”சீப்பின் பற்களுக்கு அடியில் சிக்கலும் நேர்ப்பாதையும் ஒன்றுதான்” – ஹெராகிளைட்டஸ்
பயிற்றுவிப்பாளர் நிக் சபான் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவதில்லை என்றாலும்கூட, அவருடைய உதவியாளர்களும், அவருடைய அணியில் விளையாடுகின்ற விளையாட்டு வீரர்களும் அதை ஒரு நெறியாகக் கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் அதைத் தங்களுடைய மனத்தில் பச்சை குத்தியுள்ளனர். ஏனெனில், அந்த ஒற்றை வார்த்தைதான் அவர்களுடைய அசாதாரணமான வெற்றிக்குக் காரணமாக இருந்து வந்துள்ளது. ‘செயல்முறை’தான் அந்த வார்த்தை.
அலபாமா பல்கலைக்கழகக் கால்பந்தாட்டக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர்தான் நிக் சபான். மற்றப் பயிற்றுவிப்பாளர்கள் கவனம் செலுத்துகின்ற விஷயங்களில் நிக் கவனம் செலுத்துவதில்லை. அப்படியே அவர் அவற்றில் எதிலேனும் கவனம் செலுத்தினாலும், அவர் அதைக் கையாண்ட விதம் மற்றப் பயிற்றுவிப்பாளர்களிடமிருந்து வேறுபட்டிருந்தது. நிக் தன் வீரர்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே கற்றுக் கொடுக்கிறார். ‘செயல்முறை’தான் அது.

“அடுத்து வரவிருக்கின்ற எஸ்இசி சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவது குறித்துச் சிந்திக்காதீர்கள். தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளைப் பற்றியும் யோசிக்காதீர்கள். இப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கின்ற இப்பயிற்சியில், இக்கணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மட்டும் சிந்தியுங்கள். அதுதான் செயல்முறை, இன்று நம் கையிலுள்ள வேலை குறித்து நம்மால் என்ன செய்ய முடியும் என்று நாம் சிந்திக்கலாம்.”
வாழ்க்கையைப்போலவே, விளையாட்டுப் போட்டிகளில் உள்ள குழப்பத்திற்கும் செயல்முறைதான் வழிகாட்டுகிறது.
அது இவ்வாறு கூறுகிறது: சரி, நீங்கள் கடினமான ஒன்றைச் செய்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் அதில் கவனம் செலுத்தாதீர்கள். மாறாக, அதைச் சிறு சிறு துண்டுகளாகக் கூறு போட்டுக் கொள்ளுங்கள். இக்கணத்தில் நீங்கள் எதைச் செய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்யுங்கள். அதை உங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்யுங்கள். பிறகு அடுத்த விஷயத்திற்குச் செல்லுங்கள். இச்செயல்முறையைப் பின்பற்றுங்கள்.
ஒரு போட்டியிலிருந்து அடுத்தப் போட்டியை நோக்கிச் செல்வது என்பது ஒரு சாலையில் பயணிப்பதைப் போன்றது. நீங்கள் அந்தப் பாதையில் அடி மேல் அடியாக எடுத்து வைத்துச் செல்வீர்கள். மேதமையும் பல படிகளைக் கொண்ட ஒன்றுதான். முதலில், முதற்படியின்மீது உங்கள் கவனத்தைக் குவிக்க வேண்டும். பிறகு அடுத்தப் படியின்மீது கவனத்தைக் குவிக்க வேண்டும். அதற்குப் பிறகு அதற்கடுத்தப் படியில்! இது இப்படியே தொடரும். நிக்கின் செயல்முறை இதுதான்: நீங்கள் நிகழ்கணத்தில் இருக்க வேண்டும், ஒரு நேரத்தில் ஓரடி மட்டும் எடுத்து வைக்க வேண்டும், வேறு எதனாலும் கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இங்கு கவனம் அடுத்த அணியின்மீதோ, கோல்களின் எண்ணிக்கையின்மீதோ அல்லது இரசிகர்களின்மீதோ இருக்கக்கூடாது.
செயல்முறை என்பது ஒரு காரியத்தின் நிறைவு. இப்போது விளையாடிக் கொண்டிருக்கின்ற விளையாட்டை நிறைவு செய்வது; இப்போது செய்து கொண்டிருக்கின்ற உடற்பயிற்சியை நிறைவு செய்வது; இப்போது நடித்துக் கொண்டிருக்கின்ற நாடகத்தை நிறைவு செய்வது;
இக்கணத்தில் உங்கள் கையிலிருக்கும் ஒரு சிறு வேலையை நிறைவு செய்வது. செய்வதைத் திருந்தச் செய்வது,
அது உங்களுடைய துறையில் உச்சக்கட்ட வெற்றியை எட்டுவதாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு சிக்கலான சூழலிலிருந்து மீள்வதாக இருந்தாலும் சரி, இந்த அணுகுமுறை மிகச் சிறப்பாக வேலை செய்யும்.
இதை நீங்கள் சரியாகச் செய்தால், மிகவும் கடினமான வேலைகூட மிக எளிதாகக் கையாளப்படக்கூடியதாக ஆகிவிடும். ஏனெனில், இச்செயல்முறை உங்களை ஆசுவாசப்படுத்தும். செயல்முறை நடப்பில் இருக்கின்றபோது, நீங்கள் பதற்றம் கொள்ள வேண்டிய தேவையிருக்காது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வானியல் ஆய்வில் முன்னோடியாக விளங்கிய ஜேம்ஸ் போலார்டு எஸ்பை, ஓர் அபூர்வமான சந்திப்பின்போது இச்செயல்முறையைக் கொண்டார். தன்னுடைய பதினெட்டாம். வயதுவரை எழுதப் படிக்கத் தெரியாமலிருந்த ஜேம்ஸ், மிகச் சிறந்த சொற்பொழிவாளரான ஹென்ரி கிளேயின் உரை ஒன்றைக் கேட்டார். அதைக் கேட்டு மெய்மறந்து போன ஜேம்ஸ், கிளேயை சந்திக்கும் நோக்கத்துடன் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு அவரை நோக்கி நகரத் தொடங்கினார். ஆனால் ஜேம்ஸால் அவரை நெருங்க முடியவில்லை. ஜேம்ஸின் நண்பர்களில் ஒருவர் கிளேயை நோக்கி இவ்வாறு கத்தினார்: “இவன் உங்களைப்போல ஆக விரும்புகிறான். ஆனால் இவனுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.”
கிளே தன்னுடைய சுவரொட்டி ஒன்றைக் கையில் எடுத்துத் தூக்கிக் காட்டினார். பிறகு, அதிலிருந்த ‘ஏ’ என்ற ஆங்கில எழுத்தைச் சுட்டிக்காட்டி, ஜேம்ஸை நோக்கி. “தம்பி, இதை உன்னால் பார்க்க முடிகிறதா? இது ‘ஏ’ என்ற எழுத்து. இனி நீ கற்றுக் கொள்வதற்கு வெறும் இருபத்தைந்து எழுத்துகள் மட்டுமே உள்ளன,” என்று கூறினார்.
‘செயல்முறை’ என்ற வித்தை ஜேம்ஸுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. அடுத்த ஓராண்டுக்குள், அவர் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தார்.
இதிலென்ன பெரிதாக இருக்கிறது?” என்று நீங்கள் கேட்கலாம். கடினமான ஒரு கலையில் விற்பன்னராகத் திகழ்கின்ற ஒருவர், பிறரால் அதைச் சிரமமின்றிக் கற்றுக் கொள்ள முடியும் என்று முழங்குவதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள். இங்கு கவலைகளுக்கு இடமில்லை. ஒவ்வோர் அடியாக எடுத்து வைக்க வேண்டும், அவ்வளவுதான். அதுதான் செயல்முறை.
இதை நம்மாலும் பின்பற்ற முடியும். நம் முன்னால் சிறிய பிரச்சனை வந்து அமர்கின்றபோது, வழக்கம்போல நீங்கள் பதற்றப்பட வேண்டிய தேவையில்லை. முதன்முறையாக நீங்கள் ஒரு சிக்கலான அல்ஜீப்ரா சமன்பாட்டைப் போட முயன்றது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பல வடிவங்களை ஒன்றாகக் கலக்கி நம் முன் வைத்ததுபோல அது நமக்குத் தெரிந்திருக்கும். ஆனால் சிறிது பதற்றத்திற்குப் பிறகு நீங்கள் சுதாரித்துக் கொண்டு, அதைச் சிறிது சிறிதாகப் பிரித்தீர்கள். பிறகு அதற்குப் படிப்படியாகத் தீர்வு கண்டீர்கள். இறுதியில் அதற்கான விடை உங்களுக்குக் கிடைத்தது.
நீங்கள் எதிர்கொள்கின்ற முட்டுக்கட்டைகளுக்கும் அதே வழியைப் பின்பற்றுங்கள். நீங்கள் உங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, உங்களுக்கு முன்னால் அக்கணத்தில் இருக்கின்ற விஷயத்தைக் கையாளுங்கள். பிறகு அதற்கடுத்த விஷயத்தைக் கையாளுங்கள். இறுதியில் நீங்கள் அந்தத் தடையைத் தாண்டிவிடலாம்.
செயல்நடவடிக்கை என்று வருகின்றபோது, ஒழுங்கீனமும் கவனச்சிதறலும் உங்களைக் குழி தோண்டிப் புதைத்துவிடும். ஒழுங்கீனமான மனம் தனக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களை, அதாவது, எது அக்கணத்தில் முக்கியமோ அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாது. வருங்காலத்தைப் பற்றிய எண்ணங்கள் அதன் கவனத்தைச் சிதறடிக்கும்.
வெளியிலிருந்து பார்த்தால் அது தெளிவாகத் தெரிந்தாலும், முக்கியமான சமயங்களில் நாம் அதை மறந்துவிடுகிறோம்.
இக்கணத்தில் நான் உங்களைக் கீழே தள்ளித் தரையோடு தரையாக அழுத்தி வைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அநேகமாக நீங்கள் பதற்றமடையக்கூடும். உங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி நீங்கள் என்னைத் தள்ளிவிடப் பார்ப்பீர்கள். ஆனால் அது பலனளிக்காது. நான் அனுகூலமான நிலையில் இருப்பதால், உங்களை எளிதாக முறியடித்துவிடுவேன். என்னை எதிர்த்துப் போராடி நீங்கள் களைப்படைவீர்கள்.
இது செயல்முறைக்கு நேரெதிரானது.
இதைவிட சுலபமான ஒரு வழி இருக்கிறது. முதலில் நீங்கள் பதற்றப்படக்கூடாது. உங்கள் ஆற்றலை வீணாக்காமல் இருக்க வேண்டும். சிந்திக்காமல் செயல்படுவது போன்ற முட்டாள்தனமான காரியம் எதிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது. இருக்கும் நிலையை மேலும் மோசமாக ஆக்காமல் இருப்பதில் நீங்கள் உங்களுடைய கவனத்தைக் குவிக்க வேண்டும். பிறகு நீங்கள் உங்களுடைய கைகளை விடுவித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் என்னுடைய கையை அல்லது காலைப் பிடிக்க முயற்சிக்கலாம். அல்லது உங்கள் முஷ்டியால் என்னைத் தாக்கி என்னைத் தள்ளிவிடப் பார்க்கலாம்.
இதற்குச் சிறிது நேரம் பிடிக்கலாம். ஆனால் எப்படியும் நீங்கள் என் பிடியிலிருந்து விடுபட்டுவிடுவீர்கள். சிறிது சிறிதாக நீங்கள் உங்களுடைய விடுதலையைப் பெறுவீர்கள். இதுதான் செயல்முறையாகும். ஒருவருடைய பிடியில் மாட்டிக் கொண்டிருப்பது ஒரு நிலைதான். அது வாழ்வின் முடிவல்ல.
நம்முடைய தொழிலைப் பொறுத்தவரை, நாம் கடுமையாக உழைத்து ஒரு புதிய பொருளை உருவாக்குவதன் மூலம் நம்முடைய போட்டியாளர்களை மண்ணைக் கவ்வச் செய்கிறோம். ஆனால், அதன் பிறகு, நாம் மெத்தனமாக இருந்துவிடுகிறோம். ஒரு புத்தகம் எழுதுகின்ற நம்முடைய கனவை, அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதால் நாம் தள்ளிப் போடுகிறோம்.
உண்மையான தீர்வு நம்மால் எட்ட முடியாத உயரத்தில் இருப்பதாக நாம் எண்ணிக் கொள்வதால், நாம் எத்தனை முறை சராசரிகளோடு சமரசம் செய்து கொள்கிறோம்? மாற்றம் பிரம்மாண்டமானதாக இருப்பதால், அது சாத்தியமே இல்லை என்று எவ்வளவு அடிக்கடி நாம் அனுமானித்துக் கொள்கிறோம்?
இவை அனைத்துறைக்கு நீர்க்கப்படக்கூடியவையே. ஏனெனில், செயல்முறைக்கு முன்னால் அவை மண்டியிட்டுவிடும். ஆனால் தீர்வு தொடர்பான அனைத்து விஷயங்களும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும் என்று நாம் தவறாக அனுமானித்துக் கொள்கிறோம். அந்த எண்ணம் தோன்றியவுடனேயே, நாம் இறங்கியுள்ள காரியத்திலிருந்து நாம் பின்வாங்கிவிடுகிறோம்.
நாம் செய்கின்ற விஷயங்களுக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக நாம் இலக்குகளை விரும்புகிறோம். நாம் எதை நோக்கிப் போகிறோம் என்பது குறித்தத் தெளிவு நம்மிடம் இருக்கின்றபோது, நம் வழியில் எதிர்ப்படுகின்ற முட்டுக்கட்டைகள் சிறியவையாகவும், எளிதில் சமாளிக்கப்படக்கூடியவையாகவும் நமக்குத் தோன்றுகின்றன. அப்படி இல்லாதிருக்கும்போது, சிறிய முட்டுக்கட்டைகள்கூட பூதாகரமாகத் தெரிகின்றன. முட்டுக்கட்டைகள் உண்மையில் எந்த அளவில் இருக்கின்றனவோ, துல்லியமாக அதே அளவில் அவற்றைப் பார்க்க இலக்குகள் உதவுகின்றன.
நாம் கவனச்சிதறல்களுக்கு ஆளாகின்றபோது, செயல்முறை நம் உதவிக்கு வருகிறது. அது நமக்கு அதிகாரத்துடன் அறிவுரை தருகிறது. உங்கள் முன்னாலிருக்கின்ற வேலையில் நீங்கள் உடனடியாக உங்களுடைய கவனத்தைக் குவிக்க அது உங்களை உந்தித் தள்ளுகிறது.
நம்முடைய செயல்களுக்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்ள நமக்கு ஆணையிடுகின்ற அந்தக் குரல்தான் செயல்முறை. உடனடியாகச் செயல்நடவடிக்கையில் இறங்க அது நம்மைக் கட்டாயப்படுத்துகிறது.
ஒரு நேரத்திற்கு ஒன்று என்ற கணக்கில் படிப்படியாக முன்னே செல்லுங்கள். பயத்தைத் தூக்கியெறிந்துவிட்டு அங்கு செயல்முறையை அமர வையுங்கள். அதைச் சார்ந்திருங்கள். அதன்மீது நம்பிக்கை வையுங்கள்.
சிலபிரச்சனைகள் மற்றவற்றைவிடக் கடினமானவையாக இருக்கலாம். எனவே, நீங்கள் அவசரப்பட வேண்டாம். தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
செயல்முறை என்பது சரியான செயல்களை செய்வதைப் பற்றியது. இக்கணத்தில் அதைச் செய்வதை குறித்தது. பின்னால் என்னவாகுமோ என்று கவலைப்படுவது அல்ல அது.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – மீண்டும் மீண்டும் செய்யுங்கள் – ரயன் ஹாலிடே


