முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் போன்றவை அதிகாரிகளை மக்களை நோக்கி செல்ல வைத்திருப்பதாகவும், இது மகத்தான நிர்வாக புரட்சி என்றும் மருத்துவர் காந்தராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தொடங்கியுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்தும், பீகாரில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் மருத்துவர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எதிர்க்கட்சிகள் நடைபயணம் போய்க் கொண்டிருக்கும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஆங்கிலத்தில் பீரோக்கிரசி என்று ஒரு வார்த்தை உள்ளது. அதற்கு அதிகாரவர்க்கத்தின் மெத்தனம் என்று அர்த்தம். கடந்த காலங்களில் தலைமை செயலாளரை, அரசுத்துறை அதிகாரிகளே சந்திக்க பல மணி நேரமாகும். கோட்டையில் கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்க நீண்ட காலமாகும். ஆனால் அதிகார வர்க்கத்திற்கு ஜெயலலிதா ஒரு பாடம் கற்பித்தார். நாங்கள் அதற்கு ஆதரவாகதான் இருந்தோம். இன்றைக்கு மக்களைத் தேடி அரசாங்கம் என்று வருகிறபோது, இந்த வேலைகள் எல்லாம் நடக்காது. அரசு துறைகளில் மக்கள் போன உடன் அவர்களின் குறைகளை கேட்டு தீர்க்கும் ஒரே துறை மருத்துவத் துறை தான். காய்ச்சல் என்று வந்த உடன், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்துவிடுவோம். மற்ற எந்த துறைகளுக்கு சென்றாலும் வேலை உடனடியாக நடக்காது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள திட்டங்களால் அது உடனே நிறைவேறி விடும்.
அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கை குறைக்கும் விதமான நடவடிக்கை இது. அவர்களும் மக்களை சந்திக்க வேண்டும். எங்களுடைய காலத்தில் அரசு அலுவலகங்களில் ஏசி இல்லாததால் அறைக் கதவுகள் திறந்திருக்கும். மக்கள் அதிகாரிகளை வெளியில் இருந்தாவது பார்க்க முடிந்தது. ஆனால் இன்றைக்கு ஏசி அறைகள் என்பதால் அறைகளை அடைத்துக் கொண்டு உள்ளே இருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்கள் மக்களைவிட்டு விலகி இருந்தனர். இன்றைக்கு நடுத்தெருவில் டெண்ட் போட்டு கொண்டு நிற்கிறார்கள். இதெல்லாம் மகத்தான நிர்வாக புரட்சி ஆகும். கலைஞர் ஆட்சிக்காலத்திலேயே இதையெல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம். ஆனால் எம்ஜிஆர் வந்த உடன் மாறிவிட்டது. நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவத்திட்டத்தின் மூலம் நோயாளிகள் நலம் பெறுவார்கள். அதோடு நன்றாக இருப்பவர்களுக்கும், அவர்களிடம் இருந்து நோய் பரவாது. ஒரு மருத்துவராக இந்த திட்டத்தை ஆதரிக்கிறேன்.
பீகார் சிறப்பு வாக்கு திருத்தம் மூலமாக 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள். தேர்தல் ஆணையம் அதை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பீகாரில் உள்ளவர்களை எல்லாம் அயல் நாட்டவர்கள் என்று சொல்லிவிட்டார்கள். அப்படி நீக்கப்பபட்டவர்களை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? பாஜகவினர் வாக்கு எந்திரத்தில் வாக்கு அளித்ததற்கு பிறகு சிம் கார்டை மாற்றுவதற்கு பதிலாக மக்களை வாக்கு போடாமல் செய்துவிட்டால், அவர்கள் வேலை பார்க்கும் இடத்திலேயே வாக்களிக்கலாம். தமிழ்நாடு அரசு இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது அதுதான். வாக்கு இயந்திரங்களை தீவிரமாக கண்காணித்து ஆக வேண்டும். நான் தேர்தல் ஆணையர்களின் வீடுகளை முற்றுகையிடுங்கள் என்று சொன்னேன். இன்றைக்கு அதை அறிவித்துள்ளார்கள். தேர்தல் ஆணையத்திற்கு பயம் வர வேண்டும். மக்கள் எழுச்சி வரும் என்கிற பயம் வராவிட்டால், தேர்தல் ஆணையர்கள் நியாயமாக நடந்துகொள்ள மாட்டார்கள். தற்போது தேர்தல் அதிகாரிகள் வீடுகளை முற்றுகையிடுவோம் என்று அறிவித்துள்ளார்கள்.
இந்திய பொருளாதாரம் செத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொல்கிறார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.முதலாளியே சொல்கிறார், கம்பெனி காலியாகி விட்டது என்று. இந்த விவகாரத்தில் மோடி வாய் திறக்கவில்லை. இதில் ஒரு சந்தோஷம் என்ன என்றால் ரஷ்யாவின் பொருளாதாரமும் செத்துவிட்டது என்று சொன்னதுதான். இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அவர் விதித்துள்ளார். பல முக்கிய தொழில்கள் அடிபடுகின்றன. இறக்குதி, ஏற்றுமதிக்கு நாம் அமெரிக்காவை தான் பெரிதும் சார்ந்துள்ளோம். அமெரிக்கன் டாலரில் தான் அனைத்துவிதமான வர்த்தகமும் நடைபெறுகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமாக ரஷ்யாவிடம் பெட்ரோல் வங்குவதை நிறுத்திவிட்டோம். ரஷ்யா மலிவாக கொடுத்தார்கள். தற்போது பெட்ரோல் வர்த்தகத்தை நிறுத்தியதால் அவற்றின் விலையும் உயர போகிறது. இன்று, நேற்று அல்ல. இந்தியாவை சுற்றி இருக்கும் எந்த நாடாவது இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதா? பாகிஸ்தான் எதிராலி. வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், பர்மா, இலங்கை, மாலத்தீவு. இவை அத்தனையும் நமக்கு விரோதி. முதலில் வடக்கில் தான் நமக்கு ஆபத்து இருந்தது. தற்போது தெற்கிலும் வந்துவிட்டது.
சீனாவின் தெற்கு பகுதி திருநெல்வேலியில் இருந்து 280 மைல் தொலைவில் அமைந்துள்ளது. 280 மைல் தொலைவு என்பது ஒரு விஷயமே இல்லை. 10 நிமிடங்களில் வந்து தாக்குதல் நடத்திவிட்டு சென்றுவிடுவார்கள். சீனர்களின் ஏவுகணைகள் எல்லாவற்றையும் கூடங்குளத்தை நோக்கி வைத்துள்ளனர். பயந்துபோய் தான் நம்முடைய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை எல்லாம் கூடங்குளத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். சீனாவுடைய தாக்குதல் என்பது தெற்கு பகுதியில் இருந்துதான் தொடங்கும் என்கிறார்கள். வடக்கு பகுதியில் பிரச்சினை இல்லை. அருணாச்சல பிரதேசத்தை எல்லாம் அவர்களின் தேச வரைபடத்தில் சேர்த்துவிட்டார்கள். ஆனால் இந்தியா இன்னும் தங்களுடைய பகுதி என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. அங்கே கட்டிடங்களை கட்டி, அரசாங்கத்தையே உருவாக்கிவிட்டார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றால், இந்தியாவை ஒரு நாடாகவே அவர்கள் எண்ணுவதில்லை. டிரம்ப் அடித்த அடி சாதரணமானது அல்ல. அதானி மீது கைவைத்துவிட்டார்கள் என்று எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அதனால்தான் செத்துவிட்டது என்று சொல்கிறபோது மோடி வாய் திறக்கவில்லை. பகல்காம் தாக்குதலை நிறுத்துவதற்கு காரணம் டிரம்ப் வர்த்தகத்தை நிறுத்துவேன் என்பதுதான். அதனால் அடித்துப்பிடித்துக் கொண்டு போரை நிறுத்தினார்.