Homeசெய்திகள்கட்டுரைமாற்றம் – முன்னேற்றம் – 21

மாற்றம் – முன்னேற்றம் – 21

-

21. மாற்றம் – முன்னேற்றம் – என்.கே.மூர்த்தி

” போருக்கு செல்லும் போது  கையில் ஆயுதம் கொண்டு செல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. நீ உண்மையான வீரன் என்றால் உனக்கான ஆயுதத்தை நீ செல்லும் போர்களத்திலேயே உன்னால் சம்பாதித்துக் கொள்ள முடியும் ” – சேகுவேரா

இந்த புத்தகம் தொடக்கத்தில் இருந்து தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றியை சுலபமாக்கி விடலாம் என்று வலியுறுத்துகிறது.

மாற்றம் முன்னேற்றம்

தன்னம்பிக்கை என்பது என்ன? நம்பிக்கை என்பது என்ன? தன்னம்பிக்கைக்கும், நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன என்ற நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கைக்கும், நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடுகளை தெரிந்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது மிகவும் சுலபம்.

தன்னம்பிக்கை என்பது தன்னை அறிவது, தன்னை முழுமையாக சுயபரிசோதனை செய்து, உணர்ந்து, அதிலிருந்து சரியானதை தேர்வு செய்து பயணம் செய்வது. வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவது.

உலக வரலாற்றில் இடம் பிடித்த சாதனையாளர்கள் எல்லோரும் தன்னம்பிக்கையுடன் முயன்றவர்கள் தான்.

நம்பிக்கை என்றால் என்ன? நம்பிக்கை என்பது நமக்குள் வெறுப்பை உருவாக்கும். வேறு மதத்தினர் மீது, வேறு சாதியினர் மீது வெறுப்பை பகைமையை காட்டும். என் நம்பிக்கை உயர்ந்தது. மற்றவர் நம்பிக்கை மட்டமானது என்று மனிதர்களை பிரித்து பிரிவினையை உருவாக்கும். நம்பிக்கை இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. ஆழமான நம்பிக்கையாளர்களிடம் போலியான அன்பு, போலியான கருணை இருப்பதை கூர்ந்து கவனித்தால் கண்டுபிடித்து விடலாம்.

அவர்கள் எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று விதியின் மீது நம்பிக்கை வைப்பார்கள்.

என் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அது படி தான் நடக்கும். நாம் ஒன்று நினைக்கிறோம், கடவுள் ஒன்று நினைக்கிறார் என்று போகாத ஊருக்கு வழிகாட்டும் நம்பிக்கையாளர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்களை அருகில் கூட சேர்க்கக் கூடாது.

வெற்றியாளர்கள் எதை வேண்டுமானாலும் இழப்பார்கள். தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவே மாட்டார்கள்.

தன்னம்பிக்கை என்பது என்ன? நம்பிக்கை என்பது என்ன?

வெறும் நம்பிக்கை என்பது கடந்த காலத்திலேயே இருப்பது. கடவுளை,
மதத்தை, சாதியை, கலாச்சாரத்தை, பண்பாட்டை காப்பாற்றுவதில் கவனமாக இருக்கும்.

நம்பிக்கையாளர்கள் புதிய சிந்தனையை, புதிய செயல்பாட்டை, முயற்சியை வரவேற்க மாட்டார்கள்.

நம்பிக்கைக்கும், தன்னம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

தன்னம்பிக்கை உள்ளவர்களுக்கு இலக்கு இருக்கும். எதை கற்பனை செய்தார்களோ அதை அடைய வேண்டும் என்றும் எதை கனவு கண்டார்களோ அதை அடைய வேண்டும் என்று போராடுவார்கள். ஆனால் வெறும் நம்பிக்கையாளர்களுக்கு இலக்கு இல்லை, குறிக்கோள் இல்லை பழைய புராணங்களையும், கட்டுக்கதைகளையும் நம்புவார்கள். அதை பாதுகாப்பார்கள்.

அதனால் நம்பிக்கையின் மீது கேள்வி எழுப்பி, அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

நான் அதிகம் படிக்காதவன் என்னால் எதுவும் செய்ய முடியாது என்ற நம்பிக்கையை உடைத்தெரிய வேண்டும். நான் தரித்திரவாதியாக இருப்பதால் எந்த நல்ல செயலும் எனக்கு நடைபெறாது என்ற தவறான நம்பிக்கையை வளர்த்து வந்திருக்கிறோம். உடனடியாக அதற்கு முடிவு கட்ட வேண்டும்.

நம்பிக்கையே தவறானது தான். கடவுள் நம்பிக்கை, மதத்தின் மீது நம்பிக்கை, சாதியின் மீது நம்பிக்கை என்று நாம் ஏராளமான நம்பிக்கைகளை வளர்த்து வருகிறோம்.

நம்மிடம் உள்ள நம்பிக்கையினால் நமது தரித்திர நிலை ஒழிந்திருக்கிறதா? நாம் வேலை செய்யாமல் உழைக்காமல நமது நம்பிக்கை உணவு அளித்திருக்கிறதா? என்றால் எதுவும் இல்லை.

நமது தேடுதல், நமது ஆர்வம், நமது முயற்சி, நமது வேலை, நமது உழைப்பு இது தான் நமது வெற்றிக்கு காரணம்.

நமது நம்பிக்கை, நம்மை ஏழையாகவே வைத்து இருக்கிறது. நமது நம்பிக்கை நம்மை இயலாதவராகவே மாற்றியிருக்கிறது.

ஒரு கிராமத்தில் பெரிய கிணறு ஒன்று இருந்தது. அந்த கிணற்றுக்கு மிகப்பழமையான, பெருமைக்குரிய கதை ஒன்று உண்டு. அதாவது அந்த கிணற்று தண்ணீரில் ஒரு துளி நீரை பருகினாலும், தலையில் தெளித்துக் கொண்டாலும் அல்லது குளித்தாலும் நமது அனைத்து பாவங்களும் போய்விடும் என்கிற நம்பிக்கை இருந்தது. அந்த கிணற்று நீரை பயன்படுத்தினால் போதும் சொர்க்க லோகத்தில் இடம் கிடைக்கும் என்றும் எழுதி வைத்து இருக்கிறார்கள்.

Well

ஆனால், தற்போது அந்த கிணற்று தண்ணீரில் ஒரு துளி நீரை பருகினாலும் விஷநோய் ஏற்படுவதாகவும், அதில் குளித்தால் உடலில் ஒரு வித அரிப்பு வந்து தோல் நோய் வருவதாக சொல்கிறார்கள். இப்போது நாம் என்ன செய்வோம்? அந்த தண்ணீரில் விஷபூச்சிகள் உற்பத்தியாகி கிணற்றையே கெடுத்து விட்டது. முதலில் அந்த தண்ணீரில் விஷப் பூச்சிகள் சாகும் அளவிற்கு மருந்துகளை கிணற்றுக்குள் போடுவோம். அப்படி போட்ட பிறகும் அந்த தண்ணீரின் தன்மை முன்போலவே அப்படியே இருக்கிறது. கொஞ்சமும் மாறவில்லை. இப்போது என்ன செய்வோம்? மருந்து போட்டும் அந்த தண்ணீரின் தன்மை மாறவில்லை. அந்த அளவிற்கு தண்ணீர் கெட்டுவிட்டது.

இப்போது அந்த தண்ணீர் முழுவதையும் எடுத்து வெளியே கொட்டிவிட்டு, கிணற்றில் மேலும் சில மருந்துகளை தெளித்து பார்ப்போம். அப்பொழுதும் அந்த தண்ணீரின் தன்மை மாறவில்லை என்றால் என்ன செய்வோம்? அந்த கிணறு புனிதமானது என்று அதே நீரை குடித்தும், குளித்தும் வருவோமா அல்லது அந்த கிணற்றில் மண்ணை போட்டு மூடுவோமோ? மண்ணைக் கொட்டி மூடிவிடுவதே சரியானது என்று முடிவெடுப்போம்.

கெட்டுப்போன கிணற்றை மூடிவிட்டு தண்ணீருக்கு வேறு வழியை கண்டுபிடிப்பது தன்னம்பிக்கை. அதே கிணற்றை போற்றி பாதுகாப்பது நம்பிக்கை.

நமது நம்பிக்கைகள் மனிதர்களின் ஒற்றுமையை சிதைத்து வருவதை தினந்தோறும் பார்த்து வருகிறோம். பயம் உள்ளவர்கள், அச்சம் உணர்வு உள்ளவர்கள் நம்பிக்கையை பிடித்துக் கொள்கிறார்கள். அவர்களே வெறுப்பை விதைக்கிறார்கள். அவர்களின் கருத்தை, அவர்களின் கொள்கையை, அவர்களின் உணவை, அவர்களின் கடவுளை மற்றவர்களும் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அமைதியான பூமியை கலவர பூமியாக மாற்றுகிறார்கள்.

இந்த நூலில் நாம் தன்னம்பிக்கையை விதைக்கிறோம். வெறும் நம்பிக்கையை பற்றி ஆய்வு செய்கிறோம்.

என் நம்பிக்கை என்னை எப்படி அழைத்து செல்கிறது? கால காலமாக இருந்து வரும் நம்பிக்கையால் இது வரை நான் அடைந்த பயன் என்ன? இந்த சமுதாயம் அடைந்த பயன் என்ன? என்று தொடர்ந்து நமக்குள் நாம் ஆய்வு செய்வோம்.

சிந்திப்பது என்பது மனித இனத்திற்கு மட்டுமே உள்ள சொத்து. தன்னைப் பற்றி முழுமையாக சிந்திப்போம். கருத்து, கொள்கை, சாதி, மதம், கடவுள் என்று நிறைய நம்பிக்கை உள்ளவர்கள் அந்த வட்டத்திற்குள் நின்றே சிந்திப்பார்கள். அதை நியாயப் படுத்தவே சிந்திக்க முடியும்.

நம்பிக்கையை தூக்கி எரிந்து விட்டு மாற்றத்தைப் பற்றி சிந்திப்போம். மாற்றம் மட்டுமே முன்னேற்றத்தைக் கொடுக்கும்.

தாமஸ் ஆல்வா எடிசன் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் மின்சார பல்பை கண்டுபிடித்தார். அதை சில அறிஞர்களிடமும், நண்பர்களிடமும் விளக்கை எரிய வைத்து காட்ட வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். அதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடங்கியது, தன் உதவியாளரை அழைத்து புதியதாக கண்டுபிடித்திருந்த பல்பை எடுத்து வரச் சொன்னார்.

Edison's Lab

உதவியாளர் பல்பை எடுத்து வரும் போது கை தவறி கீழே போட்டு உடைத்து விட்டார். அவ்வளவு தான் ஒரே பதற்றம். ஆனால் எடிசன் மட்டும் பொறுமையாக யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லோரும் பேசிக்கொண்டிருங்கள். சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று தன்னம்பிக்கையுடன் இயங்கினார்.

ஆய்வு கூடத்திற்கு சென்று மீண்டும் ஒரு புதிய பல்பை தயாரித்தார். அதே உதவியாளரிடம் அதைக் கொண்டு வரச் சொன்னார். மின் விளக்கை எரிய வைத்து காட்டினார். உலகத்திற்கு அர்பணித்தார்.

Edison

சிலர் கேட்டார்கள். அதே உதவியாளரிடம் மீண்டும் பல்பை கொண்டு வரச் சொன்னது ஏன் என்று கேட்டார்கள். எனக்கு தெரியும் என்னால் மீண்டும் அதை தயாரிக்க முடியும் என்று, உதவியாளரின் மனதை காயப்படுத்தி விட்டால் அதை சரி செய்ய முடியாது என்பதும் எனக்கு தெரியும் என்றார்.

அதிகம் படிக்காத தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் அதிக கண்டுபிடிப்பாளராக உயர்ந்து நிற்கின்றார். அவரிடம் தன்னம்பிக்கை மட்டுமே நிறைந்திருந்தது.

MUST READ