spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

பாரபட்சமற்றத் தன்மையைக் கடைபிடியுங்கள்

ஒரு விஷயம் உங்களை முதலில் வந்தடையும்போது, அது குறித்த உங்களுடைய முதல் அபிப்பிராயத்தின் தாக்கம் உங்களை அடித்துப் புரட்டிப் போட அனுமதிக்காதீர்கள் அதனிடம் இவ்வாறு கூறுங்கள்: கொஞ்சம் பொறு நீ யாரென்பதையும் நீ எதைப் பிரதிநுதுப்படுத்துகிறாய் என்பதையும் நான் முதலில் பார்க்கிறேன். உன்னை ஒரு சோதனைக்கு உள்ளாக்குகிறேன் – எபிக்டெட்டஸ்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடே”நடைபெற்ற இந்த விஷயம் மோசமானது” என்ற வாக்கியத்தில் இரண்டு பதிவுகள் உள்ளன. முதலாவது பதிவான ‘நடைபெற்ற விஷயம்’ புறவயமானது. இரண்டாவது பதிவான ‘அது மோசமானது’ என்பது அகவயமானது.

we-r-hiring

பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சாமுராய் வீரரான மியாமோட்டோ முஸாஷி எண்ணற்ற எதிரிகளைத் தோற்கடித்தவர். சில சமயங்களில் வாள் இல்லாமலேயே ஒரே நேரத்தில் பல எதிரிகளை அவர் தோற்கடித்துள்ளார். அவர் எழுதியுள்ள ‘த புக் ஆஃப் ஃபைவ் ரிங்ஸ்’ என்ற நூலில், அவதானிப்புக்கும் உணர்தலுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை அவர் குறிப்பிடுகிறார். உணர்கின்ற கண் பலனமானது என்றும், அவதானிக்கின்ற கண் வலுவானது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

அவதானிக்கண் அங்கு என்ன இருக்கிறதோ அதை மட்டுமே பார்க்கிறது என்பதை மியாமோட்டோ புரிந்து வைத்திருந்தார். ஆனால் உணர்கின்ற கண் கண் அங்கு இருப்பவற்றையும்விட அதிகமானவற்றைப் பார்க்கிறது.

அவதானிக்கின்ற கண், பாரபட்சமின்றி மிகைப்படுத்தல்களின்றி, தவறான புரிதல்களின்றி நிகழ்வுகளைப் பாா்க்கிறது. உணர்கின்ற கண், “கடக்கப்பட முடியாத தடைகள்“ அல்லது “பெரும் பிரச்சனைகளைப் பார்க்கிறது. அது தன்னுடைய சொந்தப் பிரச்சனைகளையும் மோதல் களத்திற்குக் கொண்டு வருகிறது. அவதானிக்கின்ற கண் பயனுள்ளது, உணர்கின்ற கண்ணைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது.

பிரீட்ரிக் நீட்சே கூறியதுபோல, முதல் பார்வையில் ஒரு மேலோட்டமான கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பது சில சமயங்களில் சிறந்த அணுகுமுறையாக அமைந்துவிடும்.

நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விஷயங்களை எடைபோடுவதிலிருந்து எத்தனைப் பிரச்சனைகள் முளைக்கின்றன? ஒரு விஷயத்தைப் பொறுத்தவரை, அங்கு உண்மையில் என்ன இருக்கிறதோ அதை விட்டுவிட்டு, அங்கு என்ன இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அது அங்கு இருப்பதாக எத்தனை முறை நாம் நினைத்திருக்கிறோம்?

பின்னர் நாம் சுதாரித்துக் கொண்டு நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்போது, விஷயங்கள் உண்மையில் எப்படி இருக்கின்றனவோ அப்படி அவற்றை நம்மால் பார்க்க முடிகிறது. நம்முடைய அவதானிப்புக் கண்ணைப் பயன்படுத்தி அதை நம்மால் செய்ய முடியும்.

கண்ணோட்டங்கள்தாம் பிரச்சனையே. நமக்குத் தேவையில்லாத ‘தகவல்களை’ நமக்குத் தேவைப்படாத நேரத்தில் அவை நமக்குக் கொடுக்கின்றன. அக்கணத்தில் நமக்கு முன்னாலுள்ள விஷயத்தில் கவனத்தைக் குவிப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வாளின் வீச்சு ஒரு முக்கியமான தொழில் பேரப்பேச்சு, ஒரு நல்ல சந்தர்ப்பம், ஒரு திடீர் உள்நோக்கு போன்றவை அதற்கான எடுத்துக்காட்டுகள்.

அவதானிப்புக்கும் கண்ணோட்டத்திற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறுக்க நம்முடைய விலங்கு மூளை முயற்சிக்கிறது. சித்தித்தல், எடைபோடுதல், நடவடிக்கை எடுத்தல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரம்கூட இல்லாமல் செய்துவிடுகிறது நம் மூளை.

ஆபத்தைக் கண்டவுடன் ஓடத் தூண்டுகிறது ஒரு மானின் மூளை. ஏனெனில் நிலைமை மோசமாக இருக்கிறது. அதனால் அது உடனடியாக ஓடத் தொடங்குகிறது. சில சமயங்களில், ஆபத்து இருக்கின்ற திசை நோக்கியேகூட அது ஓடுகிறது.

அந்த உள்ளுணர்வு குறித்து நாம் கேள்வி கேட்கலாம். அதனோடு நாம் அதனோடு உடன்பட மறுக்கலாம். அந்தத் தூண்டுதலை மீறி நடக்கலாம். நாம் செயல்நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பாக அந்த ஆபத்தை ஆய்வு செய்யலாம்.

ஆனால் அதற்கு பலம் தேவைப்படும். அந்தத் தசை வலுப்படுத்தப்பட வேண்டும். பயிற்சியின் மூலம் மட்டுமே தசைகளை வலுப்படுத்த முடியும்.

அதனால்தான் மியாமோட்டோவும் அவரைப் போன்ற பிற சாமுராய் வீரர்களும், உடல்ரீதியான பயிற்சிக்குக் கொடுக்கின்ற அதே முக்கியத்துவத்தை மனரீதியான பயிற்சிக்கும் கொடுக்கின்றனர். இரண்டுமே முக்கியம் இரண்டுக்குமே கடுமையான பயிற்சி தேவை.

ஸ்டோயிசிசத்தைப் பின்பற்றுபவர்கள் இது தொடர்பாக ஒரு பயிற்சியை மேற்கொள்கின்றனர். ஒரு விஷயத்தைச் சுற்றியிருக்கின்ற கட்டுக்கதைகளைத் தோலுரித்து காட்டுவதுதான் அது.

மார்கஸ் ஆரீலியஸ் இப்படி ஒரு பயிற்சியைப் பரிந்துரைக்கிறார். விலைமதிப்புள்ள அல்லது வசீகரமான ஒரு பொருளை எந்தவிதமான அழகுத் தோரணங்களுமின்றி வர்ணிப்பதுதான் அது. எடுத்துக்காட்டாக, சமைக்கப்பட்ட இறைச்சியை ஒரு செத்த விலங்காகவும், விலையுயர்ந்த ஒயினை நன்றாகப் புளிக்கவைக்கப்பட்டத்திராட்சையாகவும் கற்பனை செய்யுமாறு அவர் கூறுவார். விஷயங்களை உள்ளது உள்ளபடி, எந்தவிதமான அலங்காரங்களுமின்றிக் காண்பதுதான் இதன் நோக்கம்.

நம் வழியில் குறுக்கே நிற்கின்ற எதைக் குறித்து வேண்டுமானாலும் அல்லது எவரைக் குறித்து வேண்டுமானாலும் நம்மால் இப்படிக் கற்பனை செய்ய முடியும். நாம் மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்ற பதவி உயர்வு, நம்மைச் சிறுமைப்படுத்துகின்ற விமர்சகர்கள் என்று கூறிக் கொண்டே போகலாம். ஒரு விஷயத்தைப் பற்றி நாம் நம்முடைய மனத்தில் வரித்து வைத்திருக்கின்ற பிம்பத்தைவிட, அது உண்மையில் எப்படி இருக்கிறதோ அப்படி அதைப் பார்ப்பது மேலானது.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (5) – ரயன் ஹாலிடேபுறவயப் பார்வை என்பது ‘உங்களை’, அதாவது, அகவயப் பார்வையை அதிலிருந்து நீக்கிவிடுவதாகும். நாம் பிறருக்கு அறிவுரை கொடுக்கும்போது என்ன நடக்கிறது என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். அவர்களுடைய பிரச்சனை நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதற்கான தீர்வுகளும் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஒட்டுமொத்தத்தில், பிறருடைய விஷயத்தைப் பொறுத்தவரை நம்மால் புறவயப் பார்வையைக் கொண்டிருக்க முடியும்.

நம்முடைய நண்பரின் சூழ்நிலையை, அது எப்படி இருக்கிறதோ அப்படியே எடுத்துக் கொண்டு, அதைத் தீர்ப்பதற்கு அவருக்கு உதவுகின்ற நடவடிக்கையில் நாம் இறங்கிவிடுகிறோம். ஆனால் நம்முடைய விஷயம் என்று வரும்போது, நம்மை நாம் கடுமையாக விமர்சித்துக் கழுவேற்றத் துணிகிறோம்.

அப்படிப்பட்டச் சூழலில், அது உங்களுக்கு நடைபெறவில்லை என்பதுபோலவும், அது முக்கியமல்ல என்பதுபோலவும் கற்பனை செய்து கொள்ளுங்கள். என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பது இப்போது எவ்வளவு எளிதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதை இப்போது உங்களால் உணர்ச்சிவசப்படாமல் அணுகி, விரைவாக எடைபோட முடியும். அதைத் தீர்ப்பதற்கான பல வழிமுறைகளை உங்களால் எளிதாகக் காண முடியும்.

ஒரு குறிப்பிட்டப் பிரச்சனையை மற்றொருவரால் எந்தெந்த வழிகளிலெல்லாம் தீர்க்க முடியும் என்று யோசியுங்கள். உண்மையிலேயே ஆழமாக யோசியுங்கள். தெளிவைப் பெற முயற்சி செய்யுங்கள். அனுதாபத்தைப் பெற முயற்சி செய்யாதீர்கள். பின்னர் அதற்கு ஏகப்பட்ட நேரம் இருக்கும். இது ஒரு பயிற்சி என்பதால், இதில் தேர்ச்சி பெறுவதற்கு நீங்கள் இதைப் பல முறை செய்ய வேண்டியிருக்கும். இதை எந்த அளவு முயற்சி செய்கிறீர்களோ அந்த அளவு அதில் நீங்கள் மேம்பாடு அடைவீர்கள். விஷயங்களை உள்ளது உள்ளபடியே பார்ப்பதில் நீங்கள் அதிக அளவு திறமைசாலியாக ஆகின்றபோது உங்களுடைய கண்ணோட்டம் உங்களுக்கு ஆதரவாக வேலை செய்யத் தொடங்கும்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

MUST READ