P.G.பாலகிருஷ்ணன்,
பத்திரிகையாளர்
காமராஜர், இந்த மண்ணில் மனிதனாக பிறந்து மறைந்திருந்தாலும், இன்று கோடான கோடி மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அப்படிப்பட்ட மாமனிதன் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய சுயநலமில்லாத பொது நலத்துடன் மக்களுக்காக பணி செய்து அவர் வாழ்ந்த வாழ்க்கை இனி வரும் சந்ததியினருக்கும் பாடமாகத்தான் அமைந்திருக்கிறது.காமராஜர் தன்னை தான் சார்ந்த சாதியின் உள்ளாகவோ, அவர் பயணித்த தேசிய கட்சியின் கொள்கைகளுக்கு உள்ளாகவோ அவரை அடைத்து கொண்டதே இல்லை, மக்களுக்கு தேவையான கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்று கொள்ளக்கூடியவர். எதிர் அணியில் இருக்க கூடியவர்கள் கூட மக்களுக்கு தேவையான ஒரு கோரிக்கைகளை முன் வைத்தால் அதை விரிவாக அலசி ஆராய்ந்து ஏற்புடையதாக இருந்தால், அவர் அதை ஏற்று கொண்டு எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தக் கூடிய சுபாவம் கொண்டவர்.
அந்த வகையில் தான் அவர் தன்னுடைய கட்சி ஆட்சியில் இருந்த போது முதல்வராக இருந்த ராஜாஜி, குலக்கல்வி திட்டத்தை கொண்டு போது எதிர்க்கட்சியை சேர்ந்த பெரியாரின் கருத்தை ஏற்று கொண்டு, அந்த கல்வி முறையை கடுமையாக எதிர்த்தவர். பிரதமராக இருந்த நேருவிடம் அந்த திட்டத்தில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்ததன் மூலம் அந்த கல்வி முறையை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த முடியாமல் செய்தவர்.காமராஜர் தேசிய கட்சியில் இருந்திருந்தாலும், அவர் எப்போதும் திராவிட கொள்கைகளான சாதி மறுப்பு, கடவுள் வழிபாடு மறுப்பு, மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை எதிர்த்து குரல் கொடுப்பது, இந்தி திணிப்பை எதிர்த்தது, இப்படி பல விஷயங்களில் திராவிட கொள்கைகளோடு ஒத்துப்போய் தான் அரசியலில் பயணித்தார். மேலும், பிரதமர் நேருவிற்க்கே தெரியுமளவிற்கு எதிர்க்கட்சியாக இருந்த பெரியாருடன் சேர்ந்தே பயணித்தார்.

காமராஜரின் ஆலோசனையை ஏற்று, நேரு அறிமுகப்படுத்திய “கே.பிளான்” (காமராஜர் திட்டம்) திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தன்னுடைய முதல்வர் பதவியை காமராஜர் ராஜினாமா செய்த பின்னர், காமராஜர் அகில இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்று நேருவின் மறைவிற்கு பின்னால், லால்பகதூர் சாஸ்திரியையும், அவருடைய மறைவுக்கு பின்னால், இந்திரா காந்தியையும் வடக்கே இருந்த அரசியல்வாதிகள் பலருடைய எதிர்ப்புகளுக்கு இடையே இருவரையும் பிரதமராக்கி, அகில இந்திய காங்கிரஸ் தலைமை பொறுப்பையும், இந்திய அளவில் ஆட்சி நிர்வாகத்தையும் தன்னுடைய மேற்பார்வையில் இயங்க செய்தவர் காமராஜர்.இப்படி, தன்னலம் இல்லாமல் பொது நலத்துடன் மக்களுக்காகவே உழைத்து கொண்டிருந்த ஒரு மாபெரும் தலைவரை அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இவரின் ஆலோசனையை ஏற்று செயல்பட விரும்பாத காரணத்தால், காமராஜருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காமராஜரை கட்சியை விட்டு நீக்கி உத்தரவிட்டதும் இல்லாமல், எமர்ஜென்சி காலகட்டத்தில் அவரை கைது செய்யவும் இந்திரா காந்தி உத்தரவிட்டிருந்தார்.
காமராஜர் இப்படி தன்னுடைய இளம் வயதிலிருந்து காங்கிரஸ்காக இரவு, பகல் பாராமல் சுதந்திர போராட்டத்தில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்து போராட்ட வாழ்க்கை வாழ்ந்த ஒரு மாமனிதனை, அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி அவரை உதாசீனப்படுத்தி தூக்கி எறிந்ததுடன் மட்டுமில்லாமல், அவரை கைது செய்யவும் உத்தரவிட்டிருந்ததையும் நினைத்து, மனம் குமுறி வருந்தியே இறந்து போனார். நன்றி கெட்டவர்களோடு அவர் வாழ்ந்த வாழ்க்கை இப்படி ஒருபுறம் இருந்துள்ளது.அதேசமயம் தமிழ்நாட்டில் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்து கொண்டு இருந்த திராவிட கொள்கை அரசியலில் இருந்த பெரியார் மற்றும் அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர் என அனைவரும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தான் அரசியல் செய்தவர்களே தவிர காமராஜரை அவர்கள் போற்றுதலுக்கு உரிய தலைவராக தான் மதிப்புடன் நடத்தி இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், காமராஜர் எப்போதும் பெரியாருடன் தொடர்ந்து நட்புடன் பழகி வந்திருக்கிறார். பல சமயங்களில் பெரியாருடைய ஆலோசனைகளை ஏற்று அதன்படி அரசியலில் பல முடிவுகளை காமராஜர் எடுத்திருக்கிறார்.
காமராஜர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேசிய அரசியலுக்கு சென்றபோது, “இப்படிப்பட்ட ஒரு தலைவர் நமது தமிழ்நாட்டிற்கு இனி கிடைப்பார்களா, ஆகவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தேசிய அரசியலுக்கு அவரை போக விடாதீர்கள்” என மக்களிடம் வேண்டுகோள் வைத்து பெரியார் மன்றாடி இருக்கிறார். அதேபோல் அண்ணாவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்த போது, நாங்கள் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை தான் தோற்கடிக்க வேண்டும் என நினைத்தோமே தவிர, காமராஜரை தோற்கடிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.
மேலும், அவர் வெற்றி பெற்றவுடன் காமராஜரிடம் நேரடியாக சென்று வாழ்த்து பெற்றார். மேலும், விருதுநகரில் வெற்றி பெற்ற சீனிவாசனை குறிப்பிட்டு மேடையில் அண்ணா பேசும்போது, காமராஜரை எதிர்த்து வெற்றி பெற்றவர் சீனிவாசன் என்று குறிப்பிட்டு யாரும் பேசக்கூடாது எனவும், காமராஜரை யாராலும் வெல்ல முடியாது. ஆகவே விருதுநகரில் வெற்றி பெற்ற சீனிவாசன் என்று குறிப்பிட்டு பேசுங்கள் என உத்தரவிட்டார்.அதேபோல், இந்திரா காந்தி அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்திய போது, இந்தியா முழுவதிலும் காமராஜரோடு இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல் காமராஜரையும் கைது செய்ய சொல்லி அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்களுக்கு டில்லியில் இருந்து உத்தரவு வந்தது. அதற்கு கலைஞர், “காமராஜரை நாங்கள் கைது செய்யமாட்டோம், வேண்டுமென்றால் எங்கள் ஆட்சியை கலைத்து விட்டு ராணுவத்தை கொண்டு வந்து அவரை கைது செய்து கொள்ளுங்கள்” என கூறி மறுப்பு தெரிவித்தார்.
மேலும், காமராஜர் ஆந்திராவிற்கு செல்லும்போது அங்கு இருக்கும் போலீஸ்காரர்களை வைத்து காமராஜரை கைது செய்ய திட்டமிடப்பட்டதை அறிந்த கலைஞர், காமராஜரை ஆந்திராவிற்கு செல்ல அனுமதிக்கவில்லை, பின்னர் அதை தெரிந்து கொண்ட காமராஜர் கலைஞரை மிகவும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். காமராஜரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, அவர் தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரில் இருக்க கூடிய பொதுப்பணித்துறை விடுதிகளில் தங்குவது வழக்கம். ஆகவே, அவர் செல்ல கூடிய ஊரில் எல்லாம் இருக்கும் பொதுப்பணித்துறை தங்கும் விடுதிகளில் குளிர்சாதன வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய திருமணத்தை காமராஜர் தலைமையில் தான் கலைஞர் நடத்தினார்.காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தார். சென்னை விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரை வைக்க காரணமாக இருந்தவர் கலைஞர், காமராஜர் பிறந்த இடத்தை நினைவு இல்லமாக அமைத்து கொடுத்ததும், கன்னியாகுமரியில் நினைவு மண்டபம் அமைத்து கொடுத்ததும், அரசுத் துறையில் காமராஜ் என்பதை இனி காமராஜர் என்று அழைக்க வேண்டும் என உத்தரவிட்டதும் கலைஞர் தான், அரசு வழங்க கூடிய பெண் குழந்தைகள் திட்டத்திற்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரின் பெயர் சூட்டப்பட்டது. அதேபோல், ஆண்டுதோறும் சிறப்பாக சமூக சேவை செய்ய கூடிய நபருக்கு காமராஜர் விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அனைத்திற்கும் மேலாக காமராஜர் மறைவின் போது அப்போது முதல்வராக இருந்த கலைஞர் முதல் ஆளாக சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், காங்கிரஸ் தலைவர்களுடைய வழிமுறைபடியும், காமராஜரின் குடும்பத்தினர் வேண்டுகோளின்படியும், அவர் உடலை ஏறியூட்டி இறுதி சடங்கு செய்வதற்கான இடத்தை கலைஞரே நேரடியாக நின்று இரவு முழுவதும் தயார் செய்தார்.
அதேபோல்தான், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களும் காமராஜர் மீது மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். அதன் விளைவாக எம்ஜிஆர் எப்போதும் பேசும்போது, காமராஜர் என்னுடைய தலைவர் எனவும், அண்ணா என்னுடைய வழிகாட்டி எனவும் குறிப்பிட்டு பேசுவார். இதை ஒரு சிலர் அண்ணாவிடம் கூறியபோது, அண்ணா அதை பெரிதுபடுத்தி கொள்ளவில்லை. இதில் ஏதும் தவறு இல்லையே என்று தான் கூறியிருக்கிறார். காமராஜருடைய 60-வது பிறந்தநாள் சிறப்பு மலரில் காமராஜரை புகழ்ந்து எம்ஜிஆர் கட்டுரை எழுதி இருக்கிறார். இப்படி திராவிட தலைவர்கள் அனைவரும் காங்கிரசை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறார்களே தவிர காமராஜரை அவர்கள் எதிர்த்தது இல்லை என்பது தான் உண்மை.
இந்த உண்மைகளை புரிந்துகொள்ளமல், கடந்த சில தினங்களுக்கு முன் காமராஜர் பிறந்தநாள் அன்று ஒரு நிகழ்ச்சியில் பேசிய, திருச்சி சிவா எம் பி அவர்கள் கலைஞர் குறித்தும், காமராஜர் குறித்தும் பேசிய ஒரு தகவலை குறிப்பிட்டு, டெல்லியில் காமராஜரை தூங்கி கொண்டு இருந்த போது அவர் வீட்டிற்கு தீ வைத்து கொல்ல முயன்ற ஆர்எஸ்எஸ் கூட்டம், அதை திருத்தி பேசி திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்படுத்தும் விதமாக பிரச்சனையை எழுப்பி உள்ளனர். இதை புரிந்து கொள்ள கூட பக்குவம் இல்லாத சில காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவையும் திமுக தலைவர்களையும் குறிப்பிட்டு வசைப்பாடி வருகிறார்கள். இன்றைய சூழ்நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் பேசக்கூடிய பேச்சுக்கள் பலருக்கு மன வருத்தங்களை அளிக்கக் கூடிய வகையில் அமைந்துவிடும். இதுபோன்ற செயல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் இன்றைய அரசியல் சூழலை மாற்ற உழைத்துக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி, உள்ளிட்ட காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கக்கூடிய சூழல் அமைந்துவிடும். ஆகவே, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் காரசாரமான வாக்குவாதத்தை தவிர்த்து கொள்வது நல்லது.