வீ.அரசு 
”சோவியத் மலர்! சோர்ந்தவர்களாகி, பாமரர் விவேகிகளாகி, பாட்டாளியும் பராரியும் ஆட்சியாளர் பாலைவனம் புன்னகைப் பூந்தோட்டமாகி, எலும்பு எழில்மிகு உருவமாகி, ஏவலர் ஏறுகளாகி, முயல்களின் முழக்கத்தைக் கேட்டுப் புலிகள் பயந்து செத்து, அன்னக் காவடிகளின் ஆவேசங்கண்டு சொர்ணக்காவடிகள் சுருண்டுவிழுந்து, குப்பை மேட்டுக் சுக்குரல், கோபுரத்தைக் குமுறவைத்த வீரவிளையாட்டை செய்துகாட்டி, அற்புதத்தை நிரந்தரமாக்கி, அவனியெங்கும் அந்த அற்புதத்தை ஏற்படுத்தமுடியும், ஏற்படுத்த, இமையவளிடம் ஞானப்பால் உண்டவரோ, ஏடு எதிர்நோக்கிச் செல்லச் செய்யும் ஜாலக்காரரோ தேவையில்லை, எவரும் செய்யலாம், உறுதியுடன் உழைத்தால், என்ற உண்மையை உலகுக்கு உரைத்த சோவியத் ரஷியாவிலே, இருபத்தி ஐந்தாண்டுகளுக்கு முன்னம் ஏற்பட்ட புரட்சிக் கொண்டாட்டத்தின் நினைவுக்குறியாக, இவ்விதழ் வெளியிடுகிறோம்.
சோவியத் புரட்சியின்போதிருந்த காட்சிகள் சில தீட்டியுள்ளோம். சோவியத் நாட்டிலே இதுபோது நடைபெறும் போரிலே, உள்ள நிலைமை பற்றிய கட்டுரைகளும் உள்ளன. சோவியத் மக்கள் சோர்வின்றி நடத்தும் இந்தப்போர், உலகிலே நடைபெறும் இரண்டாவது மாபெரும் புரட்சியின் முதலாவது கட்டம் என்பதே நமது கருத்து.

இருபத்தைந்தாண்டுகட்கு முன்பு ஏற்பட்டது சோவியத்திலே, புரட்சி. அதன் வாடை, ஐரோப்பா, ஆசியா கண்டங்களிலேயும் வீசலாயிற்று. இன்று பொதுஉடைமையைப் பொசுக்கவேண்டுமென்று பீர் கடையிலே பிதற்றும் பேயன்வாழும், ஜெர்மனியிலேயே, சமதர்ம வாடை வீசிற்று. சீனாவிலே சமதர்மம் முளைத்தது.
பிரான்சிலே சமதர்மிகள் ஆட்சியும் நடத்தினர். சமதர்மப் பிரசாரமும், சமதர்மக் கிளர்ச்சியும் பலமாகிக்கொண்டே வந்தது. முதலாளிகள் மூலையில் அமரவும், மன்னிப்பு கோரவும், தமது முறைகளுக்குப் புதிய கருத்துரைகளைக் கூறவும், தொழிலாளரைத் தட்டிக்கொடுக்கவும், தயவுசெய் என்றுரைக்கவும். இலாபப் பங்கீடு தருவோம் என்று கூறவும் தொடங்கினர்.
இந்த வேகத்தைக் குறைத்து, சமதர்மப் பூங்காவை அழித்து, சர்வாதிகாரக் கள்ளியைப் படரவைத்த குடிலர்கள் மூவர், முதலிலே முசோலினி, பின்னர் ஹிட்லர், மூன்றாவதாக பிராங்கோ, மூலைக்குச்சென்ற முதலாளித்தனத்துக்கு, முலாமிட்டழைத்து, முடிசூட்டி வைத்த மூன்று முரடர்களிலே, ஸ்பெயினிலே இருப்பவர். சக்தியுடன் கொஞ்சம் யுக்தியுங் கொண்டவர். எனவே, அவர் சபை புகாமல், திரைமறைவிலேயே இருந்துவருகிறார். தோல் கிழிந்த முரசானான் முசோலினி! ஹிட்லர் மட்டுமே, ஒரு வீர இனத்தின் மூடபக்தியை முதலாக வைத்து சமதர்மத்தைச் சாய்க்கும் சூதாட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த வெறியை, அடக்க நடக்கும் மாபெரும் இரண்டாம் புரட்சியின் ஒரு கட்டமே, இன்று நடைபெறும் போர்.

இந்தப் போரிலே, நேசநாடுகளின் முகாமிலே இருப்பதைப் பெருமையெனக் கொள்கின்றனர். இந்தப் போரிலே, சமதர்மம் சாய்ந்து போகுமானால், முதலாளித் சமதர்மம் தனத்தின் எதிர்த்தாக்குதல் வெற்றிபெற்று, கார்ல் மார்க்சின் கல்லறை பிளந்தெறியப்பட்டு, லெனின் சிலைகள் தூளாக்கப்பட்டு, ஸ்டாலின் சித்ரவதை செய்யப்பட்டு, சமதர்ம வரலாறுகள் சாம்பலாக்கப்பட்டு, ஏழை அழுத கண்ணீரில், ஏழைகளின் தலைகள் அறுபட்டு மிதந்துகிடக்கவும், அதிலே, முதலாளிமார்கள் ஒய்யார ஓடத்தைச் செலுத்தி, உல்லாசப் பயணம் புரிவர் என்பதும் தெரிந்தவர்கள். இன்றைய போரிலே, அச்சு நாட்டுக்கு எதிரிடையாக இருப்பவர் எவராயினும் நம் தோழர், அச்சு நாட்டுடன் இச்சை கொண்டோர் எவராயினும் அவர் தமது எதிரி, என்ற எண்ணத்தை உறுதியாகக் கொண்டுள்ளார்.” (திராவிட நாடு 15.11.1942)
மேலே உள்ள வரிகள் காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை (1909-1969) என்ற அறிஞர் அண்ணா அவர்கள், திராவிட நாடு இதழ், சோவியத் மலரில் எழுதியது. அண்ணா 08.03.1942 முதல் 03.02.1963 வரை நடத்திய திராவிட நாடு, இதழில் சோவியத் மலர் வெளியிட்டு, அதில் ‘வாழ்க சோவியத்’, ‘மாஸ்கோ ரேடியோ’, ‘சோலியத் கொரில்லா’, ‘சோவியத் விகடம் ‘மாஸ்கோ மணம்’, ஆகிய கட்டுரைகளை அவ்விதழில் எழுதியுள்ளார். இக்கட்டுரைகளில் காணப்படும் செய்திகளைத் தொகுத்துக்கொள்வோம்.
“தோற்காது! வால்கா நதிக்கரையிலிருந்து, விளாடிவாஸ்டாக் வரையிலே, ஜெர்மானியர் தமது பிணங்களைக் குவித்து, அதன்மீது டந்துசெல்ல வேண்டும்! ஓர் அடி ரஷிய நிலத்துக்கு, ஒரு ஜெர்மானியனின் உயிர்தான் ரஷியா விதித்துள்ள விலை! சோவியத்தை இந்த முறையான விலை கொடுத்து வாங்க, மக்களின் உயிரை மண்ணென மதிக்கும் ஹிட்லராலும் முடியாது!
மண்டைமீது ஓங்கி அடித்தாலும், வெறிநாய் தனக்குச் சாவு நிச்சயம் என்பதை உணர்ந்து ஓடாது வெறி அதிகரித்து, மேலும் பாயும்! விவேகமிருப்பின், நாஜிகள், ஸ்டாலின் கிராட் சமரிலேயே பாடம் தெரிந்துகொண்டு ஓடியிருப்பர். ஆனால், வெறிநாய்கள் வோல்கா நதிக்கரையை விட்டு ஒழியவில்லை! அவர்களை விரட்டியடிக்கா முன்பு வீர ரஷியரும் ஓயப்போவதில்லை. நிலங்களை நாசமாக்குவது எளிது, ரஷிய நினைப்பை நாசமாக்க முடியாது. அது ஜார் கொடுமை எனும் நெருப்பிலே வெந்து, புரட்சிச் சம்மட்டியால் அடித்துக் கூராக்கப்பட்ட அரிவாள்! அது நாஜியின் நினைப்பை அறுத்தொழிக்கும் என்பதை அறிவாளிகள் அறிவர்” (திராவிட நாடு 15.11.1942).
இரண்டாம் உலகப் போரின்போது இட்லரின் நாஜிப் படைகள், சோவியத் நாட்டைத் தாக்கியபோது, சோவியத் செஞ்சேனை எவ்வாறு எதிர்த்துப் போரிட்டது என்பதற்கான குறிப்புகளை மேலே காண்கிறோம். இந்தப் போர் நடந்துகொண்டிருந்தபோது, அப்பாவியான ஜெர்மன் மக்களை எவ்வாறு இட்லர் கொடுமைக்கு ஆளாக்குகிறான் என்பதாக அண்ணா எழுதுகிறார்.
“படை தோற்றால் சண்டை தோற்றது என்பது, மற்ற இடங்களில் நடப்பது. சோவியத்திலே, அன்று! படை அழிந்தாலோ அல்லது பின்வாங்கினாலோ, களத்திலே இல்லை என்று மட்டுமேதான் கூற முடியும், சண்டை தீர்ந்துவிட்டது என்று கூறமுடியாது. காட்டிலே, கணவாயிலே, மலைச்சரிவிலே, ஜெர்மன் முகாமுக்கருகே, வளைவிலே, எங்கு சோவியத் கொரில்லா இருப்பான், என்ன செய்வது பகலிலா, இரவிலா, எந்த நேரத்தில் எப்போது வருவான், என்று கூறமுடியாது. போர் எங்கும் தோன்றும் திடீரென்று, எந்தச் சமயத்திலும் வரக்கூடும். கையில் கிடைத்தது ஜெர்மானியன் கையிலே தப்பித்தவறி சிக்கினாலோ, அவன் வாய் திறவாது, மற்ற கொரில்லாப் படையினர் எங்கே உள்ளனர் என்பதைக் கூற மாட்டான், என்ன செய்தாலும் எவ்வளவு இம்சை செய்தாலும் டாங்கியின் இரும்புப்பற்கள் கொண்ட சக்கரத்திலே கட்டி, டாங்கி ஓட்டுவதை விடவா, சித்ரவதை வேறு இருக்க முடியும்! சோவியத் கொரில்லாவை இத்தகைய சித்ரவதை செய்தும், வாய் திறக்கவில்லை.
செஞ்சேனை, சிறிப்பாயும் புலியன்று, சோவியத் கொரில்லா நெளித்து தீண்டிடும் நாகம்! அதன் பற்களைக் கண்டு, ஜெர்மானியர் பதறிக்கிடக்கின்றனா்
இந்த வரிகள், நாஜிக்களுக்கு எதிரான போரில் சோவியத் கொரில்லப் படை எவ்வாறு போரிட்டது என்பதை, அண்ணா அவர்களுக்கே மொழியில் பதிவுசெய்திருப்பதைக் காண்கிறோம்.
இவ்வாறு இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த 1939- 1945 காலச் சூழலில், சோவியத் நாட்டிற்கு ஆதரவாக அண்ணா செயல்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ‘ரஷிய தினம்’ உலகில் கொண்டாடப்படுவதையும் (திராவிட நாடு 14.11.1943) அண்ணா பதிவுசெய்திருக்கிறார்.
“மாஸ்கோவிலே, சிவப்புக்கொடிகள் கெம்பீரமாகப் பறக்கின்றன. எங்கு பார்த்தாலும், மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரில் படங்கள் தொங்கவிடப்பட்டிருப்பதுடன், ஆங்கில ரஷிய அமெரிக்கக் கூட்டுறவு நீடூழி வாழ்க என்ற எழுத்துகள் கொண்ட அட்டைகள் பல இடங்களிலே தொங்கவிடப்பட்டிருக்கின்றன.
பேசியதுடன், நேசநாட்டினர், ரஷியாவுக்குப் போர்ப்பொருள் உதவி தோழர் ஸ்டாலின் விழாவிலே பேசுகையில், இக்கூட்டுறவைப் பாராட்டிப் வருவதைப் பாராட்டியுள்ளார். ஜெர்மன் உற்பத்தி வட்டாரங்களை, நேசநாட்டு விமானப் படை அழித்துவருவதையும் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்! (திராவிட நாடு 14.11.1943)
இவ்வகையில் சோவியத் நாட்டின்மீது அண்ணாவிற்கு இருந்த ஈடுபாடு, அவருக்கு அபேதவாதம் (சோசலிசம்) மீது இருந்த கருத்துநிலையைக் காட்டுவதாக அமைகிறது. 1930-களில் மார்க்சியம் அல்லது கம்யூனிசம் என்பதை அபேதவாதம் என்று அழைக்கும் மரபு இருந்தது. இந்த அபேதவாதம் குறித்து அண்ணா அவர்களின் பதிவு பின்வருமாறு அமைகிறது.
“அபேதவாதம் அமலுக்கு வரும்போது, எல்லாச் சமூகங்களுக்குள்ளும் சமத்துவம் ஏற்படுமென்று நம்பினால் மட்டும் போதுமோ? அந்த நம்பிக்கை ஒன்றே போதுமானது என்று கூறுவது அபேதவாதக் கொள்கைகளை நன்குணராதவர்கள் கூற்றாகும். அபேதவாதம் வெகு காலத்துக்குப்பின் அமலுக்கு வரப்போகிற ஒரு லக்ஷ்யமாக இராமல், கிரியாம்சையில் நடத்திக் காட்டக்கூடிய ஒரு திட்டமாக இருக்கும் பக்ஷத்தில், அபேதவாதி கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், அவனுக்கு சமத்துவத்தில் நம்பிக்கையுண்டா, இல்லையா என்பதல்ல. சமூக ஏற்பாடு காரணமாகவோ ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பாரைக் கொடுமைப்படுத்துவதை அவன் ஆதரிக்கிறானா, ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பாரை மேற்கொண்டும் கொடுமைப்படுத்துவதைச் சகித்துக்கொண்டிருப்பானா? இந்தக் கேள்விகளின் உட்பொருளைச் சகலரும் உணரும் பொருட்டு என் கருத்தைக் கொஞ்சம்கூட விளக்கிக் கூறுகிறேன்.
ஒரு சமூகப் புரட்சியுண்டாகாமல் அபேதவாதிகள் விரும்பும் பொருளாதாரச் சுதந்தரம் ஏற்படப்போவதில்லை என்பது நிச்சயம். புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால், ஏழை எளியோர் முன் வந்துதான் ஆகவேண்டும். அத்தகைய ஒரு புரட்சி செய்ய இந்திய பாமர ஜனங்கள் ஏனையோருடன் சேருவார்களா? மக்களுக்குள் அத்தகைய ஏகோபித்த ஒற்றுமை ஏற்படத் தூண்டுதலாயிருக்கவேண்டியது எது? ஏனையோர் தம்மைச் சமத்துவமாகவும், சகோதர பாவனையிலும் நீதியாகவும் நடத்துகிறார்கள் என்ற நம்பிக்கையிருந்தால்தான் பாமர ஜனங்கள் மற்றவர்களுடன் சேருவார்கள்.
புரட்சிக்குப்பின் தம்மைச் சரிநிகர் சமானமாக நடத்துவார்கள் என்றும் ஜாதி, மத வித்தியாசம் பார்க்க மாட்டார்கள் என்றும் பாமர ஜனங்கள் நம்பவில்லையானால், அவர்கள் ஏனையோருடன் சேர்ந்து புரட்சி செய்ய முன்வருவார்களா? புரட்சியைத் தலைமை வகித்து நடத்தும் அபேதவாதியும் தனக்கு ஜாதியில் நம்பிக்கையில்லை என்று மட்டும் கூறினால் போதாது. புரட்சியில் ஈடுபடுவோர் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சமத்துவ சகோதர உணர்ச்சி தோன்ற வேண்டும்; நிலைபெற்றிருக்க வேண்டும். ஏழை பணக்காரர் என்ற பேதத்தைத் தவிர, வேறு பேதங்கள் இல்லையென்று இந்தியப் பாமர ஜனங்கள் உண்மையாகவே நம்புகிறார்கள் என யாருக்காவது கூறமுடியுமா? ஏழை எளியோருக்குள்ளே ஜாதி மத வித்தியாசங்கள் இல்லையென்று யாருக்காவது கூறமுடியுமா? ஜாதி மத வித்தியாசங்கள் இருந்தால், இந்தியர்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து புரட்சி செய்வது சாத்தியமா? இந்தியாவில் ஒரு புரட்சி தோன்றி, அபேதவாதிகள் வெற்றிபெற்று, அரசியலைக் கைப்பற்றிக்கொண்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அந்த விசேஷ நிலைமை ஏற்பட்ட பிறகு சமூகப் பிரச்சினைகளை அபேதவாதிகளுக்குத் தீர்த்துவைக்க முடியுமா? ஜாதி உயர்வு தாழ்வுப் பிரச்சினையை முடிவுசெய்யாமல் ஒரு வினாடி நேரமாவது அபேதவாத அரசியல் நடைபெற முடியாது என்பது நிச்சயம். வாய்ப்பந்தல் போட்டு வெறும் வார்த்தைகளால் மழுப்பாமல் உண்மையான பொருளாதாரச் சுதந்தரம் ஏற்பட அபேதவாதிகள் அந்தரங்க சுத்தியாக விரும்பினால் ஜாதி, உயர்வு தாழ்வை ஒழிக்கத்தான் வேண்டும். எனவே, சமூக சீர்திருத்தம் செய்யவேண்டியதே அபேதவாதியின் முதல் வேலை. சமூக சீர்திருத்தம் செய்யாமல் புரட்சி நடத்தவே முடியாது.”
இவ்வகையில் சமூகப் புரட்சி பற்றிய கருத்துநிலையை அண்ணா கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

அண்ணா அவர்கள், 1934ஆம் ஆண்டு தமது பிஏ. ஆனர்ஸ் எனப்படும் எம்ஏ. பொருளாதாரப் பட்டப் படிப்பை முடிக்கிறார். 1935ஆம் ஆண்டு முதல் பெரியார் ஈ.வெ.ரா. (1879-1973) வோடு சுயமரியாதை இயக்கத்தில் செயல்படத் தொடங்கிவிடுகிறார். 1937ல் நடந்த பல சுயமரியாதை மாநாடுகளில் தலைமையுரை நிகழ்த்துகிறார். 1940ல் தந்தை பெரியார் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ எனும் கோரிக்கையை முன்வைத்துச் செயல்படத் தொடங்குகிறார். 1935 -1948 காலங்களில் பெரியாரோடு இணைந்து செயல்பட்ட அண்ணா அவர்களுக்கு இருந்த கருத்துநிலையைப் பின்கண்ட பதிவு உறுதிப்படுத்துகிறது.
- “தமிழ் மொழி -இதுவே நாம் தமிழர் என்பதைக் காட்டுவது. இதற்கு ஆபத்து வந்துவிட்டால், நமது ஒற்றுமை, கலை, நாகரிகம், யாவும் நாசம்! ஆகவே, தமிழைக் காப்பாற்றுங்கள்.”
- “வகுப்புவாரி பிரதிநிதித்துவம்- இது சமூகத்திலே ஒரே வகுப்பார் ஏகபோக மிராசு செலுத்தும் ஆபத்தைப் போக்குவது; சகல வகுப்பாரின் பிள்ளை குட்டிகளுக்கும், இது உரிமை தருவது. இது அழிந்தால் எங்கும் ஒரே வகுப்புதான் அதிகாரம் செலுத்தும். மற்ற வகுப்புகள், தாசர்களாகத்தான் வாழ வேண்டும். அது நியாயமா? ஆகவே, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றியே தீரவேண்டும்”
- “இந்துமத தர்ம பரிபாலன சட்டம் நமது தமிழ் நாட்டிலே. கோடிக்கணக்கில் பணம் தர்மத்திற்காக, கோயில்களிடம் ஒப்படைத்து வைக்கப்பட்டிருக்கிறது. தர்மம் தழைக்க வேண்டுமென்று நமது பெரியவர்கள் அதைச் செய்தனர். அந்த தர்மச் சொத்து நியாயமாகக் கொடுக்கப்பட வேண்டுமல்லவா? வேறு யாரும் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நாம் பார்த்துக்கொள்ள மேற்படி சட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஆபத்து வந்தால், தர்ம சொத்தில் கண்டவர் கை வைத்துவிடுவார்கள். ஆகவே, அந்தச் சட்டத்தைக் காப்பாற்றுங்கள்.”
- “இனாம் சட்டம்- உலகத்திலே எங்கு பார்த்தாலும் சமதர்மம் பேசப்பட்டுவருகிறது! அந்தச் சமதர்மத்தின் அடிப்படையான கொள்கைதான் இந்தச் சட்டம். லக்ஷக்கணக்கான குடியானவர்களுக்கு, இந்தச் சட்டத்தால், நிலபாத்யதை உரிமை ஏற்பட்டது. பரம்பரையாகப் பாவம் இந்தக் குடியானவர்கள் உழுது உழுது, ஒரு குழி நிலம்கூட தங்களுக்கு என்று இல்லாமல் வாடினார்கள். அப்படிப்பட்ட குடியானவர்களில் இலட்சக்கணக்கானவர்களுக்கு இந்தச் சட்டம் நன்மை தந்தது. இதை ஒழிக்கக் கங்கணங் கட்டிக்கொண்டு பலரிருக்கிறார்கள். தமிழர்களே! சமதர்மிகளே! வாலிபர்களே! இனாம் சட்டத்தைக் காப்பாற்றத் தயாராக இருங்கள்”. (பேரறிஞர் அண்ணா சொற்பொழிவுகள்: தொ.1.2007:25-26)
இந்த நிலைப்பாட்டிலிருந்தே அவர் அபேதவாதம், கம்யூனிசம், மார்க்சியம் எனும் கருத்து நிலைகளைப் புரிந்துகொண்டு செயல்பட்டிருக்கிறார். அதனைப் புரிந்துகொள்ள கீழ்க்கண்ட பதிவு உதவும்.
“மார்க்சின் தத்துவம், லெனின் முழக்கம், அக்டோபர் புரட்சி, இவையெல்லாம் மேடையில்!
வீட்டில், பொன்னியம்மாள் புண்ணியம், முதலாளி மனசு இளகவேணும், இவை பேசப்படும் தொழிலாளி மனைவியின் மனம் மட்டுமல்ல; தொழிலாளியின் மனமேகூட ஜீவாவின் குரலிலே, ஜோஷியின் அறிக்கையிலே கம்யூனிஸ்ட்டுக் கிளர்ச்சியிலே ஈடுபடுவதைவிட விநாயகரகவலிலோ விளக்கு வைத்துப் பார்ப்பதிலோ,சனி கோயில் பூஜையிலே சோதிடர் சொன்னதிலோதான் அதிகமாக ஈடுபடும். இந்த மனப்போக்குதான், சகித்துக்கொள்ளும் தன்மையை, ‘நம்மால் என்ன ஆகும்’ என்ற சலிப்பை வளரச் செய்துவிட்டது! திராவிடர் கழகத்தாராகிய நாம், மே தினத்தன்று இந்த மனப்போக்கை மாற்றும் பணி புரிவதன் மூலம், பாட்டாளிகளின் பிரச்சினையில் மற்றவர்கள் கவனிக்கத் தவறிய, ஆனால் முக்கியமான பகுதியை வலியுறுத்துகிறோம்.

பூர்ஷுவா (முதலாளித்துவம்) என்ற தத்துவத்தை விளக்குகின்ற யாரும், அது சுரண்டும் முறை பிறனுடைய உழைப்பால் வாழும் முறை என்று கூறுவர். நாம் ஆரியம் என்று கூறுவது, இதே நிலையைத்தான். சுரண்டும் முறை தொழிலின் பேரால் அல்ல, மதத்தின் பேரால் -ஜாதியின் பேரால்-பழைமையின் பேரால்! புரோலோடேரியன், பாட்டாளி என்று பேசும்போது, நம் கண்முன் தோன்றும் உருவம், உழைத்து உருக்குலைந்து, தன் உழைப்பை வேறு யாராரோ பறித்துக்கொள்ளக் கண்டு பதறி, அதனை மாற்ற முடியாததால் திகைத்துத் தலைமீது கையை வைத்துக்கொண்டிருக்கும் ஏழையின் உருவமே. திராவிடன் அத்தகைய உருவந்தான்! ஆகவே, பூர்ஷுவா என்பதற்குப் பதில், நம் நாட்டு நிலையைக் கவனித்து, ஆரியன் என்கிறோம்; புரோலோடேரியன் என்பதற்குப் பதில் திராவிடன் என்கிறோம். வர்க்கப் போராட்டம் என்பதுதான், இங்கு நாம் கூறும் ஆரிய திராவிடப் போராட்டம்!” (பேரறிஞர் அண்ணா சொற்பொழிவுகள்: தொ.1.2007:211-212)
இவ்வாறு கிராலிடம் எனும் கருத்துநிலை சார்ந்து செயல்பட்ட அண்ணா, மே தினத்தைக் கொண்டாடுவதில் உள்ள உரிமையையும் பதிவுசெய்கிறார். அப்பகுதி பின்வருமாறு:
“மே தினம், கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் ஏகபோக மிராசுப் பாத்யதை அல்ல, மே தினம் கம்யூனிஸ்ட்டுகள் கட்சி ஆள வந்த பிறகு ஏற்பட்ட சம்பவமும் அல்ல. மே விழா, ரஷியாவிலே அல்ல முதன் முறையாக கொண்டாடப்பட்டது. மேதினி எங்குமே மே தினம் கொண்டாடப்படுகிறது. இதே நேரத்தில், உலகிலே பல்வேறு பட்டணங்களிலே, மே விழா, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்டாலின் பேசிக்கொண்டிருப்பார் மாஸ்கோவில் அதுபோன்று ஒவ்வொரு தலைநகரிலும், தலைவர்கள் மே தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருப்பர். புரட்சி தினம், செஞ்சேனை தினம் என்ற விழாக்கள் ரஷியாவிலே விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், அவை அங்கு மட்டுந்தான். உலகிலே வேறு நாடுகள் இந்த விழாக்களை, சோவியத் ரஷியாவுக்கு மட்டுமே சொந்தமான விழா என்று கருதுகின்றன. எனினும் இந்த மே தினத்தை மேதினி எங்கும் உள்ளவர்கள், எமக்கும் அந்நாள் விழாதான் என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு, இன்று பிரபல்யம் அடைந்துவிட்டது. ஆகவே, மே தினம், கம்யூனிஸ்ட்டுகளின் விழா என்று கருதுவதும், அதனைத் திராவிடர் கழகத்தார் கொண்டாடவேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவதும், சரியல்ல”, (பேரறிஞர் அண்ணா சொற்பொழிவுகள்: தொ.1.2007:204)

தமிழக அறிவுச் சூழலில், இடதுசாரி இயக்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவை 1920 -1950 என்ற காலங்களில் செயல்பட்ட வரலாறு வீரியமானது. இதில் அண்ணா எவ்வகையான கருத்து நிலையில் செயல்பட்டார் என்பதற்கான புரிதலாக இக்கட்டுரையைக் கருதலாம். 1935 – 1948 காலத்து அண்ணாவைப் புரிந்துகொள்ள இப்பதிவுகள் உதவும்.
சான்றாதாரங்கள்:
- பேரறிஞர் அண்ணா சொற்பொழிவுகள்:
தொ. 1. பூம்புகார் பதிப்பகம். 2007. இரண்டாம் பதிப்பு. - வலைதளம்: அண்ணாவின் படைப்புகள்
https://www.annavinpadaippugal.info/home.htm



