியாக ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இது தவிர சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார். இதற்கிடையில் இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25 வது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராகவும் ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர்.
1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணைப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஒட்டுமொத்த படப்பிடிப்புகளும் நிறைவடைந்து படமானது 2026 ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

அதைத் தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடலும் வெளியாக இருக்கிறது. ஷான் ரோல்டன் மற்றும் தீ ஆகிய இருவரும் இணைந்து பாடி இருக்கும் ‘அடி அலையே’ எனும் முதல் பாடல் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலானது சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா ஆகிய இருவருக்குமான காதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


