மத்திய அரசு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைத்துவிட்டால், அது எடுக்கும் முடிவுகளில் உச்சநீதிமன்றமோ, நாடாளுமன்றமோ தலையிடவோ, திருத்தம் மேற்கொள்ளவோ முடியாது என்று பாலச்சந்திரன் ஐஏஎஸ் எச்சரித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில் இந்த விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தென் மாநில அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டம் தொடர்பாக பாலச்சந்திரன் ஐஏஎஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- தென் மாநில தலைவர்களின் கூட்டம் என்பது மத்திய அரசுக்கு விருப்பமில்லாத ஒன்றாகும். அவர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டும்போதே மக்களவையில் 845 உறுப்பினர்கள் இருப்பது போல இருக்கைகளை அமைத்துள்ளனர். 5 வருடங்களுக்கு முன்பே நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள்.
முதலில் தமிழ்நாடும், புதுச்சேரியும் சேர்ந்து 42 தொகுதிகள் இருந்தன. தமிழ்நாட்டிற்கு மட்டும் 41 தொகுதிகள் இருந்தன. 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் அது 39ஆக குறைக்கப்பட்டது. தொகுதி மறுவரையறை சட்டம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாகும். மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம். இதற்கு மக்கள் தொகைதான் அடிப்படையானது. இப்படி பார்க்கும்போது நமக்கு மக்கள் தொகை குறைந்ததால், தொகுதிகளின் எண்ணிக்கை 39ஆக குறைந்துவிட்டது. அப்போது தமிழ்நாடு அரசு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை சுட்டிக்காட்டி, அதற்கான தண்டனையா? என கேள்வி எழுப்பியது. அப்போது இருந்த இந்திரா காந்தி அம்மையார், அதன் உண்மை தன்மையை உணர்ந்துகொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கு 1971 மக்கள் தொகை அடிப்படையில் மாற்றம் இருக்காது என்று அறிவித்தார்.
தொகுதி மறுவரையறை சட்டத்தின் அடிப்படியில் தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்படும். அந்த ஆணையம், இறுதியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை கூட்டவோ, குறைக்கவோ செய்யும். 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் என்று வந்ததால் அடுத்ததாக 1981 மற்றும் 1991ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தில் சட்டப்பேரவையில் 234ல் மாற்றம் செய்யப்படவில்லை. மக்களவையிலும் 543 தொகுதிகள் என்ற அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. அடுத்து வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் உள்ள நியாயத்தை உணர்ந்து மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தார். அதன்படி 2026 வரை 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் தொகுதிகள் இருக்கும் என்றும் சொல்லிவிட்டார்கள்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, ஏன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிகளை குறைத்து விடுவார்கள் என அச்சப்படுகிறார் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். தொகுதி மறுவரையறை சட்டம் என்ன சொல்கிறதென்றால், ஆணையம் அமைக்கப்பட்ட உடன் அதற்கு முன்பு இறுதியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறுசீரமைக்கப்படும். கடந்த 2021ஆம் ஆண்டில் கொரோனாவை காரணம் காட்டி மக்கள் தொகை கணக்கெடுப்பை தள்ளிப்போட்டார்கள். ஆனால் இன்று வரை அதனை செய்யவில்லை.
இந்நிலையில் 2026ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திவிட்டால் நாடாளுமன்றத்திற்கு அடுத்த தேர்தல் 2029ல் வருகிறது. 2029 தேர்தலுக்கு முன்பு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு எது என்றால் 2026ல் எடுத்ததாக தான் இருக்கும். மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் நமக்கு 40 தொகுதிகள்தான் இருக்கும். ஆனால் உ.பி. 120 தொகுதிகளுக்கு மேலாக வரும். அமித்ஷா விகிதாச்சார அடிப்படையில் தான் தொகுதிகளை மறுவரையறை செய்வோம் என்கிறார். ஆனால் 1971 மக்கள்தொகை அடிப்படையில் செய்வோம் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. பிரதமர் மோடி 1971 மக்கள் தொகை அடிப்படையில் தான் தொகுதிகளின் விகிதாச்சாரம் இருக்கும் என்று அறிவித்தால் பிரச்சினையே முடிந்துவிட்டதே. அப்படி சொல்லாதபோது, இவர்களது சூழ்ச்சிதான் தெரிகிறது.
அண்ணாமலை பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அந்த கட்சியின் கொள்கைகளை அவர் பின்பற்றலாம். 1965ல் சி.சுப்பிரமணியம், அழகேசன் என்று 2 மூத்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற போது, தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி அதனை கையாண்ட விதம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று சொல்லி தங்களது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்கள். இது அண்ணாமலைக்கு புரிய வேண்டும். தமிழர்கள் நலன் என்று வருகிறபோது, தமிழர்களை பாதுகாக்காமல் இருந்தீர்கள் என்றால், அரையும் குறையுமாக பேசி கொண்டிருந்தீர்கள் என்றால் மக்கள் நிராகரித்துவிடுவார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்றே ஏன் முன்னெடுக்கிறார் என்றால், மத்திய அரசு எந்த ஆண்டின் அடிப்படையில் என்று குறிப்பிடாமல் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தால், தற்போதுள்ள சட்டத்தின்படி இறுதியாக எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இருந்ததோ அதன் படிதான் தொகுதி மறுவரையறை செய்வார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இப்போதே எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று எல்லோரும் கேள்வி எழுப்புகிறார்கள். தொகுதி மறுவரையறை ஆணையத்திற்கு உள்ள அதிகாரம் என்ன என்றால்? அவர்கள் தங்களுடைய வேலையை முடித்த பின்னர், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் முதற்கொண்டு எந்த நீதிமன்றமும் அவர்களது முடிவில் தலையிட முடியாது. நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவு குறித்து விவாதிக்கலாம். ஆனால் எந்தவித திருத்தமும் மேற்கொள்வதற்கு அதிகாரம் கிடையாது. இதுதான் சட்டம்.
அப்படி எனும்போது தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கும் வரை ஸ்டாலின் கையை கட்டிக்கொண்டு இருந்துவிட்டு, அதன் பிறகு எதாவது பேசினார் என்றால் என்ன சொல்வார்கள். அவர்கள் சட்டப்படி செய்கிறார்கள். இவ்வளவு நாளாக தூங்கி கொண்டிருந்தீர்களா என கேள்வி எழுப்புவார்கள். இப்போது விழித்துக்கொண்டது தான் சரியான நேரமாகும். 2 வருடங்களுக்கு முன்பு இந்த பிரச்சினையை எழுப்பினேன். இது மிகவும் முக்கியமான பிரச்சினையாகும். இதனால் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் பாதிக்கப்படுவார்கள். 39 சீட்டு எனக்கு காப்பாற்றப்படுகிறது என்று தயவு செய்து கேட்காதீர்கள். 1971 கணக்கெடுப்பு அடிப்படையில் விகிதாச்சாரத்தில் கேளுங்கள் என்று சொன்னேன். இல்லாவிட்டால் ஏற்கனவே சிறுபான்மையினராக உள்ள நாம், இன்னும் சிறுபான்மையினர் ஆகி விடுவோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.