spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅதிமுகவில் வெடித்த பூகம்பம்! செங்கோட்டையன் அதிரடி பேட்டி! தொடங்கியது பாஜகவின் திட்டம் சி!

அதிமுகவில் வெடித்த பூகம்பம்! செங்கோட்டையன் அதிரடி பேட்டி! தொடங்கியது பாஜகவின் திட்டம் சி!

-

- Advertisement -

அதிமுக – பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுகவுக்கு செல்வதை தடுக்க டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன் போன்றவர்களை வைத்து புதிய அணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியது முதல் அந்த கட்சியில் இருந்தவர் செங்கோட்டையன். 8 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.  50 வருடங்களுக்கு மேலாக அரசியலில் பயணித்து வருகிறார். அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று பிரிந்தபோது செங்கோட்டையன் ஜெயலலிதா அணியில் இருந்தார். ஜெயலலிதாவின் பிரச்சார திட்டங்களை செங்கோட்டையன் வடிவமைப்பார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் முதலமைச்சர் ஆகிற வாய்ப்பு அவருக்கு தான் வந்தது. அப்போது செங்கோட்டையன் சற்று தயங்கினார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகிவிட்டார். 2021 தேர்தலுக்கு பிறகு செங்கோட்டையன் கட்சியில்  ஆக்டிவ் ஆகவில்லை.  மேலும், எடப்பாடியின் தலைமையை செங்கோட்டையனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொங்கு வேளாளர் சமுதாயத்தின் அடையாளமாக யார் இருப்பது? என்றும் இருவருக்கும் போட்டி ஏற்பட்டுவிட்டது. இதனால் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமன், அமித்ஷா போன்றவர்களை சந்தித்தார். மனவருத்தத்தில் இருந்தவரை பாஜக பயன்படுத்திக் கொண்டது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் சேர்ந்து தேவர் ஜெயந்தியில் அவர் பங்கேற்றார். தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தான் அதிமுகவில் ஒரு அணியாக தொடர்வதாக சொல்கிறார். தன்னை திமுகவின் பி டீம் என்று சொல்வதாகவும், ஆனால் கொடநாடு கொலை வழக்கில் ஏ1 எடப்பாடி பழனிசாமி தான் என்ற அதிர்ச்சிகரமான தகவலை சொல்கிறார். துரோகத்திற்காக நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால், அதை எடப்பாடி பழனிசாமிக்கு தான் தர வேண்டும் என்றும், எடப்பாடி சர்வாதிகாரி போல நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து தெரிவிப்பதாக சொல்லியுள்ளார். ஜெயலலிதா, தன்னுடன் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் கட்சியின் நலனுக்காக சேர்த்துக் கொண்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார். தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு விழக்கூடியதாகும். ஆனால், இன்றைக்கு தென் மாவட்டங்களில் அதிமுக 3வது இடத்திற்கு போய்விட்டது. இன்றைய சூழலில் என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக, பாஜக மட்டும் தான் உள்ளது. பாமகவில் இருந்து அன்புமணி தரப்பு மட்டும் தான் வரும் .

தமிழகத்தில் அதிமுகவை காலி செய்துவிட்டு அவர்கள் இடத்தில் 2031ல் ஆட்சிக்கு வருவது தான் பாஜக இலக்கு. இல்லாவிட்டால் பிரதமர் மோடி பீகாரில் சென்று தமிழ்நாட்டை பற்றி பேசுவாரா? அவரது பேச்சு தமிழ்நாட்டில் எப்படி எதிரொலிக்கும் என்று அவருக்கு தெரியாதா? அதிமுக பலவீனப்பட்டிருப்பதில், அக்கட்சியினர் உளவியல் ரீதியாக பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர். நயினார் நாகேந்திரனே ஒரு காலத்தில் அதிமுகவில் இருந்தவர்தான். அதிமுக வலிமையாக இருந்திருந்தால் அவர் அங்கே போயிருப்பாரா? அதிமுக பலவீனமானால் தான் அந்த இடத்திற்கு பாஜக செல்ல முடியும் என்பதில் பாஜக தெளிவாக உள்ளது. பாஜக தரப்பில் ஆப்ஷன் சி என்கிற ஒன்றை கையில் வைத்துள்ளனர். அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது, செங்கோட்டையன் உள்ளிட்டோர் குருபூஜைக்கு சென்றதற்கு, அதிமுகவினர் தன்னை காரணமாக திட்டுவதாகவும், அமித்ஷா சொன்னதால் அமைதியாக இருப்பதாகவும் சொல்கிறார். பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை கூட்டணி கட்சி குறித்து கடுமையாக விமர்சிக்கிறார்.  பாஜகவில் அண்ணாமலைக்கு எந்த பொறுப்பும் இல்லாததால் அவர் தனிக் கட்சி தொடங்குகிற முடிவில் இருக்கிறார். தற்போது பாஜக இவர்கள் எல்லோரையும் ஒரு அணியாக அமைக்கப் போகிறார்கள். ஆப்ஷன் சி ஆக இதை திட்டமிட்டிருக்கிறார்கள். மிக விரைவில் இது நடக்கும்.

அதிமுக, பாஜகவை பிடிக்காதவர்கள் திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள். அந்த வாக்குகளை பிரிக்க இவர்கள் டிடிவி, செங்கோட்டையன், ஓபிஎஸ், அண்ணாமலை போன்றவர்களை வைத்து புதிய அணியை உருவாக்குகிறார்கள். அதிமுக, பாஜகவுக்கான வாக்கு வங்கி சரியாக உள்ளது. அந்த நேரத்தில் திமுகவுக்கு செல்கிற வாக்குகளை தடுத்துவிட்டால் வெற்றி பெற்றுவிடலாம் என்று பாஜக நினைக்கிறது.  பீகாரில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிந்த உடன் தமிழ்நாட்டிற்கு வந்துவிடுவார்கள்.  அப்படி தமிழ்நாட்டிற்கு வந்த உடன் திமுக கூட்டணியை பலவீனப்படுத்துவது, அமைச்சர்களை கைது செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள். அண்ணாமலைக்கு, ஆளுநர் போன்ற பொறுப்புகளை வழங்கியிருக்கலாம். ஆனால் எதுவும் வழங்காமல் அவரை வைத்திருப்பது ஏன்? அப்போது இவர்களை எல்லாம் சேர்த்து 3வது அணியை உருவாக்கி வாக்குகளை பிரிப்பது தான் பாஜகவின் நோக்கமாகும். பாஜகவுக்கு தமிழ்நாடு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கால் வைத்தால்தான் வரலாற்றை திரித்து எழுத முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ