திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், இன்று திமுகவில் இணைந்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தி.மு.கவில் சேர்ந்து கொண்டது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் உள்கட்சிக் குழப்பம் தலைதூக்கியபோதும், 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்ற போதிலும் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் அவரது தந்தை மறைந்த பி.எச்.பாண்டியன் ஆகியோர் மட்டுமே ஓபிஎஸின் அணியில் இருந்து உறுதியாக இருந்தனர்.

கடந்த சிலவாரங்களாகவே தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த மனோஜ் பாண்டியன், ‘விசுவாசத்தின் பக்கமே தான் நிற்பேன்’ எனத் தெரிவித்தாா். எனினும், அரசியல் மாற்றங்களும் எதிர்கால நிலைப்பாடுகளும் அவரை புதிய பாதைக்கு இட்டுச் சென்றுள்ளன. இன்று அவர் திமுகவில் இணைந்திருப்பது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுகவின் தென்தமிழக உத்தியாக கருதப்படுகிறது.
மனோஜ் பாண்டியன், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் (1984–89) பி.எச்.பாண்டியனின் மகனும், ஒய்.எம்.சி.ஏவின் முதல் பொதுச் செயலாளர் ராவ் சாஹிப் ஜி.சாலமனின் பேரனும் ஆவார்.
அவர் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னையில் பிறந்தார். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல், மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எல் பட்டங்களை முடித்துள்ளார். வழக்கறிஞராகப் பணியாற்றிய இவர், பின்னர் அரசியலிலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2001ஆம் ஆண்டு சேரன்மகாதேவி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2010 முதல் 2016 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 2021ஆம் ஆண்டு ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தற்போது பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், மனோஜ் பாண்டியனின் இணைவு, திருநெல்வேலி மற்றும் தென்தமிழகப் பகுதிகளில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வலுவை மேலும் உறுதிப்படுத்தும் எனக் காணப்படுகிறது. ஏற்கனவே அந்தப் பகுதிகளில் தி.மு.க வலுவாக இருந்தாலும், ஓ.பி.எஸ் அணியில் இருந்த முக்கிய நபர் தி.மு.கவுக்கு வருவது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது.


