கூட்டத்தை கூட்டுவது என்பது ஒரு போதை என்றும், அந்த போதையில் இருந்து விஜய் வெளியே வர என்று நடிகர் அஜித் தனது பேட்டியில் கூறியுள்ளதாக பத்திரிகையாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.


கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகர் அஜித்குமார் அளித்திருக்கும் பேட்டி குறித்து பத்திரிகையாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள காணொலி பதிவில் தெரிவித்துள்ளதாவது:- அஜித்குமார் தனது பேட்டியில், கொண்டாட்டம் என்கிற பெயரில் திரையரங்கம் சேதப்படுத்தப்படுவது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். திரையரங்க உரிமையாளர்கள் பல லட்சம் செலவு செய்து, திரையரங்கை புதுப்பிக்கிறார்கள். ஆனால் கொண்டாட்டம் என்கிற உள்ளே பட்டாசு வெடிப்பது. இருக்கைகளை உடைப்பது. ஒன்ஸ் மோர் கேட்டு திரையை கிழிப்பது. இவை அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இப்படியான ஒரு பேட்டியை கொடுக்கிற துணிச்சல் விஜய்க்கு துளியும் கிடையாது. விஜய்க்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதற்கு சற்றும் குறையாமல் அஜித்துக்கும் இருக்கிறார்கள். ஆனால் அவர் மிகவும் எளிமையாக வெளியே செல்கிறார். திருப்பதி கோயிலுக்கு சென்றார். தல என்று சத்தமிட்ட ரசிகர்ளை சத்தமிடுகிறார். அதை கேட்டு அவருடைய ரசிர்கள் அமைதியாகிறார்கள். ஆனால் விஜய் பேருந்துக்குள் உட்கார்ந்து கொண்டு மின்விளக்கை ஆன் செய்து, ஆப் செய்து கொண்டிருக்கிறார்.

மற்றவர்கள் உதவிக்கு இருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும். ஆனால் அது உங்கள் வாழ்க்கையை வீணாக்கக் கூடும் என்று அஜித்குமார் சொல்கிறார். இதேபோல் தன்னை சுற்றி ஒரு குழு இருந்ததாகவும். அப்போது எந்நேரமும் அவர்களுக்குள் நடக்கும் தினசரி சண்டையை தீர்க்கவும், அவர்களை நிர்வகிக்கவுமே என்னுடைய நேரத்தை வீணடித்தேன். எனவே தற்போது யாரையும் தன்னுடன் வைத்துக் கொள்ளவில்லை என்றும், தன்னுடைய வேலைகளை தாமே செய்வதாகவும் அஜித் சொல்கிறார். தற்போது புஸ்ஸி,ஆனந்துக்கும் பிரச்சினை. புஸ்ஸி ஆனந்துக்கும் ஜான் ஆரோக்கியசாமிக்கு பிரச்சினை வருகிறது. இதை சரிசெய்ய விஜய் நேரத்தை செலவிடுகிறார் என்கிற காட்சி பார்வையாளர்களின் கண்ண முன்னே வந்தால் நான் பொறுப்பு கிடையாது.

கரூர் மரணம் தொடர்பாக அஜித் தெளிவாக பேசியுள்ளார். முதலில் கூட்டம் கூட்டுகிற மனநிலையை விடுங்கள் என்று அஜித் சொல்கிறார். கூட்டம் கூட்டுவது எளிது. அதை கட்டுப்படுத்துவது கடினம். வெற்றி என்கிற குதிரையில் நாம் ஏறிவிடலாம். ஆனால் அதை ஒழுங்காக கையாள தெரியாவிட்டால் நம்மை கவிழ்த்துவிடும் என்று சொல்கிறார். கூட்டத்தை கூட்டுவது என்பது ஒரு போதை. அந்த போதையில் இருந்து வெளியில் வாருங்கள் என்று அஜித் சொல்கிறார். கரூர் மரணத்திற்கு தனிப்பட்ட ஒருவரை பொறுப்பாக்க விரும்பவில்லை. இந்த சம்பவத்தில் ஊடகங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். முதல் நாள் முதல் காட்சிக்கான வெறியை ஊட்டாதீர்கள் என்று ஊடகங்களை கண்டிக்கிறார். திரைப்பட ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு, ஊக்கத்திற்கு நன்றி. ஆனால் ஒரு சமயம் போதை போல ஆகிவிடும். புகழ் ஒரு போதை. என் முந்தைய அனுபவங்களால் நான் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறேன். நான் ரசிகர்கள் கொடுக்கிற புகழை ரசிக்கிறேன். ஆனால் அதை தொட விரும்பவில்லை. அதன் தாக்கத்தில் இருக்க விரும்பவில்லை என்கிறார்.

எங்களை கொண்டாடுங்கள். ஆனால் எங்களுக்கு உயிரை கொடுக்கிற அளவுக்கு போய்விடாதீர்கள் என்று சொல்லியுள்ளார். கமல் மீது எனக்கு அரசியல் ரீதியாக விமர்சனங்கள் உள்ளன. ஆனால் அவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தையே கலைத்துள்ளார். அதேபோல் தான் அஜித்குமாரும் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்தார். கூட்டநெரிசலால் தமிழ்நாட்டில் பல விஷயங்கள் நடந்துள்ளன. ஆனால், அந்த சம்பவத்திற்கு தனி நபர் மட்டும் பொறுப்பு கிடையாது. நாம் அனைவருமே அதற்கு பொறுப்பு. நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கூட்டத்தை கூட்டுவதில் நாம் இன்று ஆர்வம் காட்டி வருகிறோம். இதை பெரிய விஷயமாக ஆக்குதை நாம் நிறுத்த வேண்டும் என்று அஜித் தன்னுடைய பேட்டியில் சொல்கிறார். கரூர் சம்பவம் நடைபெறுவதற்கு காரணம் கூட்டத்தை கூட்டுகிற ஆர்வம் தான். காரணம் செப்.17ஆம் தேதி கரூரில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. அந்த கூட்டத்தை பார்த்து அதை விட பெரிய கூட்டத்தை கூட்டிக் காண்பிக்கிறோம் என்கிற போதையில்தான் டிசம்பர் மாதம் கரூர் வர வேண்டிய விஜய் செப்.27ல் கரூருக்கு வந்தார். அதைதான் அஜித்குமார் சுட்டிக்காட்டுகிறார்.

குடும்பத்தை பிரிந்து தூக்கமின்றி கடினமாக உழைப்பது ரசிகர்களின் அன்புக்காக தான். உங்களின் அன்பை காட்டுவதற்கு வேறு வழிகள் உள்ளன என்று அஜித் கூறுகிறார். விஜய் கட்சி தொடங்கியதும், அவர் தங்கள் கூட்டணிக்கு வர உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால் அதற்கு இதுவரை விஜய் மறுப்பு சொல்லவில்லை. அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக தமிழிசை சௌந்தரராஜன் சொன்னார். அப்போது அஜித்திடம் இருந்து உடனடியாக அறிக்கை வெளியாகிறது. தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்து சில ஆண்டுகள் ஆவதாகவும், தன்னுடைய ரசிகர்கள் அரசியல் கட்சிகளில் சேர்ந்தார்கள் என்று யார் சொல்வதிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்கிறார். அத்தகைய துணிவு அஜித்திடம் இருந்தது. ஆனால் விஜயிடம் அந்த துணிவு கிடையாது. ரஜினிகாந்த், தன்னை நம்பி இருப்பவர்களுக்கு கொரோனா கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு பெரும் சிக்கலை கொடுக்கும். எனவே நான் வர விரும்பவில்லை என்ற தெளிவான புரிதல் ரஜினியிடம் இருந்தது எனவே அவர் வரவில்லை. விஜய் இனிமேலாவது திருந்த வேண்டும். இனி மலினமான அரசியலை செய்யக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


