spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

-

- Advertisement -

சுகுணா திவாகர்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

75 ஆண்டுகளைக் கடந்து பவளவிழா கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், அரசியல் தளத்தில் என்ன சாதித்தது என்றால் ஒரு நீண்ட பட்டியலே போடலாம். சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம், தமிழ்நாடு பெயர் சூட்டல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை, உள்ளாட்சிப் பதவிகளிலும் அரசு வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உள் இடஒதுக்கீடு என்று அரசியல் தளத்தில் பல சாதனைகளைச் செய்திருக்கிறது, தி.மு.க. ஒப்பீட்டளவில் திராவிடக் கட்சி என்று கருதப்படும் அ.தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்தாலும் தமிழ்நாட்டில் சமூக நீதி சாதனைகளை நிகழ்த்தியது தி.மு.க.வே. மேலும் கல்வி, மருத்துவம், சாலைகள், பாலங்கள் என்று தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புகளை உருவாக்கியதில் தி.மு.க.வுக்கே அதிகப் பங்கு உண்டு.

we-r-hiring

இன்று தி.மு.க.வின் அரசியல் செயற்பாடுகள் தமிழ்நாட்டைத் தாண்டி தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகின்றன. ஏற்கெனவே மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் துணைநின்றது. மாநில முதல்வர்களுக்குத் தேசியக்கொடியேற்றும் உரிமை பெற்றது. தமிழுக்குச் செம்மொழித் தகுதி என்று கலைஞர் காலத்திலேயே தி.மு.க. தேசிய அரசியலைப் பயன்படுத்திப் பல சாதனைகளைச் செய்தது. இன்று மு.க.ஸ்டாலின் காலத்தில், தி.மு.க.வின் கருத்தியல் முக்கியத்துவம் உணரப்படும் பரப்பு அதிகரித்திருக்கிறது. மொழியுரிமை, மாநில உரிமைகள் ஆகியவற்றைத் தி.மு.க. முன்னெடுத்த காலத்தில், அது குறுகிய நோக்கம கொண்ட பிரிவினைவாத இயக்கமாகச் சித்திரிக்கப்பட்டது.

ஆனால் இன்று திமுக.வின் மொழியுரிமை, மாநில உரிமைகள் குறித்த அரசியல் பல மாநிலங்களிலும் முன்னெடுக்கப்படுகிறது. பெரியார் காலத்தில் இருந்து திராவிட இயக்கத்தின் உயிர்நாடியாக இருக்கக்கூடிய இடஒதுக்கீடு குறித்த புரிதலும் தேவையும் இன்று இந்திய அரசியலின் பேசுபொருளாகியுள்ளது இந்திய அளவில் சமூக நீதிக்கான கூட்டமைப்பைத் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திமுகவின் அரசியல் பங்களிப்புகளையும் சமகாலப் பொருத்தப்பாடுகளையும் பேசும் அதே நேரம், அதன் பண்பாட்டுப் பங்களிப்புகள் குறித்தும் பேச வேண்டும். ஏனெனில், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறுமனே அரசியல் இயக்கம் மட்டுமல்ல, அது பண்பாட்டு இயக்கமும்கூட.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

பெரியார் விட்ட இடமும் தொட்ட இடமும்
தி.மு.க.வின் பண்பாட்டுச் செயற்பாடுகளைப் பற்றி பேசும்போது, ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில்கொள்ள வேண்டும். தி.மு.க என்பது தந்தை பெரியாரைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்ட இயக்கம் பெரியாரிடமிருந்து பிரிந்து உருவான திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரின் பல கொள்கைகளை ஏற்ற அதே நேரத்தில், கடவுள் மறுப்பு, தேர்தல் பங்கேற்பு, பார்ப்பனர்களை இயக்கத்திலிருந்து விலக்கிவைத்தல் போன்ற நிலைப்பாடுகளில் இருந்து மாறுபட்டது. தி.மு.க.வின் பண்பாட்டுச் செயற்பாடுகளும்கூட சில இடங்களில் பெரியாரைத் தொடர்ந்தும் சில இடங்களில் பெரியார் விட்ட இடைவெளிகளை நிரப்பியும் அமைந்தது. சுருக்கமாகச் சொல்வதென்றால், பெரியார் தொட்ட இடங்களும் விட்ட இடங்களுமே தி.மு.க.வின் பண்பாட்டு செயற்பாட்டுக் களங்களுக்கான அடிப்படை.

பெரியாரிடமிருந்து தி.மு.க. வேறுபடும் புள்ளிகளில் ஒன்று, அது வெகுஜன அரசியல் இயக்கம் என்பது. அவரது மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால், பெரியார் ‘வெகுமக்கள் உண்டு என்பதை இல்லை என்றும் வேண்டும் என்பதை வேண்டாம் என்றும் நல்லது என்பதைக் கெட்டது என்றும்’ சொல்லக்கூடியவர். தன்னை ஓர் ‘அழிவுவேலைக்காரன்’ என்று அறிவித்துக்கொண்ட அனார்க்கிஸ்ட் சாதி, மதம், கடவுள், காதல், திருமணம், குடும்பம். குழந்தைப்பேறு, மொழிப்பற்று, தேசியம் என கேள்விக்குட்படுத்தியவர். “மதமே வேண்டாம் என்கிறீர்களே, அதற்குப் பதிலாக என்ன வைப்பது?” என்று கேட்கப்பட்டபோது,

“நடுவீட்டில் மலம் நாறுகிறது என்கிறேன். எடுத்துவிட்டு எதை வைப்பது என்று ஏன் கேட்கிறீர்கள்?” என்றார் பெரியார்.

பெரியார் என்னும் தீவிர சிந்தனையாளரின் உயரத்துக்கு வருவதற்குப் பொதுச்சமூகத்திற்குப் பல நூற்றாண்டுகள் ஆகும். பெரியார் என்னும் தீவிர சிந்தனையாளருக்கும் வெகுமக்கள் பண்பாட்டுக்கும் இருந்த இடைவெளியை நிரப்பியது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான செயற்பாடு எனலாம்.

மதத்துக்கு மாற்றாக மொழி
‘மதத்தை ஒழிப்பதே முக்கியம். அதன் இடத்தில் எதையும் நிரப்ப வேண்டியதில்லை. பகுத்தறிவு, அறமதிப்பீடுகள், சுயமரியாதை கொண்ட வாழ்வே மதத்துக்கான மாற்று’ என்பது பெரியாரின் நிலைப்பாடு. ஆனால், ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் அந்த நிலைப்பாட்டுக்கு வர எத்தனை நூற்றாண்டுக்காலம் பிடிக்கும் என்று தெரியாது.

ஆனால் அதற்கு மாற்றாக, கடவுள், மதத்தின் இடத்தில் மொழியுணர்வை முன்வைத்தது தி.மு.க. உலகத்திலேயே மொழியைக் காக்க தீக்குளிப்பு நடந்தது தமிழ்நாட்டில்தான். மொழியுணர்வை முன்வைத்தே சாதி, மதம் கடந்த பொது அடையாளத்தைத் தி.மு.க. உருவாக்கியது.

மொழி என்னும் அதிகாரக் களம்
மொழி சார்ந்த நிலைப்பாடுகளை, மொழியை வெறுமனே கருத்து வெளிப்பாட்டுக்கான களமாக அணுகுவது, மொழியை வழிபாட்டுக்குரியதாகப் போற்றுவது என்று இரண்டாகப் பிரிக்கலாம். மூன்றாவதாக, ஓர் அணுகுமுறையை அமைப்பியல் போன்ற கோட்பாடுகளை முன்வைக்கும் நவீன சிந்தனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘மொழி என்பது வெறுமனே கருத்து வெளிப்பாட்டுக்கான களம் மட்டுமல்ல, அது அதிகாரத்தைக் கட்டமைக்கும் களமாகவும் இருக்கிறது. சாதியம், ஆணாதிக்கம், நிறவெறி என சமூகத்தில் என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறதோ, அவை அனைத்தும் மொழியிலும் பிரதிபலிக்கின்றன; மொழியின் வழியாகவும் அதிகாரம் உற்பத்தியாகி இந்தச் சிந்தனையை உள்வாங்கிப் பிரதிபலித்த ஒப்பற்ற சுயசிந்தனையாளர், அது சமூகத்தில் பிரதிபலிக்கிறது’ என்கிறார்கள் நவீன சிந்தனையாளர்கள். தந்தை பெரியார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

“அறிஞன், கவிஞன், சான்றோன் போன்ற உயர்வுச் சொற்களுக்கு ஏன் பெண்பால் சொற்கள் இல்லை, அபலை, விதவை, விபச்சாரி போன்ற சொற்களுக்கு ஏன் ஆண்பால் சொற்கள் இல்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார். ‘உயர்திணை என்றால் மக்கள், தேவர், நாகர் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தேவர் யார், நரகர் யார், இலக்கணத்திலேயே ஏற்றத்தாழ்வைக் கற்பிக்கும் சூழ்ச்சிதானே இது?’ என்று பெரியார் எழுப்பிய கேள்வி, மொழிக்கட்டுமானத்தின் மீதான விமர்சனம். தமிழ் இலக்கியங்களில் இருந்த பார்ப்பனிய, மூடநம்பிக்கையை மட்டும் அவர் விமர்சிக்கவில்லை. மொழியின் கட்டுமான அமைப்பில் இருந்த அதிகாரத்தையும் அவர் கேள்விக்குட்படுத்தினார். பெரியாரின் இந்த நவீன சிந்தனையைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் பெரியார் தமிழைக் கொச்சைப்படுத்தினார்’ என்று குற்றம் சாட்டுவார்கள்.

பெரியாரின் மொழி குறித்த இந்த நவீன சிந்தனையை உள்வாங்கிக்கொண்ட தி.மு.க.வின் முன்னணி தலைவர்கள், குறிப்பாகப் படைப்பாளிகளாகவும் கலைஞர்களாகவும் இருந்தவர்கள், மொழியை அதிகார நீக்கம் செய்ய முயன்றனர். இது,தி.மு.க.வின் மிக முக்கியமான பண்பாட்டு செயற்பாட்டுப் பங்களிப்பு.

 அவைதீக தமிழ் மரபு
தி.மு.க. தமிழ் இலக்கியங்களை உயர்த்திப்பிடித்தபோதும் அது வைதீகம் சார்ந்த பக்தி இலக்கியங்களை முன்வைக்கவில்லை.கம்பராமாயணமும் பெரியபுராணமும் தமிழர்களை இழிவுசெய்பவை, அடிமைப்படுத்துபவை என்று ‘தீ பரவட்டும்’ இயக்கம் நடத்தியவர், அண்ணா. பக்தி இலக்கியங்களுக்கு மாற்றாகத் திருக்குறள், சிலப்பதிகாரம் என்னும் சமண இலக்கியங்களைத் தமிழர்களிடம் பரவலாகக் கொண்டுசென்றது, தி.மு.க. இன்று, தமிழர்களுக்கு கம்பராமாயண, பெரியபுராணப் பாடல் வரிகள் பெரிதாகத் தெரியாது. ஆனால், ஒன்றிரண்டு குறள்களாவது அனைவருக்கும் தெரியும். குறளோவியம் எழுதிய கலைஞர், சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட ‘பூம்புகார்’ திரைப் படைப்புககு வசனம் எழுதினார். ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்தில் ‘குண்டலகேசி என்னும் பௌத்த இலக்கியத்தின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கினார்.பழந்தமிழ் இலக்கியங்களைத் தி.மு.க. தொடர்ந்து முன்வைத்தபோதும் அதை நவீன சிந்தனைகளுடன் இணைக்கத் தவறவில்லை.

புதிய அர்த்தங்கள்
‘தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்                                         பெய்யெனப் பெய்யும் மழை.”

என்னும் திருக்குறளை ஆணாதிக்கக் குறள் என்று விமர்சித்தவா் பெரியார். பாரதிதாசனோ, இதை வேறு விதமாக அர்த்தப்படுத்த முயன்றார். கொடைவள்ளலான தலைவன், அவனுக்குத் துணைநிற்கும் தலைவி என்னும் கதைப்பாடலை எழுதிய பாரதிதாசன், தலைவனிடம் உதவி கேட்டு நின்ற வறியவர்களுக்கு ‘கொடைமழை பொழிக’ என்று தலைவி சொன்னதும் ‘பெய்யெனப் பெய்தது மழை’ என்று அர்த்தப்படுத்தினார். ஆனால் கலைஞரோ, பாரதிதாசனைத் தாண்டிய நவீன சிந்தனையைத் தன் திருக்குறள் உரையில் முன்வைத்தார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

‘கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினைவிட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி, பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போல தன்னை அடிமையாக எண்ணிக்கொள்பவளாவாள்’ என்று உரை எழுதினார் கலைஞர். ‘மழை என்பது இயற்கைச் செயற்பாடு. அது, யார் ஆணையிட்டும் பெய்வதில்லை. அப்படி யாராவது ஆணையிட்டுப் பெய்தால், அது இயற்கையான மழையில்லை. அடிமை மழை. அப்படித்தான் கடவுளைக்கூட தொழாமல் கணவனைத் தொழக்கூடிய பெண்ணும் அடிமை’ என்று புதிய பெருள்கோடலை (Interpretation ) முன்வைத்தார் கலைஞர்.

இத்தகைய நவீன சிந்தனை கலைஞரிடம் இருந்ததால்தான், வள்ளுவர் கோட்டத்தையும் பூம்புகாரையும் கட்டியெழுப்பிய கலைஞர் டைடல் பார்க்கையும் உருவாக்கினார்.

மொழியின் அதிகார நீக்கம்
பெரியார் சுட்டிக்காட்டிய மொழியின் அதிகாரத்தை நீக்குவது என்பதை தி.மு.க.வினர் வெறுமனே படைப்புகளில் மட்டும் நிகழ்த்தவில்லை; மாறாகத் தாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலமும் அதிகார நீக்கச் செயற்பாடுகளைத் தொடர்ந்தனர்.

அலிகள் என்ற இழிவுச்சொல்லை மறுத்து, ‘அரவாணிகள்’ என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், பிறகு அதுவும் மதச்சொல்லாடல் என்பதால், ‘திருநங்கைகள்’ என்று தங்களை அழைத்துக்கொண்டனர். கலைஞர் முதல்வரானபோது, ‘திருநங்கைகள்’ என்ற வார்த்தைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கினார். அதுமட்டுமல்ல ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற வார்த்தையை உருவாக்கி, வெகுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்ததும் மொழியின் அதிகார நீக்கச் செயற்பாடுதான். அதே வழியில் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ‘காலனி’ என்னும் சொல்லை நீக்குவது, ‘சமூக நீதி விடுதி’ என்ற பெயர்மாற்றம் என்று மொழியின் அதிகார நீக்கச் செயற்பாடுகளைத் தொடர்கிறார்.

சாதியின் இடத்தில் கல்வி
பாலுங்கிறது பேரு, தேவர்ங்கிறது எங்கே வாங்கின பட்டம்?’ என்பது ‘வேதம் புதிது’ திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற வசனம். இந்த வசனம் இடம்பெற்ற காட்சியிலேயே அடிப்படை முரணிருக்கிறது. தேவர்ங்கிறது எங்கே வாங்கின பட்டம்?’ என்ற கேள்வியை எழுப்புவது ஒரு பார்ப்பனச் சிறுவன். அந்தப் பார்ப்பனச் சிறுவன் அணிந்திருக்கும் பூணூலும் எந்தப் பல்கலைக்கழகத்திலும் வாங்கிய பட்டமில்லை. இது ஒருபுறமிருக்கட்டும், சாதிப்பெயருக்கும் மேலாகப் படித்து வாங்கும் பட்டத்தை முன்னிறுத்தும் நவீன சிந்தனை எங்கிருந்து உருவானது?

1929 செங்கல்பட்டு, முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் தமிழர்கள் தங்கள் சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் பெரியார். பிறகு, அது ஒரு பண்பாட்டுச் செயற்பாடாக மாறி, இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் ‘சாதிப்பின்னொட்டு இல்லாத ஒரு தனித்த நிலமாக’த் தமிழ்நாடு விளங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத சமூகத்திலிருந்து வந்த திராவிட இயக்கத் தலைவர்களான அண்ணா, நெடுஞ்செழியன், அன்பழகன் போன்றோர், தாங்கள் வசனம் எழுதிய திரைப்படங்களின் டைட்டில்களிலும் தங்கள் புத்தகங்களிலும் ‘சி.என்.அண்ணாதுரை எம்ஏ’ என்பது போன்ற பட்டங்களைப் போடத் தொடங்கினர். இத்தகைய செயற்பாடுகளில் இருந்துதான் ‘தேவர்ங்கிறது எங்கே வாங்கிய பட்டம்?’ என்ற கேள்வி எழுகிறது.

‘தோளில் துண்டு அணியக் கூடாது’ என்ற சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவே தோள்களில் துண்டு அணியும் பழக்கத்தைத் திராவிட இயக்கம் உருவாக்கியது. தாங்கள் துண்டு அணிந்தது மட்டுமல்லாமல் சாதி, மத வித்தியாசம் பாராது, மற்றவர்களுக்கும் பொன்னாடை அணிவிப்பதை மரபாக மாற்றியது. திராவிட இயக்கம். ஓர் ஊரில் எல்லாச் சாதிகளையும் சேர்ந்த கழக நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லி விளிப்பதும் திராவிட இயக்க மேடை உருவாக்கிய மரபு மாநாடுகளில் படத்திறப்பு விழாக்களை நடத்தியது திராவிட இயக்கம் இன்றும் டெல்டா மாவட்டங்களில் மத நம்பிக்கையுள்ளவர்கள் வீடுகளிலும் இறந்த 16ஆம் நாள் நீத்தார் நினைவு நாளில் படத்திறப்பு விழாக்கள் நடத்துவது ஒரு மரபாகத் தொடர்கிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

கலைஞரின் பண்பாட்டுப் புரட்சி
வெகுஜனப் பண்பாட்டில் இடையீடு செய்து தி.மு.க. உருவாக்கிய மாற்றங்கள், இந்திய அளவில் வேறெங்கும் நிகழாதவை.

தேவதாசி ஒழிப்புமுறைக்காகப் பெரிதும் செயல்பட்டது, பெரியாரிக்கம். தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த பெண்களைச் சுயமரியாதை இயக்க இளைஞர்கள் திருமணம் செய்வதை ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகவே மேற்கொண்டனர். காமராசர் ஆட்சிக்காலத்தில், மதிய உணவுத் திட்டம். முதியோர் கல்வி, ஓராசிரியர் பள்ளி ஆகியவற்றை உருவாக்கிய நெ.து.சுந்தரவடிவேலு ஒரு பெரியாரிஸ்ட், அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தது ஒரு தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை. பெண் வீட்டார் சார்பாக நெ.து.சுந்தரவடிவேலுவிடம் பேசிய பெரியார், “திருமணத்தில் தாலி கட்ட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். சுந்தரவடிவேலுவுக்கோ அதிர்ச்சி. “நீங்கள்தானே தாலி பெண்ணடிமைச் சின்னம் என்று எங்களுக்குக் கற்பித்தீர்கள்?” என்று தாலி கட்ட மறுத்தார். திருமண உறவும் தாலியும் மறுக்கப்பட்ட, பொட்டுக்கட்டப்பட்ட வாழ்க்கை கொண்ட சமூகப் பின்னணியில் இருந்து ஒரு பெண்ணின் ஆசை என்கிற அளவிலேயே தன் கொள்கையின் தீவிரத்தைத் தளர்த்திக்கொண்டு, அப்படியொரு வேண்டுகோளை வைத்தார் பெரியார். கலைஞர் இன்னும் ஒருபடி மேலே போய், தேவதாசி முறையை எதிர்த்துப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயரை திருமண நிதியுதவித் திட்டத்துக்குச் சூட்டினார். மறுக்கப்பட்ட சமூகத்தின் அவலம் ஒரு காலத்தில் திருமண முறை துடைக்கப் போராடியவரின் பெயரை, திருமண நிதியுதவித் திட்டத்துக்குச் சூட்டியது ஒரு பண்பாட்டுப் புரட்சிதான்.

ஸ்டாலின் ஆட்சியில் பண்பாட்டுச் செயற்பாடுகள்
கலைஞருக்குப் பிறகு, இன்றைய தி.மு.க. தலைவரும் தமிழ்நாட்டு முதல்வருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும் துணை முதல் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற விளிம்புநிலைச் சமூகங்களின் நலன்களில் அக்கறை காட்டுகின்றனர். திருநங்கைகள் உரிமை பாதுகாப்புச் சட்டம், நரிக்குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது ஆகியவற்றுக்காக, நாடாளுமன்றத்தில் குரல்கொடுத்து, வெற்றியும் பெற்றவர் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா. இந்திய அளவிலேயே இப்படி விளிம்புநிலைச் சமூகங்களுடன் உறவு ஏற்படுத்தி, அவர்களின் உரிமைகளுக்காகச் செயற்படும் இயக்கம், தி.மு.க. தவிர வேறில்லை.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பண்பாட்டுத்தளத்தில் என்ன செய்தது தி.மு.க?

பண்பாட்டுச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஈடுபாடு காட்டிவருகிறது. தமிழ்நாட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அவரது அரசு சென்னையில் மட்டும் நடத்திவந்த புத்தகக் காட்சியைத் தமிழ்நாடு முழுவதும் பரவலாக நடத்துவது, இலக்கியத் திருவிழாக்கள், வகுப்பறைகளில் உலக சினிமாக்களைத் திரையிடுவது, கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவது எனத் தொடர்கின்றன. கி.ராஜநாராயணன், தொ.பரமசிவன் என்ற இரு முக்கியமான எழுத்தாளர்களுக்கு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு, உயரிய விருதுகள் பெறும் எழுத்தாளர்களுக்கு வீடு வழங்குவது எனத் தன் பண்பாட்டுச் செயற்பாடுகளைத் தொடர்கிறது.

துண்டு அணிவது, பொன்னாடை அணிவிப்பது போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலாகப் புத்தகங்கள் வழங்குவது என்னும் பண்பாட்டுச் செயற்பாட்டைப் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி, பொன்னாடைகள், சால்வைகளுக்கு பாவலாக்கியிருக்கிறார்.

தி.மு.க.வின் அரசியல் சாதனைகள் பேசப்படும் அதேஅளவில் இன்னும் கூடுதலாக, அதன் பண்பாட்டுச் சாதனைகளும் பேசப்பட வேண்டும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – குன்றின் மேலிட்ட விளக்கும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையும்!

MUST READ